Wednesday, June 15, 2011

இடைவெளியை கடக்க ஒரு சிறு இசைச் சுற்று ..

ஆர்.வீ.எஸ்  அவர்களின்  இசைஞானி  பதிவும் ,  அப்பாதுரை  அவர்களின் திருவாசக  விருப்பமும்    தூண்டிவிட,  மனம்   நேராக  திருவாசக பாடல்களுக்கு  மறுபடியும் கொண்டுபோய் விட்டது. திருவாசகத்தை    உள் புக வைக்க இனிய வழி செய்த இசைஞானிக்கு புயங்க பெருமானின் அருள் என்றும் உண்டு….
இந்த   ஆல்பம்  வெளி வந்து சற்று காலம் ஆனாலும்  சலிப்பில்லா இசைப் பயணமாகவே  தொடர்ந்து வருகிறது.. தட்டினாலும் , ஊதினாலும் , இழுத்தாலும்  வரும் இசைக்கு  எத்தனை  எத்தனை  நெறிமுறைகள் ... கோட்பாடுகள் ....ஒழுங்குகள் ....ராஜா அதை ஓரு இறை  வழிபாடாகவே  கடை பிடிக்கிறார்.... இதை சிம்பனி  என்றும்  அரட்டோரியா  என்றும்  இசை விற்பன்னர்கள்  வாதித்து கொள்ளட்டும் .. என்னை போன்ற  பாமரனுக்கு காதுக்கும்  மனதுக்கும்  இதமான  ஓசை யாக  இந்த  இசை  அமைந்துள்ளது ... இதில் இரண்டு பாடல்  கேட்போம் ...

முதல்  பாடலாக    பூவார் சென்னி மன்னன்  .....     ஓரு விடுதலை வேட்கையோடு  கேட்போர் அனைவரையும்  யாத்திரையாக கோஷம் முழங்க   அழைத்து செல்லும்  பாடல் '' நிற்பார் நிற்க  நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே  …


தன் மகள் பவதாரிணியோடு  சேர்ந்து  பாடிய பாடல்... தும்பியை தூது விடும்    பாடல்  . பவதாரிணி சினிமா பாட்டுக்களை விட சிரத்தை எடுத்து பாடிய பாடல். வெண்பா பிரியர்களுக்கு நல்ல தமிழ்த்தீனி. திருவாசகத்தில் தும்பித்தூது வெண்பாக்கள் இருபது.  அந்த  வெண்பாக்களில் 10 க்கு மட்டும் மெட்டமைத்திருக்கிறார்.  அந்த வெண்பாக்கள் உள் சென்ற மகிழ்வில் 20க்கும் மெட்டமைத்து பாடியிருக்கலாமே  எனும் ஏக்கம் தோன்றும்…. இரண்டு வெண்பா கிழே

நானார் என் உள்ளமார் ஞானங்களார்  என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை  ஆண்டிலனேல்  மதிமயங்கி 
ஊனாருடை தலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றுதாய் கோதும்பி……..

உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களி வந்த வான் கருணை
வெள்ளப் பிரான் என் பிரான் என்னை வேறே ஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றுதாய் கோதும்பி……..

 


<


வந்தது வந்தோம்..இன்னமும் கொஞ்சம் இசை நதியில் நீந்தலாம் என்று
அப்படியே  இசை ஞானியின் எனது அனைத்துக்கால விருப்ப பாடலான  காற்றில் எந்தன் கீதம்  யூட்டியில் தேடியபொழுது  கிடைத்தது இந்த உற்சாகக் கோப்பு.. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குமுன் ஜானி படத்தில் வரும் ஜானகி அம்மாவின் குரலில் ஸ்ரீதேவி யின் மேடைப் பாட்டு.  நேர்முகமாக அதே ராஜா இசையமைக்க பாடிய ஷ்ரேயா கோஷலின் வியக்கவைக்கும் குரலில் அமைந்த பாட்டு..  பிசகாத உச்சரிப்பு…  முன்றுவகை ல,ள,ழ க்களும் மிகச்  சரியாக வந்தது
    அலை போ ……  அன்புள்ள நெஞ்சை  ……  வாழும் காம்
தமிழர்களே தள்ளாடும் பொழுது, இந்திக்காரரிடம் இவ்வளவு அழகான எழுத்து சுத்தமாக அமைந்த உச்சரிப்பு சுத்தம் நிச்சயம் மதி மயக்கும்..
உச்சரிப்பு சொல்லி கொடுத்தவர்க்கும் ...அதை  சிரத்தையாக கேட்டு பாடியவர்க்கும்   ஓரு பெரிய ''ஓ '' போட வைக்கிறது .



உச்சரிப்பில் ஆழ்ந்து இன்னோரு பாட்டையும் கேட்க வைத்தது.. இது இசைப்புயலின்  ராக அமைப்பில் இசைத்துணையில்லாமல் ஒரு நாலுவரி அதே கோஷலிடமிருந்து




இப்பதிவின் இசைப் பயணத்தை சிங்கார வேலனை அழைத்து  நிறைவுசெய்யலாம் ...இந்த பாட்டை ஆயிரம் முறை கேட்டாலும் இன்னமும் ஒரு முறை தாராளமாக கேட்கலாம்...  கேட்டுட்டு சொல்லுங்க...






55 comments:

RVS said...

கேட்டாச்சு.. பாட்டுக் கேட்க நான் தான் முதல் ஆளா? ;-))

பத்மநாபன் said...

உங்க சுறுசுறுப்புக்கு நன்றி ஆர்.வி.எஸ்.. வாசிப்பிலிருந்து பதிவுக்கு ஒரு ஜம்ப் செய்தேன் ..

ஸ்ரீராம். said...

மனதை வருடும் இசையை வைத்து இடைவெளியைச் சுருக்கி விட்டீர்கள். இனிமையான குரல் ஷ்ரேயா கோஷலுக்கு.

பத்மநாபன் said...

நன்றி ஸ்ரீ ... கோஷல் உச்சரிப்புக்கு எடுத்த ஈடுபாடு வியக்க வைக்கிறது...

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான இசை வெள்ளம் தந்ததால் இடைவெளியை மன்னித்தோம்... அடுத்த சுவையான பகிர்வுக்காய் காத்திருக்கிறோம் பத்துஜி....

பத்மநாபன் said...

நன்றி வெங்கட்ஜி ... நேர மேலாண்மை செய்து அடிக்கடி பதிவு போடும் வித்தையை உங்களிடமும் ம .கு . மைனரிடமும் ஓரு பயிலரங்கம் நடத்த சொல்லி கற்றுக் கொள்ள வேண்டும் ... வாழ்த்துக்கள் ...

RVS said...

இந்தியிலிருந்து தமிழுக்கு வந்த பாடகிகளில்.... ஸ்ரேயா கோஷல் உச்சரிப்பு+குரல் இனிமை இரண்டும் வாய்த்த அற்புதமான பாடகி..
பம்ப்ளி கன்னம் சாதனா சர்க்கம்.. குரலினிது... ஆனால் உச்சரிப்பு ஆங்காங்கே பிசிறடிக்கும்.. அல்லா ரக்கா ரஹ்மான் ஈடுகட்டுவிடுவார்... ;-))

ADHI VENKAT said...

நல்ல இசை விருந்து. அல்காவின் குரல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். பகிர்வுக்கு நன்றிங்க.

பத்மநாபன் said...

மீண்டும் நன்றி ஆர்.வி.எஸ்..மொழி பாகுபாடில்லாமல் சுருதி சுத்தமாக இருப்பதால் தேசிய விருதுகளாக வாங்கி அடுக்கிக் கொண்டிருக்கிறார் கோஷல்..

பத்மநாபன் said...

நன்றி கோவை சகோ.. நிங்களும் அல்காவின் ரசிகரா.. சின்ன வயதில் இசையில் எவ்வளவு நேர்த்தி ..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எதை கேக்கறது எதை விடறதுன்னு தெரியலங்க... அடிக்கடி பதிவு போடுங்களேன் எங்களுக்கும் அடிக்கடி இப்படி விருந்து கிடைக்குமே... இளையராஜா அவர்கள் மில்லேனியம் கொடுத்த வரம்'னா அல்கா அஜித் விஜய் டிவி கொடுத்த வரம்னு சொல்லணும்... கண்டிப்பா பெரிய இடத்துக்கு வரும் அந்த பொண்ணு...

பத்மநாபன் said...

நன்றி அப்பாவி தங்கைமணி .... சரியா சொன்னிங்க சலிப்பில்லாமல் கேட்க வைப்பதில் ராஜா ராஜாதான் ..
அல்கா போன்றவர்கள் இன்றைய குழந்தைகளுக்கு முன் மாதிரியாக எடுத்த காரியத்தில் காட்டும் ஈடுபாடு.

அன்புடன் மலிக்கா said...

அருமையான இசை தொகுப்பு.

பத்மநாபன் said...

நன்றி அன்புடன் மலிக்கா...

அப்பாதுரை said...

இளையராஜாவைப் பற்றி அறியாதவை. புதுப் பரிமாணங்கள். திருவாசகம் நன்றாகவே இருக்கிறது. சென்னை லிஸ்டில் சேர்த்திருக்கிறேன். அறிமுகத்துக்கு நன்றி.

பத்மநாபன் said...

மிக்க நன்றி அப்பாதுரை.. எப்படி இவ்வளவு நாள் உங்கள் காதில் இந்த இசை விழாமல் இருந்தது .. எம்.எஸ் .வி பற்றும் ஒரு காரணமாக இருக்கலாம்.. நிங்க சொன்னமாதிரி இது அடுத்த பரிமாணம்.. அருட்பாவும் வாசகமும் இப்படி இசையோடு கிடைத்தால் அவை நிச்சயம் நம்முள் ஆழம் போகும்..( பாட்டுக் கேட்டே வளர்ந்து விட்டோம் ) என் மக்களுக்கு ரஹ்மானின் சுப்ரபாதம் புது கம்போஸிங் பிடிக்கிறது

அப்பாதுரை said...

எம்எஸ்வி என்றில்லை, இளையராஜாவின் உச்சங்களை நான் காண வாய்ப்பே இல்லாது போய்விட்டது. 81க்குப் பிறகு தமிழ்நாடு/இந்தியா என்ற அளவில் ஆர்வம் குறைந்ததும், உள்ளேயும் வெளியேயும் புலம்பெயர்ந்ததும் சில காரணங்கள். இளையராஜா என்றால் டப்பாங்குத்து என்ற stereotype எண்ணமும் கூட. அவ்வப்போது சென்னை வந்த போதும் இளையராஜா பக்கம் செவி வைத்ததில்லை :). தானாக என் காதில் விழுந்தால் தான் உண்டு! என் நட்பும் உறவும் சில சமயம் டேப்/சிடி என்று தருவார்கள். பத்து நொடிகள் கேட்கும் பொழுதே பொறுமையிழந்து விடுவேன்...

திருவாசகம் கூட இளையராஜாவின் குரலில் அத்தனை எடுபடவில்லை என்பதே என் எண்ணம். கணீர் என்ற குரலில்லாதது குறை. சொல்லின் வீரம் வெளிவரவில்லை.

இருந்தாலும், இது தமிழுக்கு இரா செய்திருக்கும் உண்மையான தொண்டு. எம்எஸ்வி போன்றவர்கள் காசு சேர்த்தார்கள்/செலவழித்தார்களே தவிர காலம் கடந்து நிற்க தமிழிலக்கியத்துக்கு ஒன்றும் செய்யவில்லை. அந்த ஒரு காரணத்துக்காகவே, இளையராஜாவின் இந்த முயற்சி வணக்கத்துக்குரியது என்று நினைக்கிறேன்.

மறுபடியும் உங்களுக்கு நன்றி.

சிவகுமாரன் said...

புற்றில் வாழ் அரவம் அஞ்சேன் - மிக அழகான எனக்கு மிகவும் பிடித்த இசைக் கோர்ப்பு' ஆனால் சிவபுராணத்துக்கு ராஜாவின் இசை என்னால் ஏற்க முடியவில்லை .Western புகுத்தியது காதுக்கு நாராசமாக இருந்தது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும் - நான் ராஜாவின் ரசிகனாக இருந்த போதும்.

Matangi Mawley said...

ஆஹா!
Brilliant collection!!!

Esp. Shreya Ghoshal voice!!! அந்த கால 'sa re ga ma' reality show -ல பாத்தத நினைவு படுத்திட்டீங்க!

Super!

பத்மநாபன் said...

கருத்துக்கு நன்றி அப்பாதுரை.. பொதுவாக இளையராஜா மெல்லிய குரலாளர்தான் குறிப்பாக இந்த திருவாசகத்தொகுப்பை பொருத்தவரை வீரத்தை விட பாவம் (ba) முக்கிய இடம் பெறுகிறது அதை செவ்வனே செய்ததாக படுகிறது...

மெல்லிசை மன்னரின் இசை தெவிட்டா விட்டாலும் தொடர்ந்து கேட்டு வந்தவர்களுக்கு மாற்று தேவைப்பட்டது அதுக்கு தக்க மாதிரி படங்களும் அமைய ( அன்னக் கிளி பதினாறு வயதினிலே) ட்ரெண்ட் மாத்தினார் ராஜா அது 80-95ல் கோலோச்சியது ..

பத்மநாபன் said...

கருத்துக்கு நன்றி சிவா... இறங்கினால் டப்பாங்குத்து ஏறினால் வெஸ்டெர்ன் என்ன செய்வார் ராஜா.

என்னதான் வெஸ்டெர்ன் என்று சொன்னாலும் வார்த்தை எதையும் சிதைக்கவில்லையே சிவா.. இந்த இசைப்படுத்தல் நிச்சயம் திருவாசகத்துக்கு புத்துயிர் கொடுத்தது / கொடுக்கும்..

’’புற்றில் வாழ் அரவன் அஞ்சேன் ‘’ பாட்டைக் குறிப்பிட்டதுக்கு நன்றி.. பொதுவாக இந்த தொகுப்பில் மேற்கத்திய இசையின் உபகரணங்களை இரைச்சில்லாமல் பயன்படுத்தி இருப்பார் ராஜா...

பத்மநாபன் said...

நன்றி மாதங்கி... ஷ்ரேயா மிக சின்னவயதில் இருந்து ஈடுபாட்டோடு இசை பயிற்சி செய்தது தெளிவாக தெரிகிறது...

மோகன்ஜி said...

என் பிரிய பத்மநாபன் இரு தினங்களுக்கு முன் ஒரு பின்னூட்டமிட்டேருந்தேன்.
இன்னமும் சில வழிகளிலும் இட்டிருந்தேன்... இன்று தான் பார்க்கிறேன் அவற்றைக் காணோம்.. வலை விழுங்கி விட்டதுபோலும்..

just know...லயித்துக் கேட்டேன்..அன்று.
குற்றவுணர்வோடுண்டும் இன்று.

பத்மநாபன் said...

லயித்ததற்கு நன்றி மோகன்ஜி ... சில சமயம் சந்தடியில்லாமல் பின்னூட்டங்களை முழுங்கி விடுகிறது .. உண்மையில் நம்மையெல்லாம் இணைக்கும் ஓயா பணியில் பிளாக்கர் பசியில் புசித்திருக்கலாம் ... விடாமல் தட்டியதற்கு நன்றி ஜி ..

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

பவதாரிணி,இசைஞானி, ஷ்ரேயா கோஷல், அல்கா .....அத்தனை குரல்களும் தேன்...

பகிர்விற்கு நன்றி.

பத்மநாபன் said...

மிக்க நன்றி எல்லென் சார் ....

இராஜராஜேஸ்வரி said...

உண்மைதான் தமிழ் தீனி தந்த்தற்குப் பாராட்டுக்கள்.

பத்மநாபன் said...

பாட்டோடு தமிழையும் ரசித்தற்கு நன்றி ராஜராஜேஸ்வரி...

வலச்சர சிறப்பாசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.. எனது வலைப்பூவின் அறிமுகத்துக்கு மிக்க நன்றி...

ரிஷபன் said...

இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்தேன்

பத்மநாபன் said...

மிக்க நன்றி ரிஷபன் சார் .....சுடர் கொடியை அவ்வப்பொழுது படித்து வருகிறேன் அதற்கும் நன்றி ....

குணசேகரன்... said...

.இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். இளைய ராஜா திருவாசக இசையைக் கேட்க. நன்றி.

http://zenguna.blogspot.com

பத்மநாபன் said...

வருகைக்கு மிக்க நன்றி குணா... இசைஞானியின் திருவாசகம் யூ டுயுபில் கிடைக்கிறது...

உங்கள் வலைபூவில் படங்களாக போட்டுத்தாக்குகிறீர்கள்..விரைவில் வருகிறேன்...

Admin said...

நல்ல பகிர்வு... பகிர்வுக்க நன்றிகள்.

பத்மநாபன் said...

முதல் வருகைக்கு நன்றி சந்ரு... வாழ்த்துகள்...

சாய்ராம் கோபாலன் said...

//அப்பாதுரை said... காலம் கடந்து நிற்க தமிழிலக்கியத்துக்கு ஒன்றும் செய்யவில்லை. அந்த ஒரு காரணத்துக்காகவே, இளையராஜாவின் இந்த முயற்சி வணக்கத்துக்குரியது என்று நினைக்கிறேன்.//

உண்மை அப்பாதுரை. முயற்சிக்கு நிச்சியம் பாராட்டவேண்டும்

சாய்ராம் கோபாலன் said...

//இதை சிம்பனி என்றும் அரட்டோரியா என்றும் இசை விற்பன்னர்கள் வாதித்து கொள்ளட்டும் .. என்னை போன்ற பாமரனுக்கு காதுக்கும் மனதுக்கும் இதமான ஓசை யாக இந்த இசை அமைந்துள்ளது ..//

நானும் உங்கள் கட்சி தான். இதில் என்ன இருக்கு பத்மநாபன்

ம.தி.சுதா said...

மிகவும் ரசனையான பாடல் பதிவகள் நன்றி..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

பத்மநாபன் said...

நன்றி சாய் ... திருவாசகப்பாடல்கள், இம்மாதிரி இசைவடிவம் கிடைத்தவுடன் நமக்கும் , பின்வருபர்களுக்கும் எளிதில் உள் நுழையும் ....

பத்மநாபன் said...

முதல் வருகைக்கு மிக்க நன்றி மதி சுதா .... மதியோடை மதி நிறைந்த ஓடையாக இருக்கிறது .....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பத்துஜி!

என் விருப்பமான தொகுப்பில் இளையராஜாவின் திருவாசகத்துக்கு முக்கிய இடம் உண்டு.

ஜான் பி ஹிக்கின்ஸ் கர்நாடக சங்கீதம் பாடும்போது புதிதாய்க் கேட்க வினோதமாய் இருந்தது.ஆனால் அவருக்கென்று தனி இடம் கொடுத்தது கர்நாடக சங்கீதம்.

அதேபோல் கோவில்களில் கணீரென்று கேட்டுப் பழகிய காதுகளுக்கு சிம்பனியின் ஆர்கெஸ்ட்ரைசேஷன் கட்டுப்பாடுகளுக்குள் திருவாசகத்தை நுழைத்தது பெரிய சாதனைதான்.

ஸ்ரேயா கோஷலின் தமிழும் குரலும் வடக்கு நமக்களித்த கொடை.எனக்குத் தெரிந்து ஒழுங்கான உச்சரிப்புடன் லதா-ஆஷா-சாதனா சர்கம் போல் தேவையில்லாமல் கொஞ்சாமல் பாடும் முதல் பாடகர்.

தாமதமான பின்னூட்டத்துக்கு வருந்துகிறேன்.

பத்மநாபன் said...

ரசிப்போடு ரசித்தமைக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி..

என் வேகத்துக்கு உங்கள் பின்னூட்டம் தாமதம் ஒன்றுமில்லை..

விவேகமும் வேகமும் கூடிய பதிவர் எனது பட்டியலில் கூடியது மகிழ்ச்சி..

( நான்..நீங்கள்.. ஷாருக் கான் எல்லாம் ஒரே செட் என்பது இன்னோரு மகிழ்ச்சி )

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பத்துஜி. இந்த ஷாருக்கான் புதிர் மெல்ல அவிழத் துவங்கி மறுபடியும் முடிச்சு விழுந்து... புதிரைக் கொஞ்சம் விடுவியுங்களேன்.பொறுமையில்லாத ஜன்மம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

புரிந்துகொண்டேன். 1965.

பத்மநாபன் said...

பிடிச்சிட்டிங்க சுந்தர்ஜி...அகவை கூட கூட... குச்..குச்..ஹோட ஹை... ஒம் ஷாந்தி ஓம்... பாடிக்க வேண்டியது தான்

மனோ சாமிநாதன் said...

அருமையான பாடல்க‌ளின் அபாரமான தொகுப்பிற்கு இனிய நன்றி!

'சிங்கார வேலனே'யில் ஜானகியை சமன் செய்து அருமையாகப் பாடுகிற ஷ்ரேயாவின் குரலில், ' காற்றில் எந்தன் கீதம்' பாடலில் சற்று நளினம் குறைவு ஜானகியை ஒப்பிடும்போது! தனிப்பட்ட முறையில் ஷ்ரேயா மிக அருமையான பாடகி தான்!

பத்மநாபன் said...

மிக்க நன்றி மனோ மேடம்... ஜானகியம்மாவின் ஈடாக யாரையும் சொல்ல முடியாது... அதை எடுத்து பாடுவதும் தமிழ் உச்சரிப்பு சுத்தமும் வடக்கத்து பாடகரிடம் பாராட்டுக்குரியது..

ஸ்ரீராம். said...

மறுபடி ஆச்சு ஒன்றரை மாசம்...அடுத்தது..?!!

பத்மநாபன் said...

நன்றி ஸ்ரீ .... இடம் பொருள் நேரம் ஏவல்(?) கூடி வர விரைவில் பதிவு .....

இராஜராஜேஸ்வரி said...

இசை நதியில் நீந்தலாம் அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி ராஜ.ராஜி மேம்...ஒரு செய்தி இவ்வருடம் ஷ்ரேயா கோஷலுக்கு விஜய் டிவியின் சிறந்த பாடகி விருது...

M.R said...

அருமையான கலெக்சன் நண்பரே

பாடல்கள் அருமை -கேட்ட போது

மனதில் இனிமை .

பகிர்வுக்கு நன்றி நண்பரே

M.R said...

தொடரவும் செய்துள்ளேன் .இனி தொடர்ந்து வருகிறேன் நண்பரே

பத்மநாபன் said...

முதல் அன்பு வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி எம்.ஆர்....

மாலதி said...

அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

பத்மநாபன் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மாலதி....

Powered By Blogger