Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Sunday, September 11, 2011

பாரதி மொழிகள் பத்து


 

1 .எல்லா மதத்தினரும் ஒரே தெய்வத்தை தான் வணங்குறார்கள். லௌகிக விஷயங்களை போலவே மத விஷயத்திலும் ஒப்பு, விடுதலை, உடன்பிறப்பு இவை மூன்றும் பாராட்ட வேண்டும்.

2. அச்சம் இருக்கும் வரை நீ  அறிவாளியாக மாட்டாய்.

3. நீதி , சமாதானம், சமத்துவம் இவற்றாலே ,இவ்வுலகத்தில் தீராத தைர்யமும்  அதனால் தீராத அன்பும் எய்தலாம் ..

4. நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் என்னவென்றால் விடா முயற்சி.மனதிற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை சித்தியாகும்.

5. ஒரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் எற்படுகின்றன.அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைர்யம் எற்படுகிறது.. கூட்டம் கூட்டமாக நேர்மை வழியில் புக வேண்டும்….

6. புதர் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனத்திலுள்ள மற்ற கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக் கொண்டிருப்போமானால் , உலகத்து காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறுபடுகின்றன..

7. மனிதனுக்குப் பகை புறத்திலில்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடக்கிறார்கள். பயம், சந்தேகம் சோம்பல் முதலான குணங்கள் நம்மை ஜெயம் அடையவொட்டாமல் தடுக்கும் உட்பகைகளாம்.

8. விடுதலையே இன்பத்திற்கு வழி. விடுதலை பெற்றோர் வறுமையிலிருந்து மாறி செல்வமைடைவார்கள். மெலிவும் நோயும் நீங்கி வலிமையும் உறுதியும் பெறுவார்கள். சிறுமை நீங்கி பெருமை காண்பார்கள். துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவார்கள்…


9. உடம்பு நாடிகளுக்கு வசப்பட்டது. நாடிகள் மனதின் வசமாகும். ஆகையால் உடம்பிலுள்ள நோய்களை தீர்த்து வலிமையேற்றுவதற்கு மனவுறுதி, நம்பிக்கை, உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ளத்தகும்.

10. துணிவு, உள்ளத்தூய்மை, எதாவதொரு மகத்தான லட்சியத்தில் அறிவை ஆணி கொண்டடித்தது போலப் பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நட்டங்களில் சிந்தனை இல்லாமை- இவைதான் யோகத்தின் ரகசியம்…

இன்று  பாரதி நினைவு நாள்…   நினைவு போற்றுவோம்…
பாரதியார் கவிஞர் என்பதையும் தாண்டி தத்துவதரிசனத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார் . இயற்கையின் ரகசியங்கள் அனைத்தும் அறிந்து அதன் முலம் எல்லையற்ற சக்தியை  தமிழர்கள்  அனைவரும்  பெற வேண்டும் என்பது அவரது  ஆவல். பாரதி பத்திரிக்கை ஆசிரியராக பல கட்டுரைகளையும்  கதைகளையும்  வடித்துள்ளார்… அதில் பல பொன்மொழிகள் உள்ளன. 

பாரதி பதிவு நினைவுகள்  இங்கே…. 

பாரதியின் பாடல்கள்  இங்கே  கேட்கலாம்..தீராத விளையாட்டு பிள்ளையோடும் கேட்கலாம்…  எங்கள் வலைப்பூவிலும் கேட்கலாம். தெவிட்டா தெள்ளமுது.

Saturday, December 11, 2010

பாரதிஜெயந்தி

                                                  


கவியரசன் பாரதி இந்த பூமியில் பிறந்த நாள் இன்று.. அந்த சக்திதாசனை, ஞானத்தை , பக்தியை, விடுதலை வேட்கையை, காதலை , யாமறிந்த தமிழில் வற்றாக்கவிகளாய் கொடுத்த கவிப்பேரரசனை  மீண்டும் நினைவு பதிவாக்குவதில் மகிழ்வு...

பாரதி பிரபஞ்சத்தோடு கலந்த நாள் நினைவு போற்றி ஒரு பதிவு  ஆனந்தமாக வாசிக்கப்பட்டது...
இன்று யுக கவியின் நினைவாக எழுத்தில் சில கவிகளும்,இனிய இசை பாட்டாக மாறிய சில கவிகளும்......

மெய்ப்பொருள்:
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாதிசையிலுமோ ரெல்லையில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியம்செய்தருள் நாயகன்
சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி.....
சூரியன்
கடலின் மீது கதிர்களை வீசி
கடுகி வான்மிசை எறுதி யையா
படரும் வானோளி இன்பத்தை கண்டு
பாட்டு பாடி மகிழ்வன புட்கள்
உடல் பரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொரு நுண்டுளியும் விழியாகச்
சுடரு நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே........


தான்
தேடி ச்சோறுநிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடி துண்பமிக வுழன்று – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் –பல
வேடிக்கை மனிதரைப் போலே-  நான்
வீழ் வே நென்று நினைத்தாயோ..


இனி பாரதியோடு இசைப் பயணம்...


நித்யஸ்ரீ அவர்கள் பாடிய சின்னஞ்சிறு கிளியே பாடல்..... உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரங்கொட்டுதடீ....




பதிவர் நாஞ்சிலார் அவரது சமிப பதிவில், ஜேசுதாஸ் அவர்கள் தெய்வீகக்குரலில் நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி பாடல் போட்டிருந்தார். இனிமையாக இருந்தது . அதே பாடல்  வேறோரு இசை நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்டு இங்கே கிழே..... இதுவும் வித்யாசமாகவும் இனிமையாகவும் இருந்தது ...கேட்டுபாருங்க உற்சாகம் உத்திரவாதம்.. கண்பாராயோ....வந்து சேராயோ....



அடுத்து மஹாநதி ஷோபனாவின் குரலில் தீராத விளையாட்டுப்பிள்ளை..இந்த நிகழ்ச்சியில் முக்கிய எழுத்தாளர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் குறிப்பாக சுஜாதா அவர்களும் ........என்னப்பன் என்னய்யன் என்றால் அதனை எச்சிற்படுத்தி கடித்து கொடுப்பான்..

பாரதியும் தமிழும் யுகம் யுகமாய் இருக்கப்போகிறது..... அதில் பக்கத்து கொஞ்ச காலத்திற்கு நாமும் இருக்கிறோம் ...  இருந்திருக்கிறோம் .

Saturday, September 11, 2010

பாரதி....பாடல்களோடு பல நினைவுகள்



ஒளி படைத்த கண்ணினாய்  வா.வா. வா..உறுதி கொண்ட நெஞ்சினாய் வா. வா, வா... 
வா. வா. வா.  என முன்று `வா` க்களில் ஈர்க்கப்பட்ட குழந்தை கவிஞன். நான் பெரிதாக பெரிதாக பாரதியின் பிம்பமும் உயர்ந்து கொண்டே வந்தது
ஏழாம் வகுப்பில் படிக்கும் பொழுது `சுந்தர தெலுங்கினிற் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்`` என்று சிந்துநதியின்மிசை பாட்டை ஒன்பதாம் வகுப்பு அண்ணா ஒருவர்  பள்ளி பாட்டு போட்டியில் பாடி பரிசு பெற்றதை அடுத்து , நாங்களும் பெரிதாக அர்த்தம் தெரியாமல் பாடி வருவோம் ``சேர நன்னாட்டிளம் பெண்களுடனே `` சின்ன வயதில் இந்த வரியின் மீது ஈர்ப்புக்கிற்கு இளம்பெண்களை விட நாங்கள் சேர நன் நாட்டில் இருந்தது தான் காரணம்  . சேர நாட்டில் இருப்பதற்கான சாட்சியாக  அப்போதைக்கு எங்கள் அறிவிற்கு எட்டியது  கோவையில் ஓடிய  சேரன் போக்குவரத்து கழக பேருந்துகள் தான்


காக்கை சிறகினிலே நந்தலாலா...பாட்டில் நந்தலாலா வின் ஈர்ப்புநின்னை தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா வரை பாட வைக்கும்

வறுமையின் நிறம் சிவப்பு  படத்தில் கமல்  அங்கங்கு  பாரதியின் வரிகளை சொல்வது  பிடிக்கும் .அதில்  வெள்ளை நிறத்திலொரு பூனை பாட்டை கமல் அழுத்தி சொல்வது மிக பிடிக்கும். படத்தில் கடைசியில்  நல்லதோர் வீணை  செய்தே பாட்டு உருக்கத்தை வரவைக்கும் . அதில் விசையுறு பந்தினைப்போல்  வரி எப்பொழுது கேட்டாலும் புல்லரிக்க வைக்கும்.

பொள்ளாச்சி  பாலிடெக் காலங்களில் , பாரதி பற்றி படம் எடுத்தால் வேஷ பொருத்தம்  கமலுக்கா, ரஜினிக்கா என விவாதம் சூடு பறக்கும். என் பெஞ்சு நண்பன் கிறிஸ்டி,  ரஜினியை சிலாகிப்பான். நான் கமல் தான் பொருத்தம் என்பேன் . கிறிஸ்டி நன்றாக வரைவான் . நகாசு வேலைகள் செய்து கனப்பொருத்தமாக பாரதிக்குள் ரஜினியை பொருத்தியிருந்தான் .


கோவை ஜிசிடி முதலில் சென்னை பல்கலைகழக கட்டுப்பாட்டில் இப்போழுது அண்ணாபல்கலைக்கு மாறியுள்ளது நடுவில் நான் பயின்ற பொழுது பாரதியார் பல்கலைகழகத்தில் இருந்து, அதில் பட்டம் பெற்றது எனக்குள் இருக்கும் பாரதிசார்பு மகிழ்வு.


அச்சமில்லை  அச்சமில்லை  பாடலில் , இச்சகத்துமாந்தர் அனைவரும், துச்சமாக மதிப்போர்,கச்சணிந்த மாதர், நச்சளிக்கும் நண்பர், உச்சிமீது இடியும் வானம்  இப்படி பாரதியின் பட்டியல் சற்று வித்தியாசமாக இருந்தாலும்,பாடல் மனதிற்கு ஒரு தைரியத்தை உண்டாக்கும்.


கமலின் மகாநதி படம் வெளிவந்ததை தொடர்ந்து,தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி  பாடல் இன்று இளைஞர்களுக்கு தங்களை சுற்றிலும் நடக்கும் தீமைகளை கண்டு வீழ்வேனென்று நினைத்தாயோ என்று வெகுள உத்வேகம் அளித்துக்கொண்டிருக்கிறது.


எனது செல்லம்மாள், பாட்டுப்போட்டிக்காக, மகனுக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது  நிற்பதுவே  நடப்பதுவே பாட்டை பயிற்சி கொடுத்தபொழுது, காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ போன்ற ஏற்ற இறக்க வரிகளோடு அப்பாடல் நன்றாக பதிந்தது.


எண்ணிய முடிதல் வேண்டும்..  ஒரு பிரார்த்தனை பாடலாகவே மனதுள் வைத்துள்ளேன்.


தண்ணிர் விட்டா வளர்த்தோம், சர்வேசா , கண்ணீரால் காத்தோம்  கருகத்திரூளோமா என்று மேற்கோள் காட்டி உரையாற்றிய ஜனாதிபதி வெங்கட்ராமன் முதல்  அடிக்கடி பாரதியின் பாடல் வரிகளை நினவு படுத்தி உரையாற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் வரையிலும் பாரதியின் பாட்டுவரிகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் பொழுதெல்லாம் ஒரு இனிமையான உணர்வு வரும்.


பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம் பாடல் சமிப காலத்தில் பலரால் பாராளுமன்றத்தில் மகளீர் மசோதா உரையில் ஒலிக்க கேட்கிறோம்...


பக்தி, வீரம், விடுதலை,காதல்,இயற்கை  என பலதலைப்புகளில்  பாடல் இயற்றிய பாரதி தனது பார்வையை, முழுமையான ஞானத்திற்கு  கொண்டு சென்றான். தனது முப்பத்தி ஒன்பதாம் வயதில் அவசரமாக இயற்கையிடம் செல்லாமல்,  நீள் ஆயுள் பெற்றிருந்தால்  இப்போதிருக்கும் போலி ஆன்மிகத்தையும் போலி பகுத்தறிவு வாதங்களையும் தன் எழுத்து திறத்தால் ஒழித்து உதறியிருப்பான், 


காக்கை குருவி யெங்கள் ஜாதி..நீள் கடலும் மலையு மெங்கள் கூட்டம் : நோக்குந்திசையெலாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்கக்களி யாட்டம். மேம்போக்காக பார்த்தால் இப்பாடல் ஜாதி, கூட்டம் , மகிழ்வு என இருக்கும் . ஆனால் பாரதி ஞான அறிவு நிரம்பியவன். ஆழமான தத்துவத்தை வைக்கிறான்..இதை தத்துவஞானி வேதாத்திரி அவர்களால் சிறப்பாக பார்க்கப்பட்டது... நீ , நான் என்பதெல்லாம் அணுக்கூட்டம் அன்றி வேறில்லை  அதுபோல கடலும் மலையும் அணுக்கூட்டம் தான்.  நமக்கும் உடல், வலி, உணர்வு இருக்கிறது, பறவை விலங்குகளுக்கும் அவ்வுணர்வுகள் இருக்கிறது.எனவே  எல்லாம் ஒரு ஜாதிதான். இப்படி பார்க்க ஆரம்பித்துவிட்டால் வெறுப்பின்றி மகிழ்வோடு இருக்கலாம்.



நாங்கள் அடிக்கடி வீட்டில் கேட்கும் பாடல், நெஞ்சுக்கு நீதியும், தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணிப்பூண். பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ.  



இன்று பாரதியின் நினவு நாள் ,நினைவு போற்றுவோம்..

வாழ்க தமிழ்..வாழ்க பாரதி....
Powered By Blogger