Saturday, February 27, 2010

சுஜாதா -- ஒரு தொடரும் சகாப்தம்

இன்று மட்டும் தான் என்று இல்லாமல் என்றும் நினைவில் இருக்கும் சுஜாதா ஒரு தொடரும் சகாப்தமாகவே இருக்கிறார் .

நாம் இந்த வலைப்பூக்களில் எழுதுவதும் ,ஒருவருக்குஒருவர் தொடர்பு கொள்வதும் எதற்கு ? மனதிற்கு ஒரு இதம் ,சுவாரசியம் மற்றும் நம் ரசனைகளுக்கு அழகான வெளிப்பாடு . இதைத்தான் சுஜாதா அவர்கள் எழுத்து துறையிலே செய்தும் செய்யவைத்தும் வந்தார் .

கதையாகட்டும் , கட்டுரையாகட்டும் நம்பி வந்த வாசகனின் ஆர்வத்திற்கு கண்டிப்பாக செய்தி வைத்திருப்பார் . பல துறைகளிலும் உள்ள விஷயங்களை தமிழனுக்கு எட்டவைப்பதில் அவர்க்கு ஒரு தணியாத ஆவல் இருந்தது ..

படைப்புகள்  சிலவற்றை பற்றி  ஒன்றிரண்டு வரிகள்

சிலிக்கனின் சில்லு புரட்சி  ---  நாங்களெல்லாம்   அப்பொழுதுதான்  சில்லுக்கு  புதிது ..தினமணி கதிரில்   வரும் ..  கோவை  குப்பகோனாம் புதூர்  நூலகத்தில்  அந்த புத்தகத்தை எடுத்தவர் எப்பொழுது  வைப்போரோ  என்று சுற்றியும் ஐந்து  பேராவது இருப்போம் .. அப்படியே  அறிவியல் , கதை  ஆர்வம் கூடி   ஆர் .எஸ் புரம் மத்திய நூலகம் வரை   சைக்கிளை  மிதிக்க வைத்தது .

பிரிவோம் -சந்திப்போம் தலைப்பே கவிதையாக , ரகு, மதுமிதா , ரகுஅப்பா , ராட்.....அவர்களோடும் , அவர்களுக்கான உணர்வுகளோடும் சில காலம் வாழ்ந்தோம் என்று தான் சொல்லவேண்டும் . ரகுவோடு ஏங்கி, மதுமிதாவை ரசித்து ,ரகுவின் அப்பாவிடம் அறிவுரைகள்  பெற்று  அந்த  பொதிகை  மலையில்  உற்சாகமாக  இருந்தோம் . பின் அவளை திட்டி ,ரகுவோடு  அமெரிக்கா சென்று , அவளின்   அப்பாவித்தனத்திற்க்கு   தலையில்  அடித்து கொண்டு   ஊர் முழுவதும் சுற்றினோம். அவளுக்கு ராட். முலம் கிடைத்த  அடிக்கு      ''அப்படித்தான் வேணும்'' என்று ஒரு சாரர் நினைத்தோம்  , ரகு கண்டுகொள்ளகூடாது என்று ஒரு சாரரும் ,  அவளை எப்படியாவது ராட் டிடமிரிந்து காப்பாற்றவேண்டும் என்று   ஒருசாராரும் ,  ஒருபடி மேல போய்   ரகுவோடு  அவள் மீண்டும் இணைந்து விடவேண்டும்  ஒரு சாரரும்   நினைத்தோம் ...  கல்லூரி காலங்களில் எங்களுக்கு கிடைத்த  மதிய வேப்பமரத்தடி உணவோடு  பகிர்ந்துகொள்ளும்  சுவாரசியம் .  இன்று படித்தாலும்  அதே புத்துணர்வு .

ஏன்? எதற்கு ? எப்படி?   -  அந்த காலத்திலேயே   கூகிள் ஆண்டவரின் பணி.  எல்லாவற்றிலும் ஆர்வத்தை கிளப்பியது . மயில்  தொகை விரிப்பிலிரிந்து, குவாண்டம்  ,ஐன்ஸ்டீன்   தியரி   என்று  பலதுறைகளிலும்   மேலும்  மேலும் படிக்க வைத்தது. சில மிரண்டு ஒதுங்கிய விஷயங்கள் கூட  நட்பாகியது . இன்று  ''நேனோ''வ்வையும்  ''எம்படட்'' தொழில் நுட்பத்தையையும் திகைப்பு  இல்லாமல்  நெருங்க முடிகிறது . வரப்போகிற   டி.இ. டி  ஆறாம் அறிவு ஜல்லியடிகளையும்  எதிர் கொள்ளமுடியும்..

ஸ்ரீரங்கத்து தேவதைகள்  -அத்தனையும் உற்சாகம் புரளும் கதைகள் , வரிக்கு வரி நகைச்சுவைகள், கடைசியில் தீர்க்கப்படும் மர்மங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் ..அதில் சோக ரசத்தையும் தவறவிடாமல் ஒருகதை (மாஞ்சு ) வரும் அதில் ஒரே ஒரு வரி அவ்வளவு கூட இல்லை அரை வரியில் படிக்கும் அனைவருடைய இதயங்களையும் ஒரு சுத்திகரிப்பு செய்வார் .. அங்குதான் நாம் '' கதைசொல்லி'' க்கான இலக்கணத்தை பார்ப்போம் .. ( கதை சொல்லி --- நன்றி - எஸ் . ரா வின் பதம் - இனிமையான சொல்லாட்சி)

இப்படி நிறைய  இருக்கிறது ......  சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

மற்றவர்களின்  சிறப்பான  படைப்புகளை   அடையாளம்   கண்டு   சொல்வதில் அவருக்கு  நிகர்  அவர்தான் .  அதனாலேய   ஜெயகாந்தனை  படித்தோம் அதன் தொடர்ச்சியாக பாலகுமாரன்   அதே  ஆர்வத்தில்  எஸ் .ரா , முருகன் , என்று பிரபலமானவர்களையும்   பின்னர் நன்றாக  எழுதும்  புதியவர்கள்  படைப்பிலும் ரசனையான விஷயங்களையும்   ரசிக்க முடிகிறது .

 தனிமனித துதி என்று  சொல்லிக்கொள்ளும்  சுயஉணர்வு  சற்று கூடியவர்களுக்கு   சொல்லவிரும்புவது , சுஜாதா  என்றுமே  இயக்கமாகவே இருந்திருக்கிறார். அவரும் அவரை சுற்றிலும்  தமிழின் பன்முக ரசனைகள் என்றுமே இருக்கும். அவரை பற்றி பேசுவதோ , எழுதுவதோ  நிச்சயமாக  நம் ரசனைகளுக்கு , தமிழார்வத்திற்கு  போட்டுக்கொள்ளும் துதி..  அப்படியே தனிமனித துதித்தாலும் என்ன தவறு ? 
தன் வாசகனின் ஆர்வத்திற்கு  , அறிவிற்கு   தீனி  போட  எத்தனையோ  தூக்கத்தை இழந்து படித்து,எழுதி இருப்பார் .

கட்டம் கட்ட நினைத்தவர்களிடமும்       , ஒரு  கட்டத்திற்குள் மட்டும்   சிக்க வைக்க முனைபவர்களிடமும்   அவர் என்றுமே  சிக்கியது  இல்லை .   சுஜாதா  ''அந்த வானத்தை போல '' எல்லோருக்கும் பொதுவானவர் என்பதற்கு    அவரை பற்றி  வரும் பதிவுகளும்   அதன்  பின்னூட்டங்களுமே சாட்சி ( சற்றுமுன்னர்  கிடைத்த  உ -ம் நர்சிம்   , ராதா கிருஷ்ணன் .....இன்னமும் வரும் )

வாசகனையும்  எழுதவைக்கும்  அவர் ஒரு  மானசீக எழுத்தாசான் ... வாசிப்போம்  ஆனந்தமாக ......




Powered By Blogger