Saturday, September 11, 2010

பாரதி....பாடல்களோடு பல நினைவுகள்



ஒளி படைத்த கண்ணினாய்  வா.வா. வா..உறுதி கொண்ட நெஞ்சினாய் வா. வா, வா... 
வா. வா. வா.  என முன்று `வா` க்களில் ஈர்க்கப்பட்ட குழந்தை கவிஞன். நான் பெரிதாக பெரிதாக பாரதியின் பிம்பமும் உயர்ந்து கொண்டே வந்தது
ஏழாம் வகுப்பில் படிக்கும் பொழுது `சுந்தர தெலுங்கினிற் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்`` என்று சிந்துநதியின்மிசை பாட்டை ஒன்பதாம் வகுப்பு அண்ணா ஒருவர்  பள்ளி பாட்டு போட்டியில் பாடி பரிசு பெற்றதை அடுத்து , நாங்களும் பெரிதாக அர்த்தம் தெரியாமல் பாடி வருவோம் ``சேர நன்னாட்டிளம் பெண்களுடனே `` சின்ன வயதில் இந்த வரியின் மீது ஈர்ப்புக்கிற்கு இளம்பெண்களை விட நாங்கள் சேர நன் நாட்டில் இருந்தது தான் காரணம்  . சேர நாட்டில் இருப்பதற்கான சாட்சியாக  அப்போதைக்கு எங்கள் அறிவிற்கு எட்டியது  கோவையில் ஓடிய  சேரன் போக்குவரத்து கழக பேருந்துகள் தான்


காக்கை சிறகினிலே நந்தலாலா...பாட்டில் நந்தலாலா வின் ஈர்ப்புநின்னை தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா வரை பாட வைக்கும்

வறுமையின் நிறம் சிவப்பு  படத்தில் கமல்  அங்கங்கு  பாரதியின் வரிகளை சொல்வது  பிடிக்கும் .அதில்  வெள்ளை நிறத்திலொரு பூனை பாட்டை கமல் அழுத்தி சொல்வது மிக பிடிக்கும். படத்தில் கடைசியில்  நல்லதோர் வீணை  செய்தே பாட்டு உருக்கத்தை வரவைக்கும் . அதில் விசையுறு பந்தினைப்போல்  வரி எப்பொழுது கேட்டாலும் புல்லரிக்க வைக்கும்.

பொள்ளாச்சி  பாலிடெக் காலங்களில் , பாரதி பற்றி படம் எடுத்தால் வேஷ பொருத்தம்  கமலுக்கா, ரஜினிக்கா என விவாதம் சூடு பறக்கும். என் பெஞ்சு நண்பன் கிறிஸ்டி,  ரஜினியை சிலாகிப்பான். நான் கமல் தான் பொருத்தம் என்பேன் . கிறிஸ்டி நன்றாக வரைவான் . நகாசு வேலைகள் செய்து கனப்பொருத்தமாக பாரதிக்குள் ரஜினியை பொருத்தியிருந்தான் .


கோவை ஜிசிடி முதலில் சென்னை பல்கலைகழக கட்டுப்பாட்டில் இப்போழுது அண்ணாபல்கலைக்கு மாறியுள்ளது நடுவில் நான் பயின்ற பொழுது பாரதியார் பல்கலைகழகத்தில் இருந்து, அதில் பட்டம் பெற்றது எனக்குள் இருக்கும் பாரதிசார்பு மகிழ்வு.


அச்சமில்லை  அச்சமில்லை  பாடலில் , இச்சகத்துமாந்தர் அனைவரும், துச்சமாக மதிப்போர்,கச்சணிந்த மாதர், நச்சளிக்கும் நண்பர், உச்சிமீது இடியும் வானம்  இப்படி பாரதியின் பட்டியல் சற்று வித்தியாசமாக இருந்தாலும்,பாடல் மனதிற்கு ஒரு தைரியத்தை உண்டாக்கும்.


கமலின் மகாநதி படம் வெளிவந்ததை தொடர்ந்து,தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி  பாடல் இன்று இளைஞர்களுக்கு தங்களை சுற்றிலும் நடக்கும் தீமைகளை கண்டு வீழ்வேனென்று நினைத்தாயோ என்று வெகுள உத்வேகம் அளித்துக்கொண்டிருக்கிறது.


எனது செல்லம்மாள், பாட்டுப்போட்டிக்காக, மகனுக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது  நிற்பதுவே  நடப்பதுவே பாட்டை பயிற்சி கொடுத்தபொழுது, காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ போன்ற ஏற்ற இறக்க வரிகளோடு அப்பாடல் நன்றாக பதிந்தது.


எண்ணிய முடிதல் வேண்டும்..  ஒரு பிரார்த்தனை பாடலாகவே மனதுள் வைத்துள்ளேன்.


தண்ணிர் விட்டா வளர்த்தோம், சர்வேசா , கண்ணீரால் காத்தோம்  கருகத்திரூளோமா என்று மேற்கோள் காட்டி உரையாற்றிய ஜனாதிபதி வெங்கட்ராமன் முதல்  அடிக்கடி பாரதியின் பாடல் வரிகளை நினவு படுத்தி உரையாற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் வரையிலும் பாரதியின் பாட்டுவரிகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் பொழுதெல்லாம் ஒரு இனிமையான உணர்வு வரும்.


பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம் பாடல் சமிப காலத்தில் பலரால் பாராளுமன்றத்தில் மகளீர் மசோதா உரையில் ஒலிக்க கேட்கிறோம்...


பக்தி, வீரம், விடுதலை,காதல்,இயற்கை  என பலதலைப்புகளில்  பாடல் இயற்றிய பாரதி தனது பார்வையை, முழுமையான ஞானத்திற்கு  கொண்டு சென்றான். தனது முப்பத்தி ஒன்பதாம் வயதில் அவசரமாக இயற்கையிடம் செல்லாமல்,  நீள் ஆயுள் பெற்றிருந்தால்  இப்போதிருக்கும் போலி ஆன்மிகத்தையும் போலி பகுத்தறிவு வாதங்களையும் தன் எழுத்து திறத்தால் ஒழித்து உதறியிருப்பான், 


காக்கை குருவி யெங்கள் ஜாதி..நீள் கடலும் மலையு மெங்கள் கூட்டம் : நோக்குந்திசையெலாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்கக்களி யாட்டம். மேம்போக்காக பார்த்தால் இப்பாடல் ஜாதி, கூட்டம் , மகிழ்வு என இருக்கும் . ஆனால் பாரதி ஞான அறிவு நிரம்பியவன். ஆழமான தத்துவத்தை வைக்கிறான்..இதை தத்துவஞானி வேதாத்திரி அவர்களால் சிறப்பாக பார்க்கப்பட்டது... நீ , நான் என்பதெல்லாம் அணுக்கூட்டம் அன்றி வேறில்லை  அதுபோல கடலும் மலையும் அணுக்கூட்டம் தான்.  நமக்கும் உடல், வலி, உணர்வு இருக்கிறது, பறவை விலங்குகளுக்கும் அவ்வுணர்வுகள் இருக்கிறது.எனவே  எல்லாம் ஒரு ஜாதிதான். இப்படி பார்க்க ஆரம்பித்துவிட்டால் வெறுப்பின்றி மகிழ்வோடு இருக்கலாம்.



நாங்கள் அடிக்கடி வீட்டில் கேட்கும் பாடல், நெஞ்சுக்கு நீதியும், தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணிப்பூண். பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ.  



இன்று பாரதியின் நினவு நாள் ,நினைவு போற்றுவோம்..

வாழ்க தமிழ்..வாழ்க பாரதி....
Powered By Blogger