Friday, December 31, 2010

ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                 இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

மகிழ்ச்சியான  2011  அனைவர்க்கும் அமைய நல்வாழ்த்துக்கள்...

ஆனந்தவாசிப்பும் தனது  ஒரு ஆண்டு நிறைவை முடித்து, இரண்டாம் ஆண்டில் கால் வைக்கிறது.. பதிவுகளை வாசித்து ரசிக்கும்,  ஆனந்த வாசிப்பு தத்தி தத்தி  சில பதிவுகளையும் பதித்தது.

இவ்வலைப்பூவை அன்போடு ஏற்று , வருகை புரிந்து  நேரம் ஒதுக்கி கருத்துரைகள் இட்ட அன்பான உள்ளங்களுக்கு மிகுந்த நன்றி ....
.,வருகை புரிந்து , நேரமின்மையால் வாசித்து மட்டும் சென்ற இனிய இதயங்களுக்கு  மிகுந்த நன்றி....

இந்த ஆண்டிலும் தொடரும் இனிய உறவுகளுக்கும் , வரும் புதிய நட்புகளுக்கும்  மிகுந்த மிகுந்த நன்றி......


ஒரு ஆனந்தமான பாடல் ...........


 

Saturday, December 11, 2010

பாரதிஜெயந்தி

                                                  


கவியரசன் பாரதி இந்த பூமியில் பிறந்த நாள் இன்று.. அந்த சக்திதாசனை, ஞானத்தை , பக்தியை, விடுதலை வேட்கையை, காதலை , யாமறிந்த தமிழில் வற்றாக்கவிகளாய் கொடுத்த கவிப்பேரரசனை  மீண்டும் நினைவு பதிவாக்குவதில் மகிழ்வு...

பாரதி பிரபஞ்சத்தோடு கலந்த நாள் நினைவு போற்றி ஒரு பதிவு  ஆனந்தமாக வாசிக்கப்பட்டது...
இன்று யுக கவியின் நினைவாக எழுத்தில் சில கவிகளும்,இனிய இசை பாட்டாக மாறிய சில கவிகளும்......

மெய்ப்பொருள்:
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாதிசையிலுமோ ரெல்லையில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியம்செய்தருள் நாயகன்
சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி.....
சூரியன்
கடலின் மீது கதிர்களை வீசி
கடுகி வான்மிசை எறுதி யையா
படரும் வானோளி இன்பத்தை கண்டு
பாட்டு பாடி மகிழ்வன புட்கள்
உடல் பரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொரு நுண்டுளியும் விழியாகச்
சுடரு நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே........


தான்
தேடி ச்சோறுநிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடி துண்பமிக வுழன்று – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் –பல
வேடிக்கை மனிதரைப் போலே-  நான்
வீழ் வே நென்று நினைத்தாயோ..


இனி பாரதியோடு இசைப் பயணம்...


நித்யஸ்ரீ அவர்கள் பாடிய சின்னஞ்சிறு கிளியே பாடல்..... உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரங்கொட்டுதடீ....
பதிவர் நாஞ்சிலார் அவரது சமிப பதிவில், ஜேசுதாஸ் அவர்கள் தெய்வீகக்குரலில் நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி பாடல் போட்டிருந்தார். இனிமையாக இருந்தது . அதே பாடல்  வேறோரு இசை நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்டு இங்கே கிழே..... இதுவும் வித்யாசமாகவும் இனிமையாகவும் இருந்தது ...கேட்டுபாருங்க உற்சாகம் உத்திரவாதம்.. கண்பாராயோ....வந்து சேராயோ....அடுத்து மஹாநதி ஷோபனாவின் குரலில் தீராத விளையாட்டுப்பிள்ளை..இந்த நிகழ்ச்சியில் முக்கிய எழுத்தாளர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் குறிப்பாக சுஜாதா அவர்களும் ........என்னப்பன் என்னய்யன் என்றால் அதனை எச்சிற்படுத்தி கடித்து கொடுப்பான்..

பாரதியும் தமிழும் யுகம் யுகமாய் இருக்கப்போகிறது..... அதில் பக்கத்து கொஞ்ச காலத்திற்கு நாமும் இருக்கிறோம் ...  இருந்திருக்கிறோம் .

Monday, November 29, 2010

விடுப்பில்....வீட்டில்.....

கோவையில்  குடியிருந்த பொழுது பக்கத்து வீட்டு ஆறு வயது குட்டிப்பெண் யாழினி, எங்களிடம் ஒரு நாள் தன் மழலையில் ஏற்ற இறக்கமாக `` எங்க வீட்டுல எங்க அப்பா, அம்மா என்ன்ன சொல்றாங்களோ  அதை அப்ப்ப்படியே கேட்பாங்க...   ``அங்கிள்  எப்படின்னு தெரியல ```  இதை கேட்டவுடன் வெடிச்சிரிப்பு சிரித்தோம்.... இப்போழுது அவள் கணிப்பொறியாளினியாக சியாட்டில் செல்லவோ, கைதேர்ந்த மருத்துவராக மியாட்டிலில் பணி புரியவோ படித்துக்கொண்டிருப்பாள்...

அன்று அவள் சொன்னதை,சென்னையில் இந்த விடுப்பில் அப்படியே (இரண்டு முன்று `ப்` சேர்த்தே )கடைபிடித்தேன் .... காலையில் சுப்ரபாதம்  ஆரம்பித்து இரவு சூப்பர் சிங்கர் வரை  தங்கமணி சொல்வது தான் எல்லாம்.....

விஜய்யில் பக்தி பாடல்களோடு ஆரம்பிக்கும் கூடவே பக்தி சொற்பொழிவுகள் , அப்புறம் கலைஞரில் ரேவதி சங்கரன் அவர்களின்  வாழ்க வளமுடன் கேட்டு, மராத்தி சேனலில் மஹாலட்சுமி ஆரத்தி, சாய்நாதரின் ஆரத்தி , எதாவது கன்னட சேனலில் மந்திராலாய மஹானின் அபிஷேகம்  முடித்தால் அப்புறம் நேராக இரவு தான் விஜய்யில் சூப்பர் சிங்கருக்கு தொலைக்காட்சி அனுமதி..  பாட்டோடு பாட்டாக தொகுப்பாளினி திவ்யாவை ஜொள்ளிக்கொள்ள இலவச அனுமதி..அந்த தருணங்களில் என்னிடமுள்ள அசட்டுத்தனத்தை ரசிப்பதற்கு தங்கமணிக்கு அவ்வளவு அலாதி... 

மிகவும் ரசித்தவை இரண்டு .


செல்வி வர்ஷா புவனேஷ்வரியின் ``வள்ளி கல்யானம்`` பக்தி சொற்பொழிவு... 7 வயதுக்குள் தான் இருக்கும்.. மழலை மாறத தமிழில் ராகத்தோடு பாடி,  வள்ளியையும்  வேடமிட்ட முருகனையும் கண் முன் நிறுத்தினார் ... இடையிடையே மழலையில் வெளிப்பட்ட நகைச்சுவையும் இனித்தது... அதில் ஒன்றிரண்டு
         
என்ன தான் பிள்ளைகள் இருந்தாலும் , மாப்பிள்ளைன்னு கூப்பிட ஒருத்தர் வேணுமில்லையா ..மாப்பிளே ,மாப்பிளே சும்மா கூப்பிட்டா மாப்பிள்ளை  ஆயிடுவாரா ,பொண்ணை க்கொடுத்தா தானே மாப்பிள்ளை ....

விட்டுக்கு வந்தவர்களை வாங்க  வாங்கன்னு கூப்பிடனும்  அதான் வாசப்படி தாண்டி  வீட்டுக்குள்ள வந்துட்டாரே உள்ள வரத்தானே போறாருன்னு கூப்பிடாமா இருக்கக்கூடாது.

சில பாடல்களில்,அப்படியே அருணா சாய்ராம் அவர்களின் பாட்டும் சாயலும் அழகாக வருகிறது...கிடைத்த ஒரு தொகுப்பு கிழே...
அதே விஜய்யில் பக்தி பரவசமாக பிரம்மம் ஒக்கட்டே எனும் தெலுங்கு பக்தி பாடல், அர்த்தம் ஆரம்பத்தில் அவ்வளவாக புரியாவிட்டாலும் ரொம்பவே கவர்ந்தது.. தாள லயத்தில் மனதில் தெய்வீக ஆட்டம் போட வைத்தது.உடனே வலையிலிருந்து இறக்கி, மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது.. அப்பாடலின் அர்த்தம் தெரிந்தால் நன்றாக இருக்குமே என கூகிளாண்டவரிடம் முறையிட, அவரிடம் ஆங்கிலம் தான் கிட்டியது.யாராவது தமிழ்ப்படுத்தி தந்தால் நன்றாக இருக்குமே என தங்கமணி ஆசைப்பட ,`சுருக்`கமாக மொழிபெயர்த்தேன்.

பிரம்மம் ஒன்றுதான் பரபிரம்மம் ஒன்றுதான்....
உயர்வு தாழ்வு  எனும் ஏற்றத்தாழ்வே இல்லை ..இறைவன் குடியிருக்கும் உயிர்களனைத்திற்கும் உயிர் உணர்வு ஒன்றே.........
அரசனுக்கும் ஆண்டிக்கும்  தூக்கம் ஒன்றே தான்......
அறிவில் மேலோனோ கீழோனோ  மிதிக்கும் பூமி ஒன்றே தான்.....
பூச்சியோ மிருகமோ, புலனின்பம் என்பது ஒன்று தான்......
ஏழையோ, செல்வந்தனோ  இரவும் பகலும் ஒரே மாதிரி தான்....
ஒருவனுக்கு ஒருவன் நாவில் சுவை மாறினாலும் உணவு ஒன்றே தான்....
நாற்றமோ,  நறுமணமோ அதை எடுத்து வரும் காற்று ஒன்று தான்....
யானையோ நாயோ அனைத்திற்கும்  சூர்ய ஒளி ஒன்றுதான்...
நன்மை வழங்குவதும் தீமை ஒழிப்பதும்  வேங்கடவனே........
பிரம்மம் ஒன்றுதான் பரபிரம்மம் ஒன்றுதான்......


---------------------------------------------------------------------------------------------------------
அடுத்து இனிய நண்பர் ஆர்.வி.எஸ் அவர்களோடு அலைபேசியில் உரையாட வாய்ப்பு கிடைத்ததற்கு வேங்கடவனுக்கும் வலைபகவானுக்கும் நன்றி...மனிதர் எழுத்தோட்டத்தை போலவே பேச்சோட்டமும்..கிடைத்த கொஞ்ச நேரத்தில் நீண்ட நாள் பழக்கம்போல் வெகு எதார்த்தமாக பேசினார் ..தஞ்சைத்தமிழ் தாண்டவமாடியது... நேரில் பார்க்க வண்டி எடுக்கும்பொழுது அடைமழை தட்டி எடுத்துவிட்டது.... சென்னையில் பெய்யும் மழையை பார்த்தால் மக்கள் (அ)நியாயத்திற்கு திருந்தி விட்டது போல் தெரிகிறது.... ஆமாம் தப்புக்களை எல்லாம் டெல்லிக்கு கொண்டுபோய்ட்டதா பக்கத்து மாமா அரசியல் பேசுகிறார்....

---------------------------------------------------------------------------------------------------------

 என்னமோ தெரியலிங்க எங்க தங்கமணிக்கு ப்ளாக்குன்னா வெகு அலர்ஜியா இருக்கு...நானும் சொல்லி ப்பார்த்துட்டேன் , என்னோட ப்ளாக்குகளை விட்டுரும்மா...நல்ல கருத்தா எழுதறவங்க இருக்காங்க , கதை எழுதறவங்க இருக்காங்க...நகைச்சுவை எழுதறவங்க இருக்காங்க ....இதோ பார்ன்னு மெளஸ் எடுக்கறதுக்குள்ள `அடுப்புல பால்` ன்னு ஒரே ஒட்டம் ஒடி எஸ் ஆகிடறாங்க.... 

சக ப்ளாக்கர்களே ..உங்க துணைவ / துணைவியரும் இப்படித்தானோ......... 


Sunday, October 17, 2010

``பத்து`` விஷயங்கள்


சுய முன்னேற்றம்,  ஆளுமைத்திறன், நேர்மறை உணர்வு  இவைகளில் இன்றைய இளைநர்கள் சற்று பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள்.... நடுத்தர வயதினரும் தாழ்வு மனப்பான்மையில் சடாரென சோர்வுக்குள்ளாகிறார்கள்.... கோடிக்கணக்கில் விற்பனையில் சாதனை படைத்த, நார்மன் வின்சென்ட் அவர்களின் ‘’ நேர்மறைசிந்தனையின் சக்தி’’  எனும் ஆங்கில புத்தகத்தில் கூறிய பல விஷயங்கள்,மேற்குறிப்பிட்டவைகளுக்கு தீர்வாக இருக்கும்.அதில் பத்து விஷயங்களை மட்டும் தமிழாக்கி, எனக்கும் உங்களுக்குமாக ஒரு பகிர்வு....


வித்தை தெரிந்த அளவுக்கு வியாபாரம் தெரியாமல் திக்கி, திணறிய காலத்தில் இந்த புத்தகம் எனக்கு மிக தெம்பைக் கொடுத்தது...
எனக்கு தெரிந்த வேலைகள் தேடி வந்தது. தெரியாத வேலைகளை கற்றுக் கொள்ள வைத்தது... நல்லதை நினைக்க நல்லது நடக்கிறது ...பத்துதானே, படித்து செயலாக்கித்தான் பார்ப்போமே.


      1 .``நான் வெற்றியாளன்`` எனும் பிம்பத்தை நன்றாக வடிவமைத்துக் மனதில் அழியாவண்ணம் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். அப்பிம்பத்தை மங்கவே விட வேண்டாம்.  தோல்வி எனும் சிந்தனையே ஒரு போதும் வர விட வேண்டாம்

   2.  எப்பொழுதெல்லாம் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகிறதோ அப்பொழுதே, உரத்த குரலெழுப்பி ஒரு நேர்மறை எண்ணம் கொண்டு எதிர்மறை எண்ணத்தை அழித்து விடுங்கள்.

   3. கற்பனையில் கூட தடைக்கோட்டைகள் கட்ட வேண்டாம்.  தடைகளை பற்றிய எண்ணங்களை மட்டுபடுத்திக் கொண்டே வரவேண்டும்.  தடைகள் என்னவென்பதை திறம்பட தெரிந்து கொண்டு, தடைகளை பயம் கொண்டு ஊதி பெரிதாக்காமல் அறிவு கொண்டு தகர்த்த பார்க்க வேண்டும்.

   4. மற்றவர்களை ஒப்பிட்டு, பிரமிப்பதோ அவர்களை அப்படியே நகலெடுப்பதோ வேண்டாம். அப்படி பிரமிக்க வைப்போர்களில், பெரும்பாலனவர்களின் வெளித்தோற்றமும், செயல்பாடுகளும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு பயயுணர்வை மறைப்பதற்காகவே இருக்கும்..மற்றவர்களை க்காட்டிலும் நாம் திறமை மிக்கவர்களே எனும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

      5``கடவுள் நமக்காக இருக்கும் பொழுது , நமக்கு எதிர்ப்பாக யார் இருக்க முடியும் ```மனதிற்கு தெம்பளிக்கும் இந்த வார்த்தைகளை , ஒரு நாளைக்கு பத்து முறை சொல்லி வாருங்கள்  ( இப்பொழுதே ஆரம்பியுங்கள்...மெதுவாக..... அதே சமயத்தில்  நம்பிக்கையாக )

    6. எந்த செயலாகிலும், ஏன் செய்கிறோம்? எதற்கு செய்கிறோம் ? என்பதை புரிந்து செயல்பட நல்ல தரமான ஆலோசகர்களை வைத்துக்கொள்ள வேண்டும்... தாழ்வு மனப்பான்மையின் ஊற்றுக்கண்ணை அறிந்து கற்ற அறிவு கொண்டு கலைந்து விடவேண்டும்.

     7. இந்த பயிற்சியையும் தினம் பத்து முறைசெய்து பாருங்கள்.. முடிந்தஅளவுக்கு சத்தமாக,பிரகடனமாக சொல்லிப்பாருங்கள் .                எனக்கு பலம் அளித்து வரும் இறையெனும் பேராற்றலின்மூலம் என்னால் எதையும் சாதிக்க முடியும் ``
இந்த மந்திர சொற்றொடர் பூமியில் தாழ்வு மனப்பான்மையை தகர்க்க வல்ல அதி சக்தி வாய்ந்த சொற்றொடர். 
8.உங்களிடம் உள்ள திறமைகளை உண்மையாக மதிப்பிடுங்கள்.. அந்த திறமையை பத்து ,பத்து சதமாக கூட்டிக் கொண்டே வாருங்கள்.

     9. இன்று செய்யக்கூடியதை, செய்யமுடிந்ததை நாளைக்கு தள்ளிப்போட வேண்டாம். முடிக்கப்படாத குவிந்த வேலைகள் தினத்தை இன்னமும் கடினமாக்கும்.

10.இந்த ஒரு சொற்றொடரை  அட்டையில் எழுதி அலுவலகத்தில் தொங்க விடுங்கள், சவர / அலங்கார க்கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளுங்கள்.மேசைக்கண்ணாடிக்கு அடியில் வைத்துக்கொள்ளுங்கள் .முடிந்தபோது படித்தும் வாருங்கள்.முக்கியமாக மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்
எவ்வளவு உயரமாக இருந்தாலும் முதலில் உங்கள் ``மனதை`` அந்த குறுக்கு கம்பிக்கு மேலே முழுமையாக வீசுங்கள் ; உடல் எளிதாக பின் தொடர்ந்து, அழகாக வளைந்து அந்த உயரத்தை தாண்டி விடும்...Saturday, September 11, 2010

பாரதி....பாடல்களோடு பல நினைவுகள்ஒளி படைத்த கண்ணினாய்  வா.வா. வா..உறுதி கொண்ட நெஞ்சினாய் வா. வா, வா... 
வா. வா. வா.  என முன்று `வா` க்களில் ஈர்க்கப்பட்ட குழந்தை கவிஞன். நான் பெரிதாக பெரிதாக பாரதியின் பிம்பமும் உயர்ந்து கொண்டே வந்தது
ஏழாம் வகுப்பில் படிக்கும் பொழுது `சுந்தர தெலுங்கினிற் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்`` என்று சிந்துநதியின்மிசை பாட்டை ஒன்பதாம் வகுப்பு அண்ணா ஒருவர்  பள்ளி பாட்டு போட்டியில் பாடி பரிசு பெற்றதை அடுத்து , நாங்களும் பெரிதாக அர்த்தம் தெரியாமல் பாடி வருவோம் ``சேர நன்னாட்டிளம் பெண்களுடனே `` சின்ன வயதில் இந்த வரியின் மீது ஈர்ப்புக்கிற்கு இளம்பெண்களை விட நாங்கள் சேர நன் நாட்டில் இருந்தது தான் காரணம்  . சேர நாட்டில் இருப்பதற்கான சாட்சியாக  அப்போதைக்கு எங்கள் அறிவிற்கு எட்டியது  கோவையில் ஓடிய  சேரன் போக்குவரத்து கழக பேருந்துகள் தான்


காக்கை சிறகினிலே நந்தலாலா...பாட்டில் நந்தலாலா வின் ஈர்ப்புநின்னை தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா வரை பாட வைக்கும்

வறுமையின் நிறம் சிவப்பு  படத்தில் கமல்  அங்கங்கு  பாரதியின் வரிகளை சொல்வது  பிடிக்கும் .அதில்  வெள்ளை நிறத்திலொரு பூனை பாட்டை கமல் அழுத்தி சொல்வது மிக பிடிக்கும். படத்தில் கடைசியில்  நல்லதோர் வீணை  செய்தே பாட்டு உருக்கத்தை வரவைக்கும் . அதில் விசையுறு பந்தினைப்போல்  வரி எப்பொழுது கேட்டாலும் புல்லரிக்க வைக்கும்.

பொள்ளாச்சி  பாலிடெக் காலங்களில் , பாரதி பற்றி படம் எடுத்தால் வேஷ பொருத்தம்  கமலுக்கா, ரஜினிக்கா என விவாதம் சூடு பறக்கும். என் பெஞ்சு நண்பன் கிறிஸ்டி,  ரஜினியை சிலாகிப்பான். நான் கமல் தான் பொருத்தம் என்பேன் . கிறிஸ்டி நன்றாக வரைவான் . நகாசு வேலைகள் செய்து கனப்பொருத்தமாக பாரதிக்குள் ரஜினியை பொருத்தியிருந்தான் .


கோவை ஜிசிடி முதலில் சென்னை பல்கலைகழக கட்டுப்பாட்டில் இப்போழுது அண்ணாபல்கலைக்கு மாறியுள்ளது நடுவில் நான் பயின்ற பொழுது பாரதியார் பல்கலைகழகத்தில் இருந்து, அதில் பட்டம் பெற்றது எனக்குள் இருக்கும் பாரதிசார்பு மகிழ்வு.


அச்சமில்லை  அச்சமில்லை  பாடலில் , இச்சகத்துமாந்தர் அனைவரும், துச்சமாக மதிப்போர்,கச்சணிந்த மாதர், நச்சளிக்கும் நண்பர், உச்சிமீது இடியும் வானம்  இப்படி பாரதியின் பட்டியல் சற்று வித்தியாசமாக இருந்தாலும்,பாடல் மனதிற்கு ஒரு தைரியத்தை உண்டாக்கும்.


கமலின் மகாநதி படம் வெளிவந்ததை தொடர்ந்து,தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி  பாடல் இன்று இளைஞர்களுக்கு தங்களை சுற்றிலும் நடக்கும் தீமைகளை கண்டு வீழ்வேனென்று நினைத்தாயோ என்று வெகுள உத்வேகம் அளித்துக்கொண்டிருக்கிறது.


எனது செல்லம்மாள், பாட்டுப்போட்டிக்காக, மகனுக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது  நிற்பதுவே  நடப்பதுவே பாட்டை பயிற்சி கொடுத்தபொழுது, காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ போன்ற ஏற்ற இறக்க வரிகளோடு அப்பாடல் நன்றாக பதிந்தது.


எண்ணிய முடிதல் வேண்டும்..  ஒரு பிரார்த்தனை பாடலாகவே மனதுள் வைத்துள்ளேன்.


தண்ணிர் விட்டா வளர்த்தோம், சர்வேசா , கண்ணீரால் காத்தோம்  கருகத்திரூளோமா என்று மேற்கோள் காட்டி உரையாற்றிய ஜனாதிபதி வெங்கட்ராமன் முதல்  அடிக்கடி பாரதியின் பாடல் வரிகளை நினவு படுத்தி உரையாற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் வரையிலும் பாரதியின் பாட்டுவரிகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் பொழுதெல்லாம் ஒரு இனிமையான உணர்வு வரும்.


பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம் பாடல் சமிப காலத்தில் பலரால் பாராளுமன்றத்தில் மகளீர் மசோதா உரையில் ஒலிக்க கேட்கிறோம்...


பக்தி, வீரம், விடுதலை,காதல்,இயற்கை  என பலதலைப்புகளில்  பாடல் இயற்றிய பாரதி தனது பார்வையை, முழுமையான ஞானத்திற்கு  கொண்டு சென்றான். தனது முப்பத்தி ஒன்பதாம் வயதில் அவசரமாக இயற்கையிடம் செல்லாமல்,  நீள் ஆயுள் பெற்றிருந்தால்  இப்போதிருக்கும் போலி ஆன்மிகத்தையும் போலி பகுத்தறிவு வாதங்களையும் தன் எழுத்து திறத்தால் ஒழித்து உதறியிருப்பான், 


காக்கை குருவி யெங்கள் ஜாதி..நீள் கடலும் மலையு மெங்கள் கூட்டம் : நோக்குந்திசையெலாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்கக்களி யாட்டம். மேம்போக்காக பார்த்தால் இப்பாடல் ஜாதி, கூட்டம் , மகிழ்வு என இருக்கும் . ஆனால் பாரதி ஞான அறிவு நிரம்பியவன். ஆழமான தத்துவத்தை வைக்கிறான்..இதை தத்துவஞானி வேதாத்திரி அவர்களால் சிறப்பாக பார்க்கப்பட்டது... நீ , நான் என்பதெல்லாம் அணுக்கூட்டம் அன்றி வேறில்லை  அதுபோல கடலும் மலையும் அணுக்கூட்டம் தான்.  நமக்கும் உடல், வலி, உணர்வு இருக்கிறது, பறவை விலங்குகளுக்கும் அவ்வுணர்வுகள் இருக்கிறது.எனவே  எல்லாம் ஒரு ஜாதிதான். இப்படி பார்க்க ஆரம்பித்துவிட்டால் வெறுப்பின்றி மகிழ்வோடு இருக்கலாம்.நாங்கள் அடிக்கடி வீட்டில் கேட்கும் பாடல், நெஞ்சுக்கு நீதியும், தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணிப்பூண். பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ.  இன்று பாரதியின் நினவு நாள் ,நினைவு போற்றுவோம்..

வாழ்க தமிழ்..வாழ்க பாரதி....