Saturday, September 11, 2010

பாரதி....பாடல்களோடு பல நினைவுகள்



ஒளி படைத்த கண்ணினாய்  வா.வா. வா..உறுதி கொண்ட நெஞ்சினாய் வா. வா, வா... 
வா. வா. வா.  என முன்று `வா` க்களில் ஈர்க்கப்பட்ட குழந்தை கவிஞன். நான் பெரிதாக பெரிதாக பாரதியின் பிம்பமும் உயர்ந்து கொண்டே வந்தது
ஏழாம் வகுப்பில் படிக்கும் பொழுது `சுந்தர தெலுங்கினிற் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்`` என்று சிந்துநதியின்மிசை பாட்டை ஒன்பதாம் வகுப்பு அண்ணா ஒருவர்  பள்ளி பாட்டு போட்டியில் பாடி பரிசு பெற்றதை அடுத்து , நாங்களும் பெரிதாக அர்த்தம் தெரியாமல் பாடி வருவோம் ``சேர நன்னாட்டிளம் பெண்களுடனே `` சின்ன வயதில் இந்த வரியின் மீது ஈர்ப்புக்கிற்கு இளம்பெண்களை விட நாங்கள் சேர நன் நாட்டில் இருந்தது தான் காரணம்  . சேர நாட்டில் இருப்பதற்கான சாட்சியாக  அப்போதைக்கு எங்கள் அறிவிற்கு எட்டியது  கோவையில் ஓடிய  சேரன் போக்குவரத்து கழக பேருந்துகள் தான்


காக்கை சிறகினிலே நந்தலாலா...பாட்டில் நந்தலாலா வின் ஈர்ப்புநின்னை தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா வரை பாட வைக்கும்

வறுமையின் நிறம் சிவப்பு  படத்தில் கமல்  அங்கங்கு  பாரதியின் வரிகளை சொல்வது  பிடிக்கும் .அதில்  வெள்ளை நிறத்திலொரு பூனை பாட்டை கமல் அழுத்தி சொல்வது மிக பிடிக்கும். படத்தில் கடைசியில்  நல்லதோர் வீணை  செய்தே பாட்டு உருக்கத்தை வரவைக்கும் . அதில் விசையுறு பந்தினைப்போல்  வரி எப்பொழுது கேட்டாலும் புல்லரிக்க வைக்கும்.

பொள்ளாச்சி  பாலிடெக் காலங்களில் , பாரதி பற்றி படம் எடுத்தால் வேஷ பொருத்தம்  கமலுக்கா, ரஜினிக்கா என விவாதம் சூடு பறக்கும். என் பெஞ்சு நண்பன் கிறிஸ்டி,  ரஜினியை சிலாகிப்பான். நான் கமல் தான் பொருத்தம் என்பேன் . கிறிஸ்டி நன்றாக வரைவான் . நகாசு வேலைகள் செய்து கனப்பொருத்தமாக பாரதிக்குள் ரஜினியை பொருத்தியிருந்தான் .


கோவை ஜிசிடி முதலில் சென்னை பல்கலைகழக கட்டுப்பாட்டில் இப்போழுது அண்ணாபல்கலைக்கு மாறியுள்ளது நடுவில் நான் பயின்ற பொழுது பாரதியார் பல்கலைகழகத்தில் இருந்து, அதில் பட்டம் பெற்றது எனக்குள் இருக்கும் பாரதிசார்பு மகிழ்வு.


அச்சமில்லை  அச்சமில்லை  பாடலில் , இச்சகத்துமாந்தர் அனைவரும், துச்சமாக மதிப்போர்,கச்சணிந்த மாதர், நச்சளிக்கும் நண்பர், உச்சிமீது இடியும் வானம்  இப்படி பாரதியின் பட்டியல் சற்று வித்தியாசமாக இருந்தாலும்,பாடல் மனதிற்கு ஒரு தைரியத்தை உண்டாக்கும்.


கமலின் மகாநதி படம் வெளிவந்ததை தொடர்ந்து,தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி  பாடல் இன்று இளைஞர்களுக்கு தங்களை சுற்றிலும் நடக்கும் தீமைகளை கண்டு வீழ்வேனென்று நினைத்தாயோ என்று வெகுள உத்வேகம் அளித்துக்கொண்டிருக்கிறது.


எனது செல்லம்மாள், பாட்டுப்போட்டிக்காக, மகனுக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது  நிற்பதுவே  நடப்பதுவே பாட்டை பயிற்சி கொடுத்தபொழுது, காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ போன்ற ஏற்ற இறக்க வரிகளோடு அப்பாடல் நன்றாக பதிந்தது.


எண்ணிய முடிதல் வேண்டும்..  ஒரு பிரார்த்தனை பாடலாகவே மனதுள் வைத்துள்ளேன்.


தண்ணிர் விட்டா வளர்த்தோம், சர்வேசா , கண்ணீரால் காத்தோம்  கருகத்திரூளோமா என்று மேற்கோள் காட்டி உரையாற்றிய ஜனாதிபதி வெங்கட்ராமன் முதல்  அடிக்கடி பாரதியின் பாடல் வரிகளை நினவு படுத்தி உரையாற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் வரையிலும் பாரதியின் பாட்டுவரிகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் பொழுதெல்லாம் ஒரு இனிமையான உணர்வு வரும்.


பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம் பாடல் சமிப காலத்தில் பலரால் பாராளுமன்றத்தில் மகளீர் மசோதா உரையில் ஒலிக்க கேட்கிறோம்...


பக்தி, வீரம், விடுதலை,காதல்,இயற்கை  என பலதலைப்புகளில்  பாடல் இயற்றிய பாரதி தனது பார்வையை, முழுமையான ஞானத்திற்கு  கொண்டு சென்றான். தனது முப்பத்தி ஒன்பதாம் வயதில் அவசரமாக இயற்கையிடம் செல்லாமல்,  நீள் ஆயுள் பெற்றிருந்தால்  இப்போதிருக்கும் போலி ஆன்மிகத்தையும் போலி பகுத்தறிவு வாதங்களையும் தன் எழுத்து திறத்தால் ஒழித்து உதறியிருப்பான், 


காக்கை குருவி யெங்கள் ஜாதி..நீள் கடலும் மலையு மெங்கள் கூட்டம் : நோக்குந்திசையெலாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்கக்களி யாட்டம். மேம்போக்காக பார்த்தால் இப்பாடல் ஜாதி, கூட்டம் , மகிழ்வு என இருக்கும் . ஆனால் பாரதி ஞான அறிவு நிரம்பியவன். ஆழமான தத்துவத்தை வைக்கிறான்..இதை தத்துவஞானி வேதாத்திரி அவர்களால் சிறப்பாக பார்க்கப்பட்டது... நீ , நான் என்பதெல்லாம் அணுக்கூட்டம் அன்றி வேறில்லை  அதுபோல கடலும் மலையும் அணுக்கூட்டம் தான்.  நமக்கும் உடல், வலி, உணர்வு இருக்கிறது, பறவை விலங்குகளுக்கும் அவ்வுணர்வுகள் இருக்கிறது.எனவே  எல்லாம் ஒரு ஜாதிதான். இப்படி பார்க்க ஆரம்பித்துவிட்டால் வெறுப்பின்றி மகிழ்வோடு இருக்கலாம்.



நாங்கள் அடிக்கடி வீட்டில் கேட்கும் பாடல், நெஞ்சுக்கு நீதியும், தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணிப்பூண். பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ.  



இன்று பாரதியின் நினவு நாள் ,நினைவு போற்றுவோம்..

வாழ்க தமிழ்..வாழ்க பாரதி....

38 comments:

Aathira mullai said...

அந்த மீசைக்காரனின் நினைவுக்ள் என்றும் எவர் நெஞ்சிலிருந்து அகலாதவை..இனிக்கும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளீர்கள்..

ஸ்ரீராம். said...

காக்கை குருவி யெங்கள் ஜாதி..நீள் கடலும் மலையு மெங்கள் கூட்டம் : நோக்குந்திசையெலாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்கக்களி யாட்டம். மேம்போக்காக பார்த்தால் இப்பாடல் ஜாதி, கூட்டம் , மகிழ்வு என இருக்கும்..."//

பாரதியார் ஒரு ஆத்மஞானி. "எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருக்க வேண்டும் என்பதை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டினார். பார்ப்பவர்களுக்கு 'பித்தன்' செய்கையாகத் தோன்றலாம். வேதம் படித்த அந்தணனிடத்திலும், மாமிசம் தின்னும் புலையனிடத்திலும், பசுவினிடத்திலும், நாயிடத்திலும், பறவைகளிடமும் அறிஞர்கள் சமநோக்கு உடையவர்கள்" என்னும் கீதை வாக்கியங்களுக்கு பாரதியார் நல்ல உதாரணம் என்று அவருடனேயே வாழ்ந்து, அவருடைய ஏற்ற, இறக்கங்களையும், உள்ளும், புறமும் கண்ட செல்லம்மா தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இக்காலத்திலும் "சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்" என்று பாடும்போது எழும் உணர்ச்சியை என்னவென்று சொல்ல..? 'நல்லதோர் வீணை'யும், 'தீர்த்தக் கரைதனி'ல் காத்து நிற்கும் ஏக்கமும்...'ஒளிபடைத்த கண்ணினாய் வா வா' என்று கூப்பிடும் பொது உள்ளெழும் உணர்வு... அம்மாடி...!

பத்மநாபன் said...

நன்றி ஆதிரா.. தமிழ்கூறும் நல்லுலகின் பொக்கிஷம் பாரதியின் கவிதைகள்.

பத்மநாபன் said...

நன்றி ஸ்ரீராம்...பாரதியின் கவிதைகள் பளிச்சென்று உணர்வு களை வெளிக்கொணரும் விதத்தை உங்கள் பின்னூட்டம் சரியாக காட்டியது.

அன்றாடம் அவனது கவிகளை படிப்பதே சரியான மேலாண்மைப்பாடம்.

RVS said...

பாரதியின் பாடல்களுக்கு திரைப்படங்களில் இசை அமைத்து பின்னியிருப்பார் இளையராஜா. இளையராஜாவின் மெட்டுக்களில் பாரதி பாடல்கள் என்று ஒரு தனி பதிவே எழுதலாம் பத்மநாபன். அதுவும் சிவகுமாரை கடற்கரை ஓரத்தில் ஒரு பாறையில் உட்காரவைத்து "மோகம் என்னும்..." பாரதி பாட்டை பாட விட்டு கே.பி எடுத்த சீன் எப்போதும் என் நெஞ்சில் அந்த கடல் அலைகள் போல அறைந்து அறைந்து அடிக்கும். நான் செம்படவன் சாமி.. நீங்க ரொம்ப நல்லா பாடுனீங்க சாமி என்று வாழ்த்து பெரும் "மனதில் உறுதி வேண்டும்..." இதுவும் சூப்பர் ஹிட். நல்ல நினைவூட்டும் பகிர்வு... நன்றி..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.. வாய்ப்பு கிடைக்கும் பொழுது இசைஞானி இசையில், கவிஞானியின் பாடல்களை தொகுத்து வழங்குங்கள். சிந்துபைரவி , மனதில் உறுதி வேண்டும் இரண்டிலும் பாடல்கள் எடுத்தாண்ட விதம் அருமை.

நினவு நல்லது வேண்டும் எனும் பாரதியின் கூற்றிற்கு எற்ப இது வரை என்னில் கடந்த சில பாடல்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன் .

பாட்டும் எழுதி இந்த ராகத்தில் பாடினால் சிறப்பாக இருக்கும் என்ற சொன்ன பாட்டுக்காரனின் நினைவில் ஒருங்கிணைந்தமைக்கு மீண்டும் நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..ரொம்ப நல்லா இருந்தது சார்!

பத்மநாபன் said...

வாழ்த்துக்கு மிகுந்த நன்றி ராமமுர்த்தி ஸார், பாடல்களுக்கு ராகம் கொடுத்த பாரதிக, இலக்கணமயமாக , இது விருத்தம், இது கலித்துறை, இது அகவ்ல், இது வெண்பா என்று சொல்லி சொல்லியே கவி பல பாடியுள்ளான் பாரதி...நிங்கள் விரும்பும் வெண்பா வில் பாரதியின் ஒரு கவி...

நமக்குத்தொழில்கவிதை
நாட்டிற்குழைத்தல்.
இமைப்பொழுதும் சோராதிருத்தல்:
உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை
வாழ்விப்பான் : சிந்தையே,யிம்மூன்றுஞ் செய்.

(கேட்டு படித்ததாகத்தான் இருக்கும். என்னுடைய ஆர்வத்துக்கு இவ்வெண்பா, நமக்கு,இமை, மைந்தன், சிந்தயே என வரிகள் தொடங்கும் அழகு தனி தான் )

அப்பாதுரை said...

பாரதி பாடல்களைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
கவிதைகளைப் போலவே கட்டுரைகளும் கதைகளும் அருமையாக எழுதியிருக்கிறார் பாரதி.
தேசிய அளவில் நேருவின் பிறந்த நாளோ காந்தியின் பிறந்த நாளோ கொண்டாடும் அளவுக்கு தாகூர், பாரதி பிறந்த நாட்களை ஏன் கொண்டாடுவதில்லை - கொண்டாடுவதிருக்கட்டும், நினைவு கூர்வதில்லை - என்று அடிக்கடி முன்பெல்லாம் நினைத்துக் கொள்வேன். இப்போது? பாரதியின் நினைவு நாள் என்பதே பிளாக் படித்து தான் தெரிகிறது என்பது வருத்தமாக இருக்கிறது.

பத்மநாபன் said...

வாழ்த்திற்கு நன்றி அப்பாதுரைஜி...ஆமாங்க கதை கட்டுரையிலும் பாரதி கெட்டி தான்..கற்பனையூர் எனும் பாரதியின் கதை இன்றைய நவினத்தின் முன்னோடி ... அரசியல், சினிமா இவற்றில் பங்களிப்பு கூடியவர்களை மட்டும் கொண்டாடுவது என்பது இந்தியா பெற்று வந்த வரமோ என்னவோ..

ரிஷபன் said...

இப்போதிருக்கும் போலி ஆன்மிகத்தையும் போலி பகுத்தறிவு வாதங்களையும் தன் எழுத்து திறத்தால் ஒழித்து உதறியிருப்பான்,
ஆஹா.. நிச்சயம் நிகழ்ந்திருக்கும்.
மாத இதழ் ஒன்றில் பாரதியை குறிப்பிட்ட ஜாதி என்று ஏசி ஒரு கடிதமும் அதற்கு அந்த இதழின் ஆசிரியர் வக்காலத்து வாங்கி எழுதிய வரிகளும் ‘அட.. நீங்க புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா’ என்று குமுற வைத்தது.

பத்மநாபன் said...

நன்றி ரிஷபன் .. சாதிகள் இல்லையடி பாப்பா : குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் . என்று பாடிய பாரதிக்கே இந்த நிலையா ...

சுஜாதா இது போல் ஒரு சம்பவத்தில் இப்படி குறிப்பிட்டிருந்தார்.. " காற்று வானம் ,தண்ணீர் இதில் கூட சாதி பார்க்கும் வீணர்களை நன்கு பசித்த புலி தின்னட்டும்..``

பாரதி கண்ட கனவில் ஒன்றான `சாதிகளற்ற சமுதாயம் , சத்தமில்லாமல் உருவாகி கொண்டிருந்தாலும், அழுத்தமான சாதீய பதிவு கொண்டோர் சிலரின் சத்தம் ஓய பாரதி இன்னமும் பரவ வேண்டும்.

மோகன்ஜி said...

பத்மநாபன் சார்! நம் யுகக் கவிஞன் பற்றி சிறப்பாக பதிவிட்டிருக்கிறீர்கள். பாரதி செய்த ஒரே தப்பு அவன் இங்கே பிறந்தது தான். உலகக் கவிஞர் வரிசையில்,அவனுக்கு கண்டிப்பாய் ஓரிடம் உண்டு.இரண்டு நாள் பட்டினியில் அவன் எழுதிய பாடல் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா.." பாரதி நமக்கு வாராதுபோல் வந்த மாமணி.. நமக்குத்தான் அவனைக் கொண்டாடும் அருகதை இல்லை..நல்ல பதிவு.. இந்த ராத்திரி என்னை தூங்க விடாமல் அடித்து விட்டீர்கள்.. ஆதலின் என்? என் பாட்டனின் பாடல்களை நினைவுகூர்ந்தபடி கிடப்பேன்.

பத்மநாபன் said...

அத்தனை யுலகமும் வர்ணகளஞ்சியமாகப் பல பல நல்லழகுகள் சமைத்தாய்...எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...

அருமையான பாடலை நினைவு படுத்தியதற்கு நன்றி மோகன்ஜி.

பாட்டன் பாரதி கவிகளாக என்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறான்..

Vijiskitchencreations said...

என்றென்றும் அழியா சொத்து பாரதியாரின் கவிதைகள். எங்கும் எப்போதும் கேட்கும் பாரதின் கவிதைகள்.

www.vijisvegkitchen.blogspot.com

பத்மநாபன் said...

வருகைக்கு நன்றி விஜி... பெண்மையை பாரதி அளவுக்கு போற்றியவர் இல்லை..பாரதியை போற்றுவோம்..

சின்னபாரதி said...

திரு, பத்மநாதன் அவர்களே ! வணக்கம் பல .

மகாபாரதியைப் பற்றி நல்லபதிவைத் தந்திருக்கிறீர்கள் . நன்றி

வாழ்த்துக்கள் ...

பத்மநாபன் said...

பாரதியின் பதிவிற்கு சின்ன பாரதியின் வருகை சிறப்பு..நன்றி வாழ்த்துக்கள்..

சின்னபாரதிக்கு பாரதியின் சின்ன கவியொன்று...

உடல்நன்று புலன்கள் இனியன..
உயிர் சுவையுடையது .
மனம் தேன் அறிவு தேன்,உணர்வு அமுதம்.
உணர்வே அமுதம்.
உணர்வு தெய்வம்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

காக்கைச் சிறகினிலே......, நிற்பதுவே நடப்பதுவே.... இவை எல்லாம் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்கள்... பாரதி புகழ் ஓங்கட்டும்...!! :-))))

பத்மநாபன் said...

ஆனந்த வாசிப்பிற்கு முதல் வருகை புரிந்த ஆனந்தி அவர்களுக்கு நன்றி..

பாரதியின் பாடல்கள்...எல்லா வயதிற்கும் ஏற்றதாக இருக்கும்...எல்லா பாடல்களும் படிக்க படிக்க மிக மிக எளிதாக உள்ளே உட்கார்ந்து நம்மை ஆனந்தபடவைக்கும்.

எல் கே said...

அண்ணா கொஞ்சம் லேட் .. ஜாதியே இல்லைன்னு சொன்னான் அந்த முண்டாசு கவி. இன்னிக்கு அவனையே ஒரு ஜாதி அடையாளமா அக்கிட்டங்க இந்த பதிவுலகில்

பத்மநாபன் said...

நன்றி எல்.கே.... வலையில் ஒரிருவரின் நிலையை வைத்து பதிவுலகத்தை மதிப்பிடும் அவசியம் இல்லை . இவ்விஷயத்தை சற்று தளர்வாகவே விடுங்கள்...

சாதியை வைத்து யாரையும் வெறுக்கும் இவர்களை, பாரதி இன்றிருந்தால்,, வலைச்சொல்லில் வீரரடீ என்று பாடியிருப்பான்.

தமிழின் மேல் ஆர்வம் உள்ள அனைவர்க்கும் பாரதி... அமுதம்

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு! இனிய வாழ்த்துக்கள்!!
பாரதியையே சுவாசித்து வளர்ந்தவள் நான்! அதனால் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது!
இளம் வயதில் அவருடைய ‘ தீர்த்தக்கரையினிலே-கண்னம்மா-செண்பகத் தோட்டத்திலே’ கவிதையை டி.ஆர்.மகாலிங்கம் தேனிசைக் குரலில் பாடியதைக் கேட்கும்போதெல்லாம் மயங்கியிருக்கிறேன் - இப்போதும்கூட!
அவரின்
“ மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்
மாரவெம் பேயினை அஞ்சேன்
இரணமுஞ் சுகமும் பழியும் நற்புகழ்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்
.. .. .. .. .. .. .. .. . .. .. .. .
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
மயங்கிலேன், மனமென்னும் பெயர்கொள்
கண்ணிலாப்பேயை எள்ளுவேன், இனியெக்
காலுமே அமைதியிலிருப்பேன்”
என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானது

பத்மநாபன் said...

அன்பான வருகைக்கும், அற்புதமான கவிகளை எடுத்து காட்டியமைக்கும் மிக்க நன்றி மனோ மேடம்....வாசிப்பதும் சுவாசிப்பதும் பாரதியாரை த் தான் என்பதில் சக வாசகனாக மகிழ்ச்சி....

அப்பாதுரை said...

'கற்பூரச் சொற்கோ' என்று பாரதியை பாரதிதாசன் அழைத்தது எத்தனை பொருத்தம் என்று பாரதி பாட்டைப் படித்த பொழுதெல்லாம் நினைத்து வியந்திருக்கிறேன். கற்பூரத் தீயில் கடவுளையும் காணலாம்; ஊரையும் எரிக்கலாம். பாரதியின் சொல்வீச்சு அப்படிப்பட்டது தான் என்று எண்ணி எண்ணி பரவசப்பட்டிருக்கிறேன்.

(ஆமா... நீங்க யானையைப் பத்தி இங்க்ன ஒண்ணும் மேட்டர் எழுதலியா?)

பத்மநாபன் said...

நித்தம் நவமென சுடர் தரும் உயிர்க்கேட்டேன் என பாடிய பாரதிக்கு கற்பூரச் சொற்கோ' என அற்புத பெயர் சூட்டிய உண்மை யான தாசன் பாரதிதாசன்.......

அப்புறம் அப்பாதுரைஜி... மோகன்ஜியின் யானையே இன்னும் கனவுல துரத்துது...

Matangi Mawley said...

sir, romba romba nalla pathivu...

thamizhey illaatha maanilaththula padichchu valarntha tharunaththula- bhaarathiyaar paadalkal thaan enakku muthal muthalil thamizh mozhi pakkam thirumbach cheithathu... oru vaartha thamizh theriyaatha enakku- "paanjaali sabatham"- recitation competition-ku en amma- antha paadalkala mika kashta pattu- enakku padippiththu- enna solla vechchu- 1st prize vaanginathu thaan- naan muthal muthalil thamizh pesina tharunam!

thamizh padikka thuvangina pirpaadu- niraya bhaarathi kavithaigala padikka vaiththaal en amma! personal-a enakku- thamizh oottiyathu- antha mahaan thaan!

thanks for such a beautiful post!

பத்மநாபன் said...

நன்றி மாதங்கி . பாஞ்சாலி சபதத்தில் பாரதியை படித்தது சிறப்பு..ஒரு பெரிய இதிகாசத்தையே அருமையான கவிதைகளால் நிரப்பி தமிழ் பரப்பியிருப்பான்.. அதிலும் கண்ணனை வேண்டும் கவிகள்...

ஆதியிலாதியப்பா;கண்ணா..
அறிவினைக் கடந்தவிண்ணகப்பொருளே..
சோதிக்கு சோதியப்பா, என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்...

தமிழ் கற்றுக்கொள்ள பாரதியை போல் இனிய இடம் வேறில்லை....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அப்போதைக்கு எங்கள் அறிவிற்கு எட்டியது கோவையில் ஓடிய சேரன் போக்குவரத்து கழக பேருந்துகள் தான்//

அதே அதே...


நீங்க சொல்லி இருக்கற எல்லா பாட்டும் அருமை.. பள்ளி நாள் நினைவுகளை கொண்டு வந்துடீங்க... அதுவும் பள்ளி / கல்லூரி நாட்களில் நெறைய பேச்சு போட்டிகளில் பங்கெடுப்பேன் (ஆரம்பத்துல கிளாஸ் cut அடிக்க தான் போனேன்... அப்புறம் ஆர்வம் வந்துடுச்சு...) பாரதிய மேற்கோள் காட்டாம மேடை பேச்சு இருக்க முடியுமா... எப்பவும் (இப்பவும்) பாரதியார் கவிதை புத்தகம் கையோட இருக்கும்... நல்ல பதிவு

பத்மநாபன் said...

நன்றி அப்.தங்க்ஸ்....
உங்கள் பக்கம்பக்கமான எழுத்திலும், கவிதைகளிலும் பாரதியை படித்தது தெரிகிறது.....

பாரதியின் எழுத்து, பள்ளி கல்லூரிகளில், இன்றும் கூட பேச்சுப்போட்டி, பாட்டுபோட்டி இவைகளுக்கு மாணவர்களுக்கு பொக்கிஷமாக இருக்கிறது....

பத்மநாபன் said...

வருகைக்கு நன்றி தங்கதுரை ... வருகிறேன் விரைவில் உங்கள் வலைப்பூவிற்கு.

அப்பாதுரை said...

கங்கணம் கட்டியிருக்கீங்க.

பத்மநாபன் said...

அப்பாஜி..கங்கணத்தை சீக்கிரம் அவிழ்த்திவிடலாம்...

(``காதலிக்க நேரமில்லை``நாகேஷ் சொல்ற மாதிரி இந்த கதை மட்டும் கிடைக்கமாட்டேங்குது )

சிவகுமாரன் said...

பாரதியைப் படித்தாலும் பாரதியைப் பற்றி படித்தாலும் கண்ணீர் அரும்புவதும் , யார் பாரதியை புகழ்ந்தாலும் ஒரு இறுமாப்பு வருவதும் ஏனென்று தெரியவில்லை.

அப்புறம் RVS அவர்களுக்கு, சிந்து பைரவியில் வரும் மோகம் என்னும் தீயில்.... என்னும் பாடல் பாரதியுடையது அல்ல. வைரமுத்து என்று நினைக்கிறேன்..

பத்மநாபன் said...

மிக்க நன்றி சிவா ..... யுக கவிஞனின் எழுத்தில் ஆழ்ந்தவர்களின் உணர்வை வெளிப்படுத்தி இருந்தீர்கள் ... அந்த ஞான எழுத்தோட்டம் எப்படி ஒரு மனிதருக்கு வந்தது எனும் ஆச்சர்யம் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது...

https://antonyfrancisomd.blogspot.com/ said...

அன்பு நண்பா,
நான் ஒரு சின்னப்பயல்.
தமிழில் இன்னும் ஒன்றாம் வகுப்பு கூட தேறாதவன் என்றே என்னை எப்போதும் எண்ணிக்கொள்கிறேன். அது முற்றிலும் உண்மையும் கூட. தமிழ் என்னும் பெருங்கடலில் ஒரு காததூரம் சென்றவனைக்கூட கவிஞன் என்று ஏற்றுக்கொள்ளலாம். சும்மா பத்து பதினைந்து மைல் கல்லை வெறும் முப்பது சொச்சம் வயதுக்குள் கடந்து விட்டவன் 'அஹ்ரகாரத்தில் முளைத்த முதல் மீசை' பாரதி என்று சொல்லிவிடலாம். அவர் பாடல் வரிகளில் திளைத்திருக்கிறேன். திக்குமுக்காடி இதைவிட சிறப்பாய் ஒரு செய்தியை, ஒரு வியப்பை, ஒரு கோபத்தை ஒருவனால் வெளிப்படுத்தி விட முடியாது என்று மகிழ்ந்திருக்கிறேன். இருப்பினும் இந்த எட்டயப்புரத்துக்கவி தன் சொந்தஊர்க்காரன் கட்டப்பொம்மனைப் பாடாததற்கு 'சாதியப் பின்னணியை' என் நண்பன் கூறி ஆச்சரியப்பட்டேன். தாதாபாய் நௌரோஜி, அன்னிபெசன்ட் என்று பாடிய அந்த தேசியக்கவிக்கு உள்ளுர் வீரன் கட்டப்பொம்மனைப்பாடாமைக்கு சாதியைத்தவிர வேறு காரணம் இருக்க முடியுமா?
குறிப்பு: கட்டப்பொம்மனின் வரலாற்றுப்பின்னணியில் சில முரண்பாடுகள் உண்டு என்பதையும் நான் அறிவேன். இரப்பினும் உங்கள் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
மேலும் நான் தமிழுக்கு எவ்வளவு புதியதோ அதைவிட கணிணிக்கு இன்னும் புதியவன். இப்பெழுதுதான் ஒரு 'பிளாக்கரை: அமைத்திருக்கிறேன். 'தீர்த்தக்கரையினிலே' அல்லது 'antonyfrancisomd' என்று கூகுளில் தேடவும். நன்றி.

பத்மநாபன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

சாதியியம் பற்றி பேசுவது எழுதுவதும் தேவையில்லாத வீண் வாக்குவாதம் .

பாரதி அன்றே பாடிய நான்காம் தலைமுறையை பார்க்க சொன்னதை நினைவு கூறுங்கள்.. நான்காம் தலைமுறையை கடந்து இருப்போம் ..

முடிந்த வரை பாரதியிடமாவது சாதியத்தை தவிர்ப்போம்..

உண்மையில் நான் யாரிடமும் சாதியியம் பார்ப்பதில்லை ஏன் கட்டபொம்மனிடமும், பாரதியிடமும் சாதியியம் பார்த்து விவாதிக்கவேண்டும் ..

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Powered By Blogger