Saturday, December 31, 2011

ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துகள் ...







என் இனிய வலை நட்பான சொந்தங்களுக்கு ஆனந்த மயமான புத்தாண்டு  வாழ்த்துகள் ..  புதியதாய் பிறக்கும் வருடத்தின் ஒவ்வொரு நாளும் இனியதாய் இருக்க நல்  வாழ்த்துகள் ..

சென்ற ஆண்டில்  பல  மாதங்கள் வலைப்பக்கமே வர முடியாத அளவில்  பணியும் பணி மாற்றங்களும் அமைந்தன ...அரசு பணியில் விடுப்பு எடுத்து  அரபு நாடு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்தது...... 


அரசா?  அரபா? ....அரபா?அரசா?   என   முடிவெடுக்க வேண்டிய  நிலையில்  முன்னின்ற சாதக பாதகங்களை கூட்டி  கழித்து  பெருக்கி  வகுத்து பார்த்தேன் ..  அரசு பணியில்  விடுப்பில் இருந்த  நாட்களை விட  அரபு பணியில்  கூடுதல்  விடுப்பு  எனும் கவர்ச்சியுடன் , தமிழ்நாட்டில்   பணியமர்த்தப்பட்ட / பணியமர்த்தப்படும் பகுதிகளிலிருந்து பயணப்பட்டு வருவதை விட  சென்னைக்கு  ஓமன் நாட்டிலிருந்து  விரைவில் வந்து போகலாம் எனும்  வசதியும்  சேர   அரபே என  முடிவான முடிவு எடுத்துவிட்டேன் . 


கணிசமாக மலை பகுதிகளில்  பணிபுரிந்த எனக்கு அப்பணியிலிருந்து விடுபடும்  காலமும் மலைபகுதியிலேயே   அமைந்தது இனிய நிகழ்வு .. என் வலைப்பூ நண்பர்களுக்காக காடம்பாறை மலைப்பகுதியில் எடுத்த படங்கள்    படங்கள் கிழே...

















இவ்வாண்டு இனியதாய் பிறக்கிறது  ...  பாரதியின் பாடலோடு வரவேற்போம்  '''பொழுது புலர்ந்தது '' ஐந்து நிமிடம் ஒதுக்கி கேட்டுபாருங்கள் இப்பாடலினால் நிச்சயம் புத்துணர்வு பெறுவீர்கள் ...
அண்ணன் அக்கா தம்பி தங்கையரே ..  வரும் வருடமாவது வலைப்பூவிற்கு  அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு கிடைக்க விழைகிறேன்.. ....மீண்டும்  நல்வாழ்த்துகள் ...





Wednesday, October 5, 2011

மும்மூன்றாக....மும்மூன்றாக.....



                                 



அன்போடு தொடர பணித்த எங்கள்பிளாக்கிற்கு  நன்றியோடு  சுயப்பிரதாபம்…… 

1..நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.

   நட்பு, வேலை, காலைச்சூரியன்.


2. நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.  

    தற்பெருமை ...   சலிப்பு …..  சினம்


3. பயப்படும் மூன்று விஷயங்கள்.

    வஞ்சம் … லஞ்சம்…   பஞ்சம்


4.  உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்.   

     புத்தி , , மனம் , அறிவு


5. உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.

    மடிக்கணினி,   புத்தகங்கள் குறைந்தது இரண்டு, அலைபேசி


6.உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.

  திரையில் …. நாகேஷ் முதல் சந்தானம் வரை…
  நாடகத்தில் … சோ… கிரேஸி என
  எழுத்தில் ……   வாத்தியார் சுஜாதா .. பாக்கியம் ராமசாமி என…


7. தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்
  
 இரவு உணவு எடுத்துக்கொண்டே  தொலைக் காட்சி பார்த்துகொண்டே  புத்தகம் படித்துக் கொண்டே  ( இன்னமும் இரண்டு கொண்டே க்கள் பதிவுக்காக மூன்றுடன் நிறுத்தி விட்டேன்)



8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்
 வாழ்க்கை முடியும் வரை காத்திராமல்  நமக்கு முடியும் போதெல்லாம் 
 கல்விக்கு கஷ்டபடுபவர்கள்…சரியான மருத்துவத்திற்கு அல்லல் படுபவர்கள்… மனம் முழுவதும் நம்பிக்கையோடு பிறவியால் உடல் ஒத்துழைப்பற்றவர்கள்…
இவர்களுக்கு ஆர்ப்பாட்டம் சுயவிளம்பரம் இல்லாமல்  உதவவேண்டும்…..



9.உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.  

 பணியில் ஒருங்கிணத்து  ஆற்றலான குழு உணர்வை எளிதில்   உருவாக்குதல்..
 அதிகம் பேசாமலே  நண்பர்களை ஆட்கொள்தல்..
 சொல்விரர்களை விட செயல்வீரர்களை எளிதில் அடையாளம் காண்தல்

10.  கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:   
   மரணம் …விபத்து… பொய்……


 11.பிடிச்ச மூன்று உணவு வகை
  வெங்காய ஊத்தாப்பம்
  எலுமிச்சை ரசம்
  தயிர் சாதம் உடன் தொட்டுக்கொள்ள வெந்தய வத்தக் குழம்பு….


12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்
(மாறிக் கொண்டே இருக்கும்...  சமிபத்திய முணு முணு மூனு )
ஆசை முகம் மறந்து போச்சே... பாரதி பாடல்
நீயும்  நானும்....மைனா பாடல்
பார்த்த முதல் நாளாய் ....கமல் பாடல்

14. பிடித்த மூன்று படங்கள்?    
பாமா விஜயம்,  ஹேராம்...  அன்பே சிவம்...


 15. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்?  
 காற்று…..நீர் …. உணவு ……… உடல் வாழ
 மனை .. நட்பு… சுற்றம் ……  மனம் வாழ
வலை.... புத்தகம்..... அலைபேசி ……. உலகத்தில் உழல

16. கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?   

முழுசா ஒரு புத்தகத்தை முடித்து விட்டு அடுத்ததை தொடுவது...
கணிப்பொறியை முழுமையாக கையாள்வது....
நன்றாக எழுதுவது எப்படி என்பதை ....

17. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?   

    இதுவரை இத்தொடர் எழுதாதவர்கள்...
    தொடர்பதிவு ஒவ்வாமையற்றவர்கள்...
    அழைத்துவிட்டானே என்று திட்டாதவர்கள்...

பொறுமையாக படித்ததற்கு  நன்றி நன்றி நன்றி

Sunday, September 11, 2011

பாரதி மொழிகள் பத்து


 

1 .எல்லா மதத்தினரும் ஒரே தெய்வத்தை தான் வணங்குறார்கள். லௌகிக விஷயங்களை போலவே மத விஷயத்திலும் ஒப்பு, விடுதலை, உடன்பிறப்பு இவை மூன்றும் பாராட்ட வேண்டும்.

2. அச்சம் இருக்கும் வரை நீ  அறிவாளியாக மாட்டாய்.

3. நீதி , சமாதானம், சமத்துவம் இவற்றாலே ,இவ்வுலகத்தில் தீராத தைர்யமும்  அதனால் தீராத அன்பும் எய்தலாம் ..

4. நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் என்னவென்றால் விடா முயற்சி.மனதிற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை சித்தியாகும்.

5. ஒரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் எற்படுகின்றன.அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைர்யம் எற்படுகிறது.. கூட்டம் கூட்டமாக நேர்மை வழியில் புக வேண்டும்….

6. புதர் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனத்திலுள்ள மற்ற கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக் கொண்டிருப்போமானால் , உலகத்து காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறுபடுகின்றன..

7. மனிதனுக்குப் பகை புறத்திலில்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடக்கிறார்கள். பயம், சந்தேகம் சோம்பல் முதலான குணங்கள் நம்மை ஜெயம் அடையவொட்டாமல் தடுக்கும் உட்பகைகளாம்.

8. விடுதலையே இன்பத்திற்கு வழி. விடுதலை பெற்றோர் வறுமையிலிருந்து மாறி செல்வமைடைவார்கள். மெலிவும் நோயும் நீங்கி வலிமையும் உறுதியும் பெறுவார்கள். சிறுமை நீங்கி பெருமை காண்பார்கள். துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவார்கள்…


9. உடம்பு நாடிகளுக்கு வசப்பட்டது. நாடிகள் மனதின் வசமாகும். ஆகையால் உடம்பிலுள்ள நோய்களை தீர்த்து வலிமையேற்றுவதற்கு மனவுறுதி, நம்பிக்கை, உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ளத்தகும்.

10. துணிவு, உள்ளத்தூய்மை, எதாவதொரு மகத்தான லட்சியத்தில் அறிவை ஆணி கொண்டடித்தது போலப் பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நட்டங்களில் சிந்தனை இல்லாமை- இவைதான் யோகத்தின் ரகசியம்…

இன்று  பாரதி நினைவு நாள்…   நினைவு போற்றுவோம்…
பாரதியார் கவிஞர் என்பதையும் தாண்டி தத்துவதரிசனத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார் . இயற்கையின் ரகசியங்கள் அனைத்தும் அறிந்து அதன் முலம் எல்லையற்ற சக்தியை  தமிழர்கள்  அனைவரும்  பெற வேண்டும் என்பது அவரது  ஆவல். பாரதி பத்திரிக்கை ஆசிரியராக பல கட்டுரைகளையும்  கதைகளையும்  வடித்துள்ளார்… அதில் பல பொன்மொழிகள் உள்ளன. 

பாரதி பதிவு நினைவுகள்  இங்கே…. 

பாரதியின் பாடல்கள்  இங்கே  கேட்கலாம்..தீராத விளையாட்டு பிள்ளையோடும் கேட்கலாம்…  எங்கள் வலைப்பூவிலும் கேட்கலாம். தெவிட்டா தெள்ளமுது.

Wednesday, August 10, 2011

தொடரும் முன்னுரை தொடர்

முன்னுரை தொடர்பதிவு ஒரு சுற்று வந்து அத்தொடர்க்கு முடிவுரை நெருங்கும் சமயத்தில் அருமை நண்பர் ஆர்.வி.எஸ்  அவர்களின் அன்பழைப்பு  நினைவுக்கு வர  , நேரமும் கூடிவர   சுருக்கமாய் ஒரு பதிவு…….

முன்னுரை பின்னுரை பற்றிய சிந்தனையே இல்லாமல் சுஜாதா எனும் எழுத்து தென்றல்  ஆ.வி.ஜு.வி..சாவி..குமுதம் கல்கி..குங்குமம் என எங்கெல்லாம் வீசியதோ அங்கு போய் வாசிப்பு காற்றாடிக்கொண்டோம்….பின்னாட்களில் மொத்தமாய் வந்த அவரது கதை புத்தகங்களை புத்தககடைகளில் எடுத்து திருப்பும் பொழுது முன்னுரை எனும் பெயரில் சுவாரசியமான ஒரு கட்டுரை கிடைக்கும் ..அதற்காகவே அந்த முழு புத்தகத்தை வாங்கிய நிகழ்வுகளும் உண்டு…. அதில் சில மலரும் நினைவுகளுக்குத்தீனியாக அமையும் …சில ஆச்சரியக்கேள்விகளுக்கு  விடையாக அமையும்……. அம்முன்னுரைகளை கொத்து கொத்தாக அப்படியே மறுபதிப்பதை காட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சுவாரசியங்கள்…..

 ’’இரத்தம் ஒரே நிறம் ‘’ சுஜாதா எழுதிய முதல் சரித்திரக் கதை  அந்த முன்னுரையை  அப்படியே எடுத்துப் போட வேண்டும்.. அவ்வளவு சுவாரசியங்கள் …. சுருக்காமல் அப்படியே கொடுத்தால் படிக்கும் எனது சக வாசக சொந்தங்களால் நிச்சயம் வாழ்த்தப் படுவேன் எனும்  உத்திரவாதம்  இருந்தாலும், வலைப்பூவின் மரபு கருதி சுருக்கமாக அந்த முன்னுரையின் சில முத்துக்கள்…

குமுதம் என்னை ‘ சரித்திர நாவல் எழுதி பாருங்களேன் ‘ என்று கேட்ட போது சற்றுத் தயங்கினேன்..சரித்திர நாவல் எழுதுவதற்கு என்று எழுதப் படாத விதிகள் இருக்கின்றனவாம்….சரித்திர நாவலில் சரித்திரம் மட்டும் இல்லாமல், சில தீப்பந்தங்களும் ,உறையூர் ஒற்றர்களும் வேண்டும், கரிய கண்களுடைய அழகான ராஜகுமாரிகளை நீண்ட வாக்கியங்களில் வர்ணிக்க வேண்டும்.அடிக்குறிப்புகள் தாராளம் வேண்டும்..சோழனாக இருந்தால் நல்லது. பாண்டியன் பரவாயில்லை. தமிழ்ச்சாதியின் மேம்பாடு, கடல்கடந்த நாகரிகம்…இவைகளைச் சொல்வது உத்தமம். குதிரைகளை தாங்கித்தேர்கள், முத்துக்கள் இறைந்திருக்கும் வீதிகள், யவன வியாபாரிகள், யாழ் , இன்னபிறவும் வேண்டும்.

இப்படியெல்லாம் இந்த நாவலில் எதுவும் இல்லை முதலில் என் தமிழ் நடை சரித்திர நாவலுக்கு ஒவ்வாது என்றுதான் தோன்றியது. அதனால் சமீபத்திய சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது  சிப்பாய் கலகத்தை தேர்ந்தேடுத்து அதைப் பற்றி படிக்க துவங்கினேன். சிப்பாய் கலகம் வடக்கே நடந்திருக்கிறது. தக்காணத்தில் அதன் பாதிப்பு அதிகம் இல்லை. இந்திய சர்க்கார் வழவழப்பான காகிதத்தில் சிப்பாய் கலகத்தில் செத்துப் போனவர்களின் பெயர்களை எல்லாம் பதிப்பித்திருக்கிறார்கள். அதில் தமிழ் பெயர் எதாவது இருக்கிறதா என்று தேடினேன். இல்லை. ஆனால் கர்னல் நீலின் தலைமையில் சென்னையிலிருந்து ராணுவம் , பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்களைக் கொண்டு கலகத்தை அடக்க வடக்கே போயிருக்கிறார்கள் என்கிற செய்தி கிடைத்தது. அவர்களுடன் ஒரு தமிழனை அனுப்பத் தீர்மானித்தேன். ஒரு வெள்ளைக்காரன் மேல் சொந்த வெறுப்பும் வைத்துக் கொண்டு அவனைத் தொடர்ந்து கலகத்தை நோக்கிச் செல்வதாக கதைக் கரு அமைத்துக் கொண்டபோது தமிழன் அங்கு போக எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.

இந்த கதையில் வரும் பெரும்பாலன சம்பவங்கள் உண்மையானவை . சென்னை ராணுவம் கல்கத்தா சென்றது அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது  .  வெள்ளை க்காரப்பெண்கள் மாட்டிக்கொண்டது, நாநாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் , தாத்யா தோப்பேயின் வீரம் எல்லாம் நிஜம்தான். இந்த நிஜ சம்பவங்களுக்கு இடையில் என் முத்துக்குமரனையும்  பூஞ்சோலையையும் , பைராகியையும் உலவ விடுவது எனக்கு எளிதாக இருந்தது. அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள் என்றாலும் அவர்கள் பேச்சும் நடவடிக்கைகளும் அவர்கள் நாட்டு பாடல்களும் . அவர்கள் வடக்கே யாத்திரை செய்யும்பொழுது பார்க்கும் காட்சிகளும் சரித்திர ஆதாரமுள்ளவை . ஒரு முத்துக்குமரன் அங்கே போய் அல்லல் பட வாய்ப்புக்கள் இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். கற்பனை பாத்திரங்களையும் நிசமானவர்களையும் ஊடாட வைப்பதில் எனக்கு தனிப்பட்ட சந்தோஷம் எற்பட்டது …

படிக்கும் நமக்கு அந்த சந்தோஷம்  நிச்சயமாக இருமடங்காக கிடைக்கும்.


ஸ்ரீரங்கத்துக்கதைகள்  என்பதுகளின் தொடக்கத்திலும்  எழுதியிருக்கிறார்  இருபது வருடம் கழித்து 2000ங்களின் தொடக்கத்திலும் எழுதியிருக்கிறார் இருவகைகளையும் சுடச் சுட படித்தவர்களுக்கு வித்தியாசம் தெரியும்  அவரே அவரது முன்னுரையில் எழுதியிருக்கிறார் படிப்போம்…..


இந்த கதைகளை ஒருமித்து நோக்கும்போது கால வேறுபாட்டினால் ஒரு விதமான சமனற்ற நிலை இருப்பதை கவனிக்கலாம்…இதை எந்த விதத்திலும் திருத்த முயற்சி செய்யவில்லை .


 ஒரு எழுத்தாளன் சிறுகதை எழுதும் போது மூன்றுவிதமான சக்திகள் பின்னனியில் செயல்படுகின்றன.ஒன்று ,அவனுடைய கதை சொல்லும் திறமை ,உத்தி,நடை போன்றவை. இரண்டு அவன் ஞாபகங்கள், மூன்று மாறி வரும் அவன் கவலைகள், எழுத்தின் முதிர்ச்சியால் கால ஓட்டத்தினால் இவைகளில் எற்பட்டிருக்கும் நிதானமான மாற்றத்தை வாசகர்கள் கவனிக்கலாம். கதாபாத்திரங்களின் பெயர்களும் குணாதிசியங்களும் கதைக்கு கதைக்கு மாறினாலும் ஆதாரமான பண்புகளான நட்பு,பாசம்,துரோகம், மோகம் போன்றவைகள் பெயர்களுக்கு அப்பாற்பட்டவை. 


’ஸ்ரீரங்கம் ‘ என்பது metaphor தான். இதை படிப்பவர் ஒவ்வோருவருக்கும் அவரவர் ஸ்ரீரங்கம் உண்டு  இதில் உள்ள மனிதர்களின் பிரதிகள் அவர்கள் வாழ்விலும் இருப்பார்கள். அவர்களை நினைத்து பார்க்க வைப்பதே இந்த கதைகளின் நோக்கம்…near equivalents என்பார்கள்.அந்த வடிவில் இக்கதையில் அத்தனை மாந்தர்களையும் நீங்கள் சந்தித்திருப்பீர்கள்…

ஒரு சிறுகதை தொகுப்புக்கு பல்சுவையோடு நகைச்சுவை கூடிய முன்னுரை….. எழுதுபவனுக்கு  காண்பதும்  கவனிப்பதும் முக்கியம் என்பது அவர் வரிகளில்.....

எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம் . எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை யோசித்துப் பார்த்தால் கவனிக்க விரும்புவதைத் தான் கவனிக்கிறோம்- நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப , எப்படி?  சொல்கிறேன்.

      சின்ன வயசில் எங்கள் மாமா வீட்டுக் கல்யாணத்தில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கர் சங்கீத கச்சேரி. அய்யங்கார் ரொம்ப ரசித்து , தோடி பாடிக்கொண்டிருந்தார்.மாமா என்னை ரகசியமாகக் கூப்பிட்டு ‘’ அவர் என்னத்தையோ அப்பப்ப வாயில் போட்டுக்கிறாரே டேய் அது என்னன்னு போய் பார்த்துட்டு வா’’என்றார் . மாமா கவனித்தது தோடியை அல்ல.


      இலக்கிய சிந்தனையில்  கதையின் கதை என்கிற தலைப்பில் தொல்காப்பியத்திலிருந்து துவங்கி மேற்கோள்கள் காட்டி , தீவிரமான ஆராய்ச்சி கட்டுரை போல் எனக்கே திருப்தி தரும் படியாக பேசினேன் பேச்சு முடிந்ததும் ஒரு எழுத்தாள அன்பர் என்னை அணுகி ‘’ உங்க பேச்சைக் கேட்டேன் ஏன் அப்பப்ப மூச்சிரைக்கிறது; உங்களுக்கு எதாவது ஹெல்த் பிராப்ளமா? என்றார் அவர் கவனித்தது பேச்சை அல்ல மூச்சிரப்பை மட்டும்.
         
        எனவே கவனிப்பது உடல் நிலையையும் மன நிலையையும் பொறுத்தது. காண்கின்ற எல்லாவற்றையும் கவனிக்க எனக்கு சில வருஷங்களாயின.. கவனித்தது அத்தனையையும் எழுத வேண்டும் என்பதில்லை .எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள்- முக்கியமாக  மானுடம் வேண்டும்...


பின்னுரை-1 : 
எங்கள் ஸ்ரீராம் சற்று நாட்களுக்கு முன், சமிபத்தில் படித்தது எதாவது எழுதினால் தான் ‘’ வாசிப்பு ’’இணையத்தில் நிற்கும் என்கிற வகையில் பின்னூட்டம் தட்டியிருந்தார்..அடிக்கடி படிப்பதை சமிபகணக்கில் வைத்து, அந்த மாங்கனியும் இந்த கல்லிலேயே... ....


பின்னுரை-2 :  சன்ன எழுத்து எனது...வண்ணம் வாத்தியாருடையது...
  


Wednesday, June 15, 2011

இடைவெளியை கடக்க ஒரு சிறு இசைச் சுற்று ..

ஆர்.வீ.எஸ்  அவர்களின்  இசைஞானி  பதிவும் ,  அப்பாதுரை  அவர்களின் திருவாசக  விருப்பமும்    தூண்டிவிட,  மனம்   நேராக  திருவாசக பாடல்களுக்கு  மறுபடியும் கொண்டுபோய் விட்டது. திருவாசகத்தை    உள் புக வைக்க இனிய வழி செய்த இசைஞானிக்கு புயங்க பெருமானின் அருள் என்றும் உண்டு….
இந்த   ஆல்பம்  வெளி வந்து சற்று காலம் ஆனாலும்  சலிப்பில்லா இசைப் பயணமாகவே  தொடர்ந்து வருகிறது.. தட்டினாலும் , ஊதினாலும் , இழுத்தாலும்  வரும் இசைக்கு  எத்தனை  எத்தனை  நெறிமுறைகள் ... கோட்பாடுகள் ....ஒழுங்குகள் ....ராஜா அதை ஓரு இறை  வழிபாடாகவே  கடை பிடிக்கிறார்.... இதை சிம்பனி  என்றும்  அரட்டோரியா  என்றும்  இசை விற்பன்னர்கள்  வாதித்து கொள்ளட்டும் .. என்னை போன்ற  பாமரனுக்கு காதுக்கும்  மனதுக்கும்  இதமான  ஓசை யாக  இந்த  இசை  அமைந்துள்ளது ... இதில் இரண்டு பாடல்  கேட்போம் ...

முதல்  பாடலாக    பூவார் சென்னி மன்னன்  .....     ஓரு விடுதலை வேட்கையோடு  கேட்போர் அனைவரையும்  யாத்திரையாக கோஷம் முழங்க   அழைத்து செல்லும்  பாடல் '' நிற்பார் நிற்க  நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே  …


தன் மகள் பவதாரிணியோடு  சேர்ந்து  பாடிய பாடல்... தும்பியை தூது விடும்    பாடல்  . பவதாரிணி சினிமா பாட்டுக்களை விட சிரத்தை எடுத்து பாடிய பாடல். வெண்பா பிரியர்களுக்கு நல்ல தமிழ்த்தீனி. திருவாசகத்தில் தும்பித்தூது வெண்பாக்கள் இருபது.  அந்த  வெண்பாக்களில் 10 க்கு மட்டும் மெட்டமைத்திருக்கிறார்.  அந்த வெண்பாக்கள் உள் சென்ற மகிழ்வில் 20க்கும் மெட்டமைத்து பாடியிருக்கலாமே  எனும் ஏக்கம் தோன்றும்…. இரண்டு வெண்பா கிழே

நானார் என் உள்ளமார் ஞானங்களார்  என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை  ஆண்டிலனேல்  மதிமயங்கி 
ஊனாருடை தலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றுதாய் கோதும்பி……..

உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களி வந்த வான் கருணை
வெள்ளப் பிரான் என் பிரான் என்னை வேறே ஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றுதாய் கோதும்பி……..

 


<


வந்தது வந்தோம்..இன்னமும் கொஞ்சம் இசை நதியில் நீந்தலாம் என்று
அப்படியே  இசை ஞானியின் எனது அனைத்துக்கால விருப்ப பாடலான  காற்றில் எந்தன் கீதம்  யூட்டியில் தேடியபொழுது  கிடைத்தது இந்த உற்சாகக் கோப்பு.. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குமுன் ஜானி படத்தில் வரும் ஜானகி அம்மாவின் குரலில் ஸ்ரீதேவி யின் மேடைப் பாட்டு.  நேர்முகமாக அதே ராஜா இசையமைக்க பாடிய ஷ்ரேயா கோஷலின் வியக்கவைக்கும் குரலில் அமைந்த பாட்டு..  பிசகாத உச்சரிப்பு…  முன்றுவகை ல,ள,ழ க்களும் மிகச்  சரியாக வந்தது
    அலை போ ……  அன்புள்ள நெஞ்சை  ……  வாழும் காம்
தமிழர்களே தள்ளாடும் பொழுது, இந்திக்காரரிடம் இவ்வளவு அழகான எழுத்து சுத்தமாக அமைந்த உச்சரிப்பு சுத்தம் நிச்சயம் மதி மயக்கும்..
உச்சரிப்பு சொல்லி கொடுத்தவர்க்கும் ...அதை  சிரத்தையாக கேட்டு பாடியவர்க்கும்   ஓரு பெரிய ''ஓ '' போட வைக்கிறது .



உச்சரிப்பில் ஆழ்ந்து இன்னோரு பாட்டையும் கேட்க வைத்தது.. இது இசைப்புயலின்  ராக அமைப்பில் இசைத்துணையில்லாமல் ஒரு நாலுவரி அதே கோஷலிடமிருந்து




இப்பதிவின் இசைப் பயணத்தை சிங்கார வேலனை அழைத்து  நிறைவுசெய்யலாம் ...இந்த பாட்டை ஆயிரம் முறை கேட்டாலும் இன்னமும் ஒரு முறை தாராளமாக கேட்கலாம்...  கேட்டுட்டு சொல்லுங்க...






Powered By Blogger