Sunday, July 25, 2010

விடுப்பில் கடுப்படித்ததும் , களிப்படைந்ததும்.

சென்ற மாதம் சுற்று விடுப்பில் ஊர் சென்றிருந்த பொழுது . வழக்கமாய் மடிக்கணினி யோடு உருப்படியில்லாமல் பெரும்பொழுது போக்கிக்கொண்டிருந்தேன் . எனது இல்லத்தரசி , எப்பொழுதும்போல் இல்லாமல் ஒரு கேள்வி கேட்டார் .
அந்த கேள்வி ``கடவுள்  படத்தில் இருப்பது போல் நான்கு கைகளோடெல்லாம் நேரில் வரமாட்டாரா ?``
அஹா, நம்மையும் மதித்து இப்படி ஒரு கேள்வியா ? விடக்கூடாது இதை என்று , முதலில் தத்து(பித்து)வங்களாக ஆரம்பித்தேன்.
கடவுள் என்பது அளப்பரிய சக்தி ,முதலில் கடவுள் எனும் சொல்லை பெயர்ச்சொல்லாக குறிப்பிடுவதை விட , .அது எல்லாம் கடந்து உள்ளே அகத்துள்ளே போக வைக்கும் ஒரு வினைச்சொல்லாக குறிப்பிடுவதே சிறப்பானது  என்று கூறி திருவள்ளுவரை துணைக்கு அழைத்தேன் ,
ஐயப்படா அது அகத்து உணர்வானைத் 
தெய்வத்தோடு ஒப்பக்கொளல்.
தொடர்ந்து,
உள்ளும் புறமுமா யுள்ளதெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண்டாமதனைத்தெய்வமென்பார்
என்ற பாரதியையும் அழைத்து கொண்டேன்.
நியூட்டன் , ஐன்ஸ்டீன் அறிவியலோடு  அழகான தமிழில்,  பரம்பொருளோடு பரமணு கொண்டு  பேராற்றலை விவரித்த வேதாத்திரி மஹானின் குறைவின்றி, குற்றமின்றி குணத்தில் உயிர் அறிவாய் இறைவனை காணும் விதத்தை சொல்ல எத்தனித்த போது,
இல்லத்தரசி குறுக்கிட்டு , நான் எதற்கு இந்த கேள்வி கேட்டேன் தெரியுமா ?
இந்த லேப்- டாப் பிலிருந்து  உங்களை நான்கு தட்டு தட்டி பிரித்து வர கடவுள்  நான்கு கைகளிலும் தடிகளை  எடுத்துக்கொண்டு   வரமாட்டாரா என்பதற்காகத்தான் கேட்டேன் .கடவுள் எதற்கெல்லாம் தேவைப்படுகிறார் பாருங்கள்.
                    
               ***************************************  
15 வருடங்களாக என்னோடு பயணத்தில் கூடவே இருந்த எனது  பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டருக்கு ஓய்வு கொடுத்தேன்.
                    பைக் வாங்கி பேஸ்மென்டில் நிறுத்தினால் தான் ஆச்சு என்று  சொன்ன மகன்களுக்காக ,    இனி டபாய்க்கவே முடியாது என்ற நிலையில்  அதே பஜாஜ்-ல் பல்சர் -150 எடுத்தே விட்டேன்.
                      வலதுகை பெருவிரலினால் இதமான பட்டன் அழுத்தத்தில் ஸ்டார்ட்டாகி, இடது கால் பெருவிரலினால் கியர் மாற்றங்கள் பெற்று ,செங்கல் பட்டு ஜி.எஸ்.டி  ரோட்டில் வழுக்கி சென்றபொழுது  பத்து பதினைந்து வயது குறைந்து விட்டதாக உணர்ந்தேன். முக்குகடை க்கு சுக்கு வாங்க போவதும் , நகல் எடுப்பதற்கு வேண்டுமென்றே 10 கீ.மி தள்ளி குரோம்பேட்டை போவதுமாக ஒரே பல்சர் களிப்பு.
         ``பார்த்த முதல் நாளாய்``  பாடிக்கொண்டே வண்டலூர்- கேளம்பாக்கம் ரோட்டில் கோவளம் கடற்கரைக்கு சென்று வர   என் இல்லத்தரசியை அழைத்தேன்..பைக்கில் உட்கார்ந்து அதிகம்  பழக்கமில்லாதலால் அஷ்டமி, நவமி என்று சாக்கிக்கொண்டிருந்தார்..    ஒரு வழியாக சிங்கப்பெருமாள் கோவில் சென்று நரசிம்மரை தரிசித்து வந்தோம். இறங்கியவுடன்  சொன்னது ``ஸ்கூட்டர்  சவுகரியம் பைக்கில் வராது’’ . அதில்  வாகாக ஸ்டெப்னி டயர் இருப்பது, ஒய்யாரமாகவும்  பாதுகாப்பாகவும்  உட்காரவைக்கிறது. இதற்காகவே ,அடுத்த சுற்றில் ஸ்கூட்டரை   சீவி சிங்காரித்து  ஆர்.சி யை புதுப்பிக்க வேண்டும். 
இந்த காலத்தில் ஸ்கூட்டர் ஆர்.சி யை புதுப்பிக்கும் முதல் ஆள் அனேகமாக நானே நானாகத்தான் இருப்பேன்.
           *******************************************
இந்த விடுப்பில்  மீண்டும்  ஒரு முறையாக  சுஜாதாவின்  ''நில்லுங்கள்  ராஜா'' வை  முழு  மறுபடிப்பு  வாய்ப்பு  கிட்டியது .  இம்முறையும்  முதல் பாதி கதையில் , வில்லன்  மேல்  பரிதாபம் , கருணை  வருவதை  தவிர்க்கமுடியவில்லை . இன்னமும்  கணேஷும்  வசந்தும்  கால வெள்ளத்தில்    பழையதாகாமல்  அப்படியே  இன்றைய   தேதிக்கும்   நவீனமாகவே  இருக்கிறார்கள். 
       ****************************************
வலைப்பூக்களை   பொறுத்தவரை,   ரங்கமணியர்கள், தங்கமணியர்களுக்கு  கொடுக்கும் சுதந்திர  அளவிற்கு  தங்கமணியர்கள்  ரங்கமணியர்களுக்கு கொடுப்பதில்லை  என்பது  எனது கருத்து . அலுவலக  மின்னஞ்சல்  பார்க்கிறேன் , விமான டிக்கெட் பார்க்கிறேன் , தொழில் நுட்ப வளர்ச்சிகளை  படிக்கபோகிறேன்  என்று நகாசு வேலைகள் செய்தே  வலையில்  மேய வேண்டியுள்ளது . இது பற்றி  நண்பர்கள்  கருத்தாடலாம் .   

23 comments:

எல் கே said...

ஆஹா இன்னும் ஸ்கட்டர் வைத்து இருக்கிறீர்களா ?? அருமை.. அப்புறம் , நீங்க சொன்ன அந்த விஷயம் உண்மைதான். பாருங்க, நான் என் தங்கமணிக்கு தனிப் பதிவே ஆரம்பித்து தந்திருக்கிறேன் .. ஆனால் எந்த தங்கமநியாவது தனது ரங்கமணிக்கு இப்படி செய்வாரா ??

பத்மநாபன் said...

நன்றி எல்.கே .. சிப்ளிங்க்ஸ் காய்ச்சலில் , ஸ்கூட்டர் இப்பொழுது ரொம்ப விசுவாசம் காட்டுகிறது .. ஆறுமாதம் கழித்து எடுத்தாலும் ஒரு உதையில் ஸ்டார்ட் ஆகிறது . நடுவில் நிற்பதில்லை .
//என் தங்கமணிக்கு தனிப் பதிவே ஆரம்பித்து தந்திருக்கிறேன் // நீங்கதான் கடமை வீரர் ஆச்சே . உண்மை காரணம் நம்ம மனசுக்குள்ள வச்சுப்போம் :))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இந்த லேப்- டாப் பிலிருந்து உங்களை நான்கு தட்டு தட்டி பிரித்து வர கடவுள் நான்கு கைகளிலும் தடிகளை எடுத்துக்கொண்டு வரமாட்டாரா என்பதற்காகத்தான் கேட்டேன்//

ஹ ஹ ஹ....சூப்பர்... இந்த ஒரு வரிக்காகவே அவங்கள எங்க தங்கமணிகள் சங்கத்துக்கு தலைவி ஆகலாம்னு இருக்கோம்...கேட்டு சொல்லுங்க...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//வலைப்பூக்களை பொறுத்தவரை, ரங்கமணியர்கள், தங்கமணியர்களுக்கு கொடுக்கும் சுதந்திர அளவிற்கு தங்கமணியர்கள் ரங்கமணியர்களுக்கு கொடுப்பதில்லை என்பது எனது கருத்து//

அடபாவமே நீங்களுமா? அது என்ன மேட்டர்னா... நீங்க எங்க தொல்ல இல்லாம இருந்தா போதும்னு என்னமோ செய்னு விட்டுடறீங்க... நாங்க அப்படி இல்லையே...நல்ல மனசாச்சே... அதுக்கு இப்படி ஒரு கேட்ட பேரா? ஹும்... நல்லதுக்கு காலம் இல்லைன்னு இதை தான் சொல்றது போல...

பத்மநாபன் said...

அப் தங்ஸ்.. கேட்டு வேற சொல்லனுமா? இந்த மாதிரி ஆபத்தான கூட்டம் இருக்கறதயே காட்டமாட்டமல்ல.

//தொல்ல இல்லாம இருந்தா போதும்னு என்னமோ செய் // உங்க மைண்ட் வாய்ஸ் மாத்திரம் தான் கேட்கும்னு நினைச்சோம் ...எல்லார் வாய்ஸும் கேட்கும் போல இருக்கு .

நன்றி அப் தங்ஸ்.

எல் கே said...

@அ.த

இந்த விசயம் ரங்க்ச்கு தெரியுமா ??

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// LK said... @அ.த - இந்த விசயம் ரங்க்ச்கு தெரியுமா ??//

ரங்க்ஸ் அன்றி ஓர் அணுவும் அசைவதில்லை LK ... (ஹி ஹி ஹி... என்கிட்டயேவா...?????)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட ...உங்களுக்கும் அந்த ‘நில்லுங்கள்
ராஜாவே’பிடிக்குமா?

சாமக்கோடங்கி said...

//இல்லத்தரசி குறுக்கிட்டு , நான் எதற்கு இந்த கேள்வி கேட்டேன் தெரியுமா ?
இந்த லேப்- டாப் பிலிருந்து உங்களை நான்கு தட்டு தட்டி பிரித்து வர கடவுள் நான்கு கைகளிலும் தடிகளை எடுத்துக்கொண்டு வரமாட்டாரா என்பதற்காகத்தான் கேட்டேன் .கடவுள் எதற்கெல்லாம் தேவைப்படுகிறார் பாருங்கள்.//

சூப்பரப்பு....

பத்மநாபன் said...

@ ராமமூர்த்தி ஸார் .. குறிப்பா ``நில்லுங்க ராஜாவை`` கையில எடுத்துட்டோம்னா , யாரு நில்லுங்க ,நில்லுங்க ன்னு சொன்னாலும் கேட்க மாட்டோம்...அவ்வளவு பரபரப்பு.

பதிவுஇடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி, உங்களை போன்றவர்கள் வருவதில் பன்மடங்காகிறது.மிக்க நன்றியும் நமஸ்காரங்களும்.

பத்மநாபன் said...

பிரகாஷ், நெல்லியம்பதி போன பைக்கில் இங்கேயும் வந்து சென்றது மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் .

Jawahar said...

//இந்த காலத்தில் ஸ்கூட்டர் ஆர்.சி யை புதுப்பிக்கும் முதல் ஆள் அனேகமாக நானே நானாகத்தான் இருப்பேன்.//

எக்ஸ்க்யூஸ் மீ.... நானும் அந்தக் கட்சியில இருக்கேன். நானும் இன்னைக்கி வரைக்கும் மோட்டார் சைக்கிள் வாங்கினதில்லை. கடைசியா வாங்கின பஜாஜ் கிளாசிக் ஸ்கூட்டர் (ராஜஸ்தான் கல்யாணத்து ஒட்டகம் மாதிரின்னாலும்) இன்னமும் பத்திரமா இருக்கு.

http://kgjawarlal.wordpress.com

பத்மநாபன் said...

மிக்க நன்றி...

ஆஹா ,ஸ்கூட்டர் சங்கம் பலமாத்தான் இருக்கு. பஜாஜ் எஞ்சினை அடிச்சுக்கமுடியாது..பிற் காலத்தில் உடல்,கண் தானம் மாதிரி மாணவர்கள் பயன்பெற நல்ல ஆட்டொமொபைல் இன்ஸ்டிடுய்ட்டுக்கு கொடுத்து விட உத்தேசம்...

Nathanjagk said...

ஸ்கூட்டர் செளகரியம் என்ற ​சொற்கள் நிறைய ​செய்தி ​சொல்கிறது. இப்போது பைக் பில்லியனில் ​கைப்பிடி கூட வருவதில்லை. வந்தாலும் கழட்டி வைத்துவிடுகிறார்கள்.

விக்ரமாதித்ய பாணியில்தான் பசங்க இப்ப டபுள்ஸ் அடிக்கிறாங்க :))

படித்ததும் படைத்ததும் நல்லாயிருக்குங்க!!

பத்மநாபன் said...

ஜெகன் , விக்ரமாதித்யன் ஸ்டைல்ன்னு எடுத்து வேற கொடுத்திட்டிங்க... பசங்க இதை ட்ரை பண்ணாம விடமாட்டங்க.

வாழ்த்திற்கு நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அண்ணா - உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... நன்றிங்க
http://appavithangamani.blogspot.com/2010/08/blog-post_06.html

பத்மநாபன் said...

நன்றி தங்கைமணி. இந்த பதிவிலேயே பாதி ஆரம்பிச்சாச்சே, முடிச்சிருவோம்.

அப்பாதுரை said...

லம்ரெட்டானு ஒரு ஸ்கூடர் இருந்துச்சே?
என்னவோ தெரியலிங்க.. ஸ்கூடர் வச்சிருந்தப்போ உதைச்சு உதைச்சு ஒரு கால் மட்டும் நீளமாயிட்ட மாதிரி நினைப்பு. உட்காரவும் வசதியில்லாம சிரமப்பட்ட நினைவு... யெஸ்டி கட்சிங்க நான். (சுத்தமா தலைமறைவாயிடுச்சே?)

காலையில எழுந்ததும் கையில் காபியோடு இணையம் மேய்வது பழகி விட்டது; காரணமே தேவையில்லை.

பத்மநாபன் said...

அப்பாதுரை ஸார் வருகைக்கு மிக்க நன்றி. லேம்ரட்டா திருத்தபட்டு பஜாஜ் ஆக வளம் பெற்றது . என்ஃபில்ட் எனும் வல்லினத்திற்கும் , ராஜ்தூத் எனும் மெல்லினத்திற்கும் இடையினமாக யெச்டி கலக்கி கொண்டிருந்தது. நீங்களும் கலக்கிட்டிருந்திப்பிங்க.

காலையில் காபியிருந்தே இணையமா? எதோ ஒரு ட்ரிக் வேலை செய்கிறது ..

அப்பாதுரை said...

லேம்ரட்டா தான் பஜாஜா? தெரியவே தெரியாதுங்க. யெஸ்டி ஒரு நினைவுச் சின்னத்துக்காகவானும் எங்கியாவது கிடைக்குதானு பாத்தேன்..நினைவுகளைக் கிளறிக் கொண்டுவந்துட்டீங்க..

இணையம் காலையில எழுந்ததும் காபி குடிக்குறப்ப மேயுறதோட சரி; அஞ்சு வருசமாச்சு... பேப்பர் படிக்குறத, டிவி பாக்குறத நிறுத்தினதிலிருந்து இணையம் தான் எல்லாம். இன்னும் பத்து வருசத்துல இதுவும் மாறுமோ என்னவோ..

பத்மநாபன் said...

அப்பா துரை சார், 10 வருடங்கள் போகவேண்டாம், ஒரிரு ஆண்டிற்க்குள் மடிக்கணினி, கைகணினியா மாறி நேர் சம்பாஷனை பழக்கம் தொலைந்து போய்,வீட்டிற்க்குள்ளேயே சாட்டிலோ, மெயிலிலொ தான் காபி வாங்கி குடிக்கமுடியும் .

Jawahar said...

அப்பாதுரைஜி/பத்மனாபன்ஜி, வெஸ்பாதான் பஜாஜ் ஆச்சு. லாம்ப்ரெட்டா லாம்பி ஆச்சு. நான் ஒரு ஒரிஜினல் லாம்ப்ரெட்டா கூட வெச்சிருந்தேன். இத்தாலி எஞ்சின், இத்தாலி கார்புரெட்டர். நீங்கள்ளாம் என்னை ரொம்ப சீவி விட்டதாலே என் டூ வீலர்கள் அனுபவம் குறித்து ஒரு இடுகை போடற ஆவல் வந்துடிச்சு!

http://kgjawarlal.wordpress.com

பத்மநாபன் said...

ஜவஹர்ஜி,உங்கள் தகவல்களுக்கு நன்றி.
.லேம்ரா வின் குறைபாடுகள் நீங்கி அடுத்த தலைமுறை பஜாஜ் உருப்பெற்றதாக பொத்தாம்பொதுவான அர்த்தத்தில் அடிச்சுவிட்டேன்.

அப்பாதுரைஜி நேர்அர்த்தம் எடுத்தபிறகு எங்கயோ (ஸ்கூட்டர்) உதைக்குதேன்னு, நைசா அந்த சப்ஜக்ட்யை விட்டுட்டேன். ஆட்டோமொபைல் மேனஜர் வளைச்சு பிடிச்சிட்டிங்க.
உங்கள் வாகனப்பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Powered By Blogger