Sunday, February 27, 2011

சுஜாதா பத்துசுஜாதா ஒரு தொடரும் சகாப்தமாகவே இருக்கிறார். அதற்கு கட்டியம் கூறும் வகையில் இந்த வருட சென்னை புத்தக காட்சியில் திரும்பும் கடைகளில் எல்லாம் சுஜாதாவின் புத்தகங்கள் அடுக்கப்பட்டு,  மிக அதிகமாக விற்கப்பட்டதாக  பெரும்பாலான பதிவுகள் மூலம் அறிந்தோம்....
தமிழின் எழுத்தோடும் வாசிப்போடும் என்றும் தொடரும் நினைவில், பல சுவராஸ்யங்களில்  சிலவற்றை பார்ப்போம்..படிப்போம்....
சுஜாதாவின் எழுத்துக்கள் வலியதான எழுத்துருவிலும், எனது மெலிய உருவிலும், சுஜாதா பரி்ந்துரைத்த மற்றவர்களின் எழுத்து பல வண்ணங்களிலும், 
                    
   1.நகைச்சுவை:
                    வாத்தியார் எந்த கட்டுரையிலும் கதைகளிலும் பிரத்யேகமாகவோ  மெல்லிழையாகவோ நகைச்சுவையை கலந்து விடுவார்..
      
சொர்க்கத்தில் நுழைய இரண்டு வாசல்கள் இருந்தன. ஒன்றில் பொண்டாட்டி பேச்சை எப்போதும் கேட்டவர்கள் இந்த வரிசையில் நிற்கவும். மற்றதில் பொண்டாட்டி பேச்சை கேட்காதவர்கள் நிற்கவும்  என்று எழுதியிருந்தது முதல் வாசலில் நுழைய மைல் கணக்கில் க்யூ வரிசை நின்று கொண்டிருக்க மற்றதில் ஒரே ஒரு ஆசாமி மட்டும் பின் கையை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
பேரேடு புத்தகத்துடன் வந்த சொர்க்காதிகாரி அவனை அணுகி  `` நீங்க நிசமாகவே இந்த வரிசையில் நிற்க விரும்புகிறீர்களா ?``
      ஆமாங்க என் பொண்டாட்டி தான் இங்க நிக்க சொன்னாங்க...

               ********************
    2. கட்டுரைகள்
                     கட்டுரை என்றாலே  முன்னுரை , பொருளுரை , முடிவுரை என்று படிக்கும் காலத்தில் , தலைப்புகளுக்கு அடிக்கோடிடும் ஆர்வம், எழுத்தில்  இருக்காது... சுஜாதாவின் கட்டுரைகள் படிக்க ஆரம்பித்த பிறகு  கட்டுரைகளின் சுவாரஸ்ய சுவை  பிடிபட ஆரம்பித்தது.. கட்டுரைகள் பற்றி  அவரது எழுத்தில்....

     கட்டுரைகள் எழுதுவது  எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம்..கட்டுரைகளில்தான்  வெளிப்படையாக  எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி தெளிவாக கருத்து சொல்ல முடிகிறது . இருந்தும் மக்கள் கட்டுரைகளைவிட கதைகளையே விரும்பி நாடிச் செல்கிறார்கள். அதற்கு காரணம் கட்டுரைகளை பலர் கடினமாக எழுதும் பழக்கம் இன்னும் நிலவுகிறது.... அவர்கள் ``நடத்திய`` என்று சொல்ல மாட்டார்கள்  ``நடாத்திய`` என்பார்கள்.சிறந்த என்பதற்கு  விழுமிய என்று சொல்வார்கள். கலந்த என்பதற்கு ``பொறுளிய`` என்பார்கள்.
இதனாலேயே தமிழ் மக்கள் கட்டுரை என்றாலே பயந்து போய் அங்கங்கே ஒதுங்கி கொள்கிறார்கள்..

அறிவியலோ  அரசியலோ  சினிமாவோ சிலப்பதிகாரமோ  சுஜாதாவின் கட்டுரைகள் என்றும் சோர்ந்ததில்லை
                      ********************************************************  
   3 .கவிதைகள் :
                     தமிழை நேசிக்கும் அளவுக்கு, கவிதைகளையும் நேசித்தார். அதனாலேயே  கவிதைகளை தேடிச்சென்று வாசித்திருக்கிறார் ..அவரை தேடியும் நிறைய கவிதைகள் வரும் ...கடந்து செல்லும் கவிதைகளில் சிறந்ததை, எழுதியவரின் பெயர் குறிப்பிட்டு எடுத்து சொல்லாமல் விட்டதில்லை.
அவரது பரிந்துரை கவிதைகள் ஒன்றிரண்டு
   எலிப் பொறிக்குள் மனிதர்கள்
   எல்லோருமே
   பிள்ளையாராகிவிட்டோம்
   உலகமே
   எலி வாகனத்தில்
   பயணிக்கிறது
   சிவ பார்வதியை  சுற்றிய
   பிள்ளையாராக
   வாமன வாரிசுகள்
   ஒரடி பெட்டிக்குள் உலகை சுற்றுகிறார்கள்
   கால்களை கழற்றி விட்டுக்
   கை விரல்களால்
   ஊழித்தாண்டவம்
   ஆடுகிறோம்
   அரூப சிலந்தி வலையை
   எலியால் பிறாண்டி
   பிறாண்டிப்
    பிரபஞ்சம் தாண்டித் தேடுகிறோம்
    எலிக்கு மனித வாகனம்
    இருபத்தொன்றில்
    வாழ்க எலி சாம்ராஜ்யம் ...
(ஆண்டாள் பிரியதர்ஷினியின் தினமலரில் பிரசுரமான கவிதை )
       
      செங்கல் சுமந்த
      சாலை கடந்த
      எழைச்சிறுவன்
      சுவர் சுமந்த எழுத்துக்களைப்
      படித்துவிட்டு சிரித்தான்
      இளமையில் கல்..
        (இது கவியரசு வைரமுத்துவின் குமாரர் கபிலன் எழுதியது..) 
 இதை சுஜாதா ஹைக்கூவாக மாற்றுகிறார் பாருங்கள் கீழே....
       சுவரில்  ``இளமையில் கல்``
       அருகே செங்கல் சுமக்கும் சிறுவன்....
மேலும் பரிந்துரைத்த ஹைக்கூக்கள் ஒன்றிரண்டு கொறிப்போம்

   நீண்ட அலகு நாரை
   நீரை கொத்தினாலும் நீங்காத நிலா.......   அமுத பாரதி..
    கலவரத்திலும் புன்னகை
    மாறாமல் சிலைகள்   .............................ஜி.மாஜினி

என்னதான் புதுக்கவிதையயும் ஹைக்கூக்களை பரிந்துரைத்தாலும் அவர் மரபின் விரும்பியாகவே இருந்திருக்கிறார்  அதற்கு அவரே சொல்லும் காரணம்.
மரபை தெரிந்துகொள்ளாமல்  புதுக்கவிதை எழுதக்கூடாது என்று தமிழக அரசு ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் – மரபுக்கவிதை எழுதுவது உரைநடை  எழுத்தாளர்களுக்கும் நல்ல பயிற்சி. சொற்சிக்கனமும் ஒசை நயமும்  தொனியும் கதையில் வரும். ஒரு எல்லைக்கும்  சில விதிகளுக்கும் உட்பட்டு கால்பந்து விளையாடுவது போலத்தான் இது. மைதானத்துக்குள் எத்தனை திறமையை காட்டுகிறார்கள். சங்கப்பாடல்கள் அனைத்தும் சிக்கலான திணை,துறை மரபுகளுக்கு உட்பட்டன இருந்தும் உலக இலக்கியத்தில் வைக்கும் வரிகளை எழுதினார்கள்.  `எத்திசை செல்லினும் அத்திசை சோறே` எனும் ஔவையாரின் வரி ஞாபகம் இருப்பதற்கு காரணம், அதன் கருத்து மட்டுமல்ல... எதுகையும் தான்  காரணம்....
யாதும் ஊரே யாவரும் கேளீர் – இன்றும் பசுமையாக தொடர்வதின் காரணம் புரிந்தது.

                    *****************************
     4 .சங்ககால கவிதைகள் 
                    சுஜாதாவுக்கு புறநானுற்றுப் பாடலின் மீது அலாதிப் பிரியம் இருந்திருக்க வேண்டும் ...அனுபவித்து பாட்டைப் போட்டு , சொந்தமாக விளக்ககவிதையும் போடுவார்.....
  பாரி மகளிர்
``  அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
   எந்தையும் உடையேம் எம் குன்றம் பிறர் கொளார்
    இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
     வென்று எறி முரசின் வேந்தர்  எம்
      குன்றும் கொண்டார் யாம் எந்தயும் இலமே
சுஜாதா :
  அந்த மாதம்  அந்த நிலவில்
  அப்பா இருந்தார் ..கோட்டையும் இருந்தது
  இந்த மாதம் இந்த நிலவில்
  வெல்லும் போர் முரசு மன்னர்கள்
  கோட்டையை பறித்தார்கள்
  அப்பாவும் இல்லை

இப்படி விளக்கப்பாட்டோடு இருந்தால்...புறநானுற்று பாட்டு முழுமையாய் படிக்க யாவர்க்கும் ஆவல் மிகும்.....

                    ***************************
       5 .அறிவியல் :
                    ஏன் ? எதற்கு? எப்படி ?  தமிழில் அறிவியலுக்கு வழுக்கிச் செல்லும் எளிய பாதையாக மாற்றித் தந்தவர்...அறிவியலில் உயிரியல் அவர்க்கு மிகப் பிடிக்கும் .... வித்தியாசமாக   ஆறு அதிசயங்களை  வகைப் படுத்துகிறார் பாருங்கள்...
                அ.. மிக உஷ்ணத்திலும் உயிர் வாழ பழகிவிட்ட நுண்கிருமி    பாக்டிரியாக்கள்.

               ஆ . ஆன்சைடிரிஸ் எனும் வண்டு  தான் உயிர்வாழ    எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள்.
               
                 இ.  ஸ்கேரப்பி எனும் முற்றிலும் புரோட்டினால் ஆன  டி.என்.ஏ.. ஆர்.என்.ஏ  இவை எதுவும் இல்லாமல் பல்கி பெருகும் வைரஸ்கள்....
        
                ஈ. மூக்கில் உள்ள வாசனைகளை கண்டுகொள்ளும் செல்கூட்டம்.  வாராவாரம் தம்மை புதுப்பித்துக் கொள்ளும்  நியுரான்கள். மூளைக்குரியதை  மூக்கில் வைத்திருக்கிறோம்.
                உ.  கரையான் : தனிப்பட்டு எதுவும் அடையாளம் இல்லாத ஜந்து.       குழுவாக இணையும் பொழுது , கரையான் புற்றை சரியான உயரம்,       சரியான வளைவுகளுடன் ஒரு சர்ச் மாதிரி  கட்டும் திறமை குழுவில் யாரிடம் இருக்கிறது என்று தெரியாமல் அனைத்தும் ஒரு உயிர் போல் இயங்கும் அதிசயம்..
                .நம் உலகம்  ..விளக்கமே தேவைப்படாத  அதிசயம்.

இதை படிக்கும் பெரும்பாலோர் மேலும் விஷயஞானமறிய  இணைய ஊர்வலம் வருவோம்.. அங்குதான்  சுஜாதா படிப்பறிவிப்பவராக திகழ்கிறார்..

                                             *****************************
            6.இணையம் : 
                      இணையத்தை பற்றி பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அவர் எழுதியது..

நெட்டில் சினிமாப் படங்களைச் சடுதியில் இறக்கிக் கொண்டு  வீட்டுக்குள் பார்க்கும் நாட்கள் வரும்பொது நெட் என்பது பழைய கேபிள் டி.வியின் , சாட்டிலைட் கேபிள் டி.வியின் செயல் பாடுகளுக்கு திரும்பிச் செல்கிறது . இதனுடன் இதன் முலம் கிடைக்கக் கூடிய அபாரமான தகவல்கள் வெள்ளம் போனஸ், நமக்கு திகட்டத் திகட்ட மகிழ்ச்சியும் அறிவு புகட்டலும் தரப்போகிறது.

இத்தனை பிம்பங்களையும் அத்தனை பக்கங்களையும் வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் மலைப்பாக இருக்கிறது. எங்கேயோ எதோ தப்பு நிகழ்ந்து கொண்டிருப்பது தெரிகிறது.

அறிவை அடைவதில் உள்ள சிரமங்கள் நீக்கப்பட்டு விட்டால் அதில் சவால் இருக்குமா ? சந்தேகமாக இருக்கிறது.
இப்படி ஒரு விளம்பரம் வரும் சாத்தியத்தையும் எதிர் பார்க்கலாம் .

உலகிலேயே புதுமையான இணைய இணைப்பு. கால் மணி நேரத்தில் தூண்டிக்கப்படும் . படிப்பதற்கும், உங்கள் குழந்தைகளை திருப்பிப் பார்ப்பதற்கும் , சன்னலை திறந்து நல்ல காற்றை சுவாசிக்கவும் நேரம் தரப்படும் .

அது இப்பொழுது எவ்வளவு உண்மை என்பது  நிதர்சனமாகத் தெரிகிறது... அதுவும் முகபுத்தகம்,  ஆர்கூட் மற்றும் அரட்டை நெட்வொர்க்கில் இருந்து நாமும் வெளியேறி, நமது குமார / குமாரியரையும்  வெளிக் கொணர  படாத பாடுபடவேண்டியிருக்கிறது

                   ******************************************
              7 .அரசியல் :
            இதுவும் பத்து வருடம் முன்னர் எழுதியது.. இன்றும் பொருந்துகிறது

 இந்திய அரசியலிலேயே ஒரு கட்சி முழுத்தவணையும் நீடிப்பது என்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் நாம் அரசியலில் முதிர்ச்சி அடையமுடியும்.
        

வேறு தேர்ந்தெடுப்பு இல்லாத அஜனநாயக சூழ்நிலை. மாறி மாறி பழைய ஊழல் காரர்களையே மீண்டும் பதவிக்குக் கொண்டுவரும் ஞாபகமறதி சார்ந்த அரசியல், மற்றவற்றயாவது ஒரளவுக்கு மாற்றமுடியும் என்று தோன்றுகிறது. இந்த நந்தி விலகவே இல்லை

இப்பொழுது நந்தி, விலகாத யானையாக மாறிவிட்டது .

                              ************************************************** 
             8.விமர்சனங்கள் : 
                    தானும் கதைகள் எழுதி, பிறர்கதைகளுக்கும் நல் விமர்சனம் எழுதுவது சுஜாதா    நித்தமும் கடைபிடித்த வாடிக்கை... அது வாசகர்களுக்கு நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவதாகவே அமைந்தது.
 எழுத்தாளர் புதுமைப்பித்தனைப்பற்றி.....
 புதுமைப்பித்தனைப் படித்ததும் சுதந்திரமாக அவருடைய பாதிப்பு இல்லாமல் எழுத தைரியம் வேண்டும்..நன்றாக எழுதுபவர்களின் பட்டியலில் உள்ள அனைவரிடமும் புதுமைப்பித்தனின் பாதிப்பு இருப்பதை எந்த கோர்ட்டிலும் நான் சாட்சி சொல்லத்தயார்

தற்பொழுது அதை அப்படியே சுஜாதா என்று தாராளமாக மாற்றிக் கொள்ளலாம்....

இப்படி,சுந்தர ராமசாமி , இரா.முருகன், தோப்பில் மீரான், ஜெயமோகன், போன்ற நிறைய எழுத்தாளர்களை சிலாகித்தும் இருக்கிறார், சிறுகுறைகளை எடுத்துக் காட்டியும் இருக்கிறார்...
                     *****************************************************

            9. சினிமா :
                  அவரது நாவல்கள் படிக்கும்பொழுது  ஓரு சினிமா பார்த்த உணர்வு  வரும் ....ஒவ்வொரு சம்பவங்களை  அழகாக  காட்சியகப்படுத்துவார்.. சினிமாக்காரர்கள்  அவரை  மொத்தமாக குத்தகை எடுத்ததில் ஆச்சர்யமில்லை . தமிழ் சினிமாவின் தற்போதய நிலையை அவரது வரிகளில்...

தமிழ் சினிமா ஒரு நால் ரோட்டில் நிற்கிறது . டெக்னிக்லாக பல சிறப்புகள் பெற்றிருந்தாலும் கதை என்கிற இலாக்கா சவலையாகவே இருக்கிறது. எழுத்து வேலையை முடிக்காமல் காமிராவுக்கு போவது  ஆபத்தானது என்பதை இப்போது உணர்ந்து வருகிறார்கள்... 

    அன்றே அவர் காட்டிய பல `தமிழ்படம்``  காட்சிகளில் இரண்டு

முகூர்த்தத்துக்கு நேரமாறது, பொண்ணை வரச் சொல்லுங்க என்று குடுமி சாஸ்திரி அவசரப்படுத்தினால். பெண் காணாமல் போகப்போகிறாள் என்பதை எதிர்பார்க்கலாம்...

காரில் நேரான ரோட்டில் நேராகப் போனாலும், கதாநாயகி அடிக்கடி ஸ்டியரிங்கைத் திருப்புவாள்...

                    *********************************************************
  10 . எழுத்து   :
                           எழுத்தென்பது எப்படி இருக்க வேண்டும் கடைசி வரை எடுத்துக் காட்டி கொண்டே இருந்தார்..

                   எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது. நெஞ்சிலிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்கு காத்திருப்பது அல்ல.....திரும்ப திரும்ப எழுதுவது .. மகிழ்ச்சியோ வலியோ எழுதுவது எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது எழுதியதில் திருப்தி யடையாமல் இருப்பது ... மேலும் எழுதுவது.....

கடைசிவரை எழுதிக் கொண்டிருந்தார் ... கடைசியாக அப்போலா படுக்கையில் அப்போலா தினஙகள் எனும் தலைப்பில்.... எதார்த்தம் தொனிக்க .....

இன்று 18 ஆவது நாள்.எத்தனை பேருக்கு கவலை,மனக்கஷ்டம்,இதை விதி என்று சொல்வதா,தற்செயல் என்பதா? எப்படியும் இந்த அனுபவத்தை நான் மறக்க்வோ, மீண்டும் தாங்கவோ முடியாது. இனி ஆஸ்பத்திரி பக்கமே வரக்கூடாதபடி பகவான் என்னைக் காக்கவேண்டும்..மனைவியும் மகனும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டதை மறக்கவே மாட்டேன்....வீட்டுக்கு போகவேண்டும். ஒழுங்காக சாப்பிட வேண்டும்....

                                       *************************************
வாத்தியார்,  பல நூறு  விஷயங்களை எழுத்தில்  கையாண்டுள்ளார் ...அதில்  பத்து விஷயங்களை மட்டும் எடுத்து  ஒவ்வொரு  தேக்கரண்டி  அளவு  சுவை பார்த்தோம் ...நிங்களும் வாத்தியாரை படித்தவற்றுள்  பிடித்தவற்றை இந்நாளில் பகிரலாமே...