Sunday, January 30, 2011

ஒரு பிடி உப்பு

நம் நண்பர் கூட்டம் எல்லாரும்  கதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது  ஆனந்த வாசிப்பும் ஒரு நல்ல கதையை பற்றியாவது  எழுதலாமே என உத்தேசித்தது...... நல்ல கதையாளரின் கதையை மனம் நினைவுகளில்  தேடியது .

 ரா.கி.ர வின் `` ஒரு பிடி உப்பு `` ஞாபகம் வந்தது. கதையின் தலைப்பு  65 வருட உறுத்தல் .  தாய்மை உணர்வை போல தாய் நாட்டுணர்வை போற்றும் அற்புதமான கதை. இது ஒரு நிகழ்வுக்கதை ...

ரா.கி.ரங்கராஜன் அவர்களை முதலாம் சுஜாதா என்று சொல்லலாம்.  இதை ச்சொல்ல எனக்கு முழு உடன்பாடு இல்லை. சுஜாதா தான் இரண்டாம் ரங்கராஜன் ..என்னிடம் உள்ள அளவுகோல் சுஜாதா தானே. இக்கதை டிவிஸ்ட் கதை எனும் பொருளடக்கத்தில்  வந்து படித்த கதை ..டிவிஸ்ட் கதைகள் பெரும்பாலும் ஒரு பக்கம் இரண்டு பக்கம் இருக்கும்..  நடுவில் முடிச்சு இறுக்கப்படும் முடிவில் கடைசி வரியிலோ பத்தியிலோ எதிர்பாராமுறையில் முடிச்சு அவிழ்க்கப்படும் ..இந்த கதை சுமார் 30 பக்கக் கதை, முடிச்சை நெருங்கவே நேரமாகும் ...முடிச்சை பற்றிய எதிர்பார்ப்பே காணாமல் போகுமளவு நிகழ்வுகளை ஒவ்வொன்றாக முத்துச்சரம் போல கோர்த்திருப்பார் ரா.கி.ர

இனி கதை... சுருக்கமாக ..

அண்ணனுக்கு அடிபணியும் தம்பி தான் நாயகன் ராமு தன்னிலையில்.....
அண்ணனின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பல வேலைகள்  அதில் உறவு நலம் விசாரித்தலும் பேணுதலும் அடக்கம் ... பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார்.
ஒரு முறை 90 வயது தாத்தா- பாட்டி முறை உறவை விசாரித்து வர உத்தரவு. குறிப்பாக பாட்டியின் உடல் நிலை குறித்து.... அந்த ஊருக்கு மிக அருகிலேயே பணி நிமித்தமும் சேர தவிர்க்க முடியாப் பயணம்..

தாத்தா பாட்டி யிடம் நல விசாரிப்புகள் ..தாத்தா ஒரு சுதந்திர போராட்ட தியாகி ...மிக ஆசையாக ஒரு பழைய ஒவல்டின் டப்பாவை எடுத்து வந்து காட்டுகிறார்...அதில் சத்யாக்ரக உப்பு.... பாட்டி ஓய்வுக்கு செல்கிறார்..

தாத்தா,  உப்பு சத்யாக்ரக போரட்டக்கதையை தன்னிலையில் ஆரம்பிக்கிறார் ...
தாத்தாவின் தந்தை பெரிய மிராசு என்பதில்  தொடங்கி... சி.ஆர். எனும் ராஜாஜி யின் சொற்பொழிவு கேட்டு , தனக்கும் போராட்ட உணர்வு மிக அந்த குழுவில் இடம் பிடிக்கிறார் ... தொண்டர் படையில் நேரக் காப்பாளர் பணி... காலையில் எழும் நேரம் , உணவு நேரம்.. பிரார்த்தனை நேரம்.. தொண்டர்களை  சமுக பணிகளுக்கு உசுப்பும்  பணி. 
 
பெரிய பெரிய பதவிகளை உதறிவிட்டு  சுதந்திர வேள்வியில் பலர் குதித்துள்ளனர் .. இதையெல்லாம் பார்த்த அவருக்கும் உத்வேகம் இன்னமும் மேலிடுகிறது..
உப்பு சத்யாகிரக போராட்டத்திற்கு திருச்சியிலிருந்து கிழக்கே வேதாரண்யம் நோக்கி நடை பயணமாக வருகிறது,,

வழியெங்கும் பொதுமக்களின் உற்சாக வரவேற்பு... வெள்ளை அரசாங்கத்தின் கெடுபிடி ...வேதாரண்யம் அடைகிறார்கள் ...

கூட்டம் கூட்டமாக முறை வைத்து  உப்பு அள்ளுகிறார்கள் . இவரது முறை வருகிறது...

உப்பை இருகையிலும் அள்ளுகிறார்... கெடுபிடியான  வெள்ளைக்கார போலிஸ் அவரை தாக்குகிறது...மயக்கம் வர அடிக்கிறார்கள்...விட்டுச்சென்றவுடன் அவரை ரகசியமாக சிகிச்சை அளிக்க அழைத்து செல்கிறார்கள்... மெதுவாக மயக்கம் தெளிந்து நினைவு வர, அவரை கவனித்து கொள்ள வந்த ஒரு பெண்மணி  அவரது இருகைகளிலும் அள்ளிய உப்பு இன்னமும் பிடிதளராமல் பத்திரமாக இருக்கிறதை கவனித்து சுட்டி காட்டுகிறார்... அப்பெண்ணிடமே இதை போட்டுவைக்க ஒரு டப்பா கேட்கிறார்.. ஒவல்டின் டப்பா எற்பாடு செய்ய உப்பை அதில் போட்டுவைக்க அப்பெண்மணி  டப்பாவை பத்திர படுத்திக்கொள்கிறார் ..இவருக்கு சிகிச்சைகள் ரகசியமாக நடப்பதை எப்படியோ அறிந்த வெள்ளையர் அரசு  இவரை கைது செய்கிறது  . ஒரு வருட கடுங்காவல் சிறை வாசம் முடிந்து வேதாரண்யம் திரும்பி உப்பு டப்பாவை பெற்றுக்கொள்வதோடு அப்பெண்மணியையும் மணக்கிறார். 

இப்படி தாத்தா அந்த உப்பின் கதையை முடிக்கிறார் . ராமுவும் ஊர் திரும்புகிறார். இதுவரையிலேயே எழுத்தாளர், வாசகனுக்கு வாசிப்பின் முழு சுகத்தையும் தந்துவிடுகிறார். இதை தாண்டி இதில் ஒரு முடிச்சு  வைக்கிறார் ...
ராமு திரும்பிய சில நாட்களில்  பாட்டி தவறிய செய்தி வருகிறது... செய்தி கேள்வி பட்டவுடன் தாத்தாவின் ஊருக்கு செல்கிறார் ...

 தாத்தா பாட்டி உடல் நிலை மோசமடைந்து  தவறிய விவரங்கள் சொல்லி பாட்டி ராமுவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பதை சொல்கிறார்...ராமு தாத்தாவை படிக்கச் சொல்ல , உனக்கென்று பாட்டி எழுதியது  ஒட்டியும் உள்ளார்  என்று ராமுவையே படிக்க பணித்து ,என்ன எழுதியிருக்க போகிறார்  பாட்டி ..தாத்தாவை பார்த்து கொள்ள ஒரு நூறு தடவை எழுதியிருப்பார் என சொல்லிவிட்டு சடங்கு நிமித்தம் வெளியே செல்கிறார்.

 படிக்க ஆரம்பிக்கிறார் ராமு ......சிரஞ்சிவி ராமு என ஆரம்பித்தகடிதத்தில்  .... ஒரு அவசர சமையல் சந்தர்ப்பத்தில்  ஒவல் டின் உப்பு முழுமையும் சமையலுக்கு  தாத்தாவுக்கு தெரியாமல் உபயோகப்படுத்தப்பட்டு ...தாத்தாவுக்கு உணர்வு பூர்வமான விஷயமாகியதால் அவரிடம் இதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் பக்கத்து கடையில் உப்பு வாங்கி  அதை பழையதாக்கி ஒவல்டின் டப்பாவில் அடைத்து வைத்துள்ளதாகவும்....65 வருடமாக தாத்தா அதை எடுத்து காட்டும் ஒவ்வொரு நிமிடமும் துடிதுடித்து போவதையும் சொல்லி ....யாராவது சத்யாகிரக உப்பு வைத்துள்ளவர்களிடம் தேடி பிடித்து  பெற்று ஒவல் டின்னில் உள்ள உப்பை மாற்றி விடுமாறு ஒரு உணர்வு பூர்வ வேண்டுகோளோடு  கடிதத்தையை முடித்திருப்பார் .தாத்தா வந்து கேட்க ``நிங்க சொன்ன மாதிரியே உங்களை பார்த்துக்கொள்ள எழுதியிருக்கிறார்  என சொல்லி விட்டு , மனம் முழுவதும்  சத்யாகிரக உப்பை கண்டுபிடிப்பதிலேயே இருப்பதாக கதை முடியும்.


உப்பு சத்யாகிரக  ஊர்வலத்தை  வழி நெடுக  வரவேற்பதை ..வெள்ளையனின் கட்டுப்பாட்டை மீறி  ஒவ்வொரு ஊர் மக்களும்   அவர்களுக்கு உணவளித்து  உபசரித்து  அனுப்பிவைப்பதை  ரா.கி.  அவர்கள்  மிக  அழகாக வர்ணித்திருப்பார் ..படிக்கும் பொழுது  நமக்கும் நம்மை அறியாமல்  தேசிய உணர்வு  கண்டிப்பாக வரும் .   

வெள்ளையர்களின் அடக்கு முறைகளையும் எடுத்து  எழுதியிருப்பார்   படிக்கும்பொழுது நமக்கும் ஆத்திரம் பொங்கும் .அப்புறம் பாட்டியின் கடிதமும் முழு விவரமாக இருக்கும். இடையில் இரண்டாம் உலகப்போர் பற்றிய நாவல் பற்றி வரும்.   

இந்த மாதிரி கதையை சுருக்குவது  நியாயம் இல்லாத விஷயம் தான்.

இக்கதையை புதியவர்கள் படித்து , நல்ல தமிழ் கதையாளரை தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஒற்றை குறிக்கோளின் அடிப்படையில் சுருக்கப்பட்டது . இக்கதையை முழுமையாக படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் அனைவரும்  நிச்சயம் மனதிற்குள்ளாவது  ஒரு கட்டுரையை வடிப்பார்கள்

(இந்த பதிவு காந்தி நினைவு நாளில் / விடுதலை போராட்ட தியாகிகள் நினைவு நாளில்  வருவது தற்செயலாக அமைந்த நிகழ்வு.)