சென்ற மாதம் சுற்று விடுப்பில் ஊர் சென்றிருந்த பொழுது . வழக்கமாய் மடிக்கணினி யோடு உருப்படியில்லாமல் பெரும்பொழுது போக்கிக்கொண்டிருந்தேன் . எனது இல்லத்தரசி , எப்பொழுதும்போல் இல்லாமல் ஒரு கேள்வி கேட்டார் .
அந்த கேள்வி ``கடவுள் படத்தில் இருப்பது போல் நான்கு கைகளோடெல்லாம் நேரில் வரமாட்டாரா ?``
அஹா, நம்மையும் மதித்து இப்படி ஒரு கேள்வியா ? விடக்கூடாது இதை என்று , முதலில் தத்து(பித்து)வங்களாக ஆரம்பித்தேன்.
கடவுள் என்பது அளப்பரிய சக்தி ,முதலில் கடவுள் எனும் சொல்லை பெயர்ச்சொல்லாக குறிப்பிடுவதை விட , .அது எல்லாம் கடந்து உள்ளே அகத்துள்ளே போக வைக்கும் ஒரு வினைச்சொல்லாக குறிப்பிடுவதே சிறப்பானது என்று கூறி திருவள்ளுவரை துணைக்கு அழைத்தேன் ,
ஐயப்படா அது அகத்து உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக்கொளல்.
தொடர்ந்து,
உள்ளும் புறமுமா யுள்ளதெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண்டாமதனைத்தெய்வமென்பார்
என்ற பாரதியையும் அழைத்து கொண்டேன்.
நியூட்டன் , ஐன்ஸ்டீன் அறிவியலோடு அழகான தமிழில், பரம்பொருளோடு பரமணு கொண்டு பேராற்றலை விவரித்த வேதாத்திரி மஹானின் குறைவின்றி, குற்றமின்றி குணத்தில் உயிர் அறிவாய் இறைவனை காணும் விதத்தை சொல்ல எத்தனித்த போது,
இல்லத்தரசி குறுக்கிட்டு , நான் எதற்கு இந்த கேள்வி கேட்டேன் தெரியுமா ?
இந்த லேப்- டாப் பிலிருந்து உங்களை நான்கு தட்டு தட்டி பிரித்து வர கடவுள் நான்கு கைகளிலும் தடிகளை எடுத்துக்கொண்டு வரமாட்டாரா என்பதற்காகத்தான் கேட்டேன் .கடவுள் எதற்கெல்லாம் தேவைப்படுகிறார் பாருங்கள்.
***************************************
***************************************
15 வருடங்களாக என்னோடு பயணத்தில் கூடவே இருந்த எனது பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டருக்கு ஓய்வு கொடுத்தேன்.
பைக் வாங்கி பேஸ்மென்டில் நிறுத்தினால் தான் ஆச்சு என்று சொன்ன மகன்களுக்காக , இனி டபாய்க்கவே முடியாது என்ற நிலையில் அதே பஜாஜ்-ல் பல்சர் -150 எடுத்தே விட்டேன்.
வலதுகை பெருவிரலினால் இதமான பட்டன் அழுத்தத்தில் ஸ்டார்ட்டாகி, இடது கால் பெருவிரலினால் கியர் மாற்றங்கள் பெற்று ,செங்கல் பட்டு ஜி.எஸ்.டி ரோட்டில் வழுக்கி சென்றபொழுது பத்து பதினைந்து வயது குறைந்து விட்டதாக உணர்ந்தேன். முக்குகடை க்கு சுக்கு வாங்க போவதும் , நகல் எடுப்பதற்கு வேண்டுமென்றே 10 கீ.மி தள்ளி குரோம்பேட்டை போவதுமாக ஒரே பல்சர் களிப்பு.
``பார்த்த முதல் நாளாய்`` பாடிக்கொண்டே வண்டலூர்- கேளம்பாக்கம் ரோட்டில் கோவளம் கடற்கரைக்கு சென்று வர என் இல்லத்தரசியை அழைத்தேன்..பைக்கில் உட்கார்ந்து அதிகம் பழக்கமில்லாதலால் அஷ்டமி, நவமி என்று சாக்கிக்கொண்டிருந்தார்.. ஒரு வழியாக சிங்கப்பெருமாள் கோவில் சென்று நரசிம்மரை தரிசித்து வந்தோம். இறங்கியவுடன் சொன்னது ``ஸ்கூட்டர் சவுகரியம் பைக்கில் வராது’’ . அதில் வாகாக ஸ்டெப்னி டயர் இருப்பது, ஒய்யாரமாகவும் பாதுகாப்பாகவும் உட்காரவைக்கிறது. இதற்காகவே ,அடுத்த சுற்றில் ஸ்கூட்டரை சீவி சிங்காரித்து ஆர்.சி யை புதுப்பிக்க வேண்டும்.
இந்த காலத்தில் ஸ்கூட்டர் ஆர்.சி யை புதுப்பிக்கும் முதல் ஆள் அனேகமாக நானே நானாகத்தான் இருப்பேன்.
*******************************************
இந்த விடுப்பில் மீண்டும் ஒரு முறையாக சுஜாதாவின் ''நில்லுங்கள் ராஜா'' வை முழு மறுபடிப்பு வாய்ப்பு கிட்டியது . இம்முறையும் முதல் பாதி கதையில் , வில்லன் மேல் பரிதாபம் , கருணை வருவதை தவிர்க்கமுடியவில்லை . இன்னமும் கணேஷும் வசந்தும் கால வெள்ளத்தில் பழையதாகாமல் அப்படியே இன்றைய தேதிக்கும் நவீனமாகவே இருக்கிறார்கள்.
****************************************
****************************************
வலைப்பூக்களை பொறுத்தவரை, ரங்கமணியர்கள், தங்கமணியர்களுக்கு கொடுக்கும் சுதந்திர அளவிற்கு தங்கமணியர்கள் ரங்கமணியர்களுக்கு கொடுப்பதில்லை என்பது எனது கருத்து . அலுவலக மின்னஞ்சல் பார்க்கிறேன் , விமான டிக்கெட் பார்க்கிறேன் , தொழில் நுட்ப வளர்ச்சிகளை படிக்கபோகிறேன் என்று நகாசு வேலைகள் செய்தே வலையில் மேய வேண்டியுள்ளது . இது பற்றி நண்பர்கள் கருத்தாடலாம் .