கோவையில் குடியிருந்த பொழுது பக்கத்து வீட்டு ஆறு வயது குட்டிப்பெண் யாழினி, எங்களிடம் ஒரு நாள் தன் மழலையில் ஏற்ற இறக்கமாக `` எங்க வீட்டுல எங்க அப்பா, அம்மா என்ன்ன சொல்றாங்களோ அதை அப்ப்ப்படியே கேட்பாங்க... ``அங்கிள் எப்படின்னு தெரியல ``` இதை கேட்டவுடன் வெடிச்சிரிப்பு சிரித்தோம்.... இப்போழுது அவள் கணிப்பொறியாளினியாக சியாட்டில் செல்லவோ, கைதேர்ந்த மருத்துவராக மியாட்டிலில் பணி புரியவோ படித்துக்கொண்டிருப்பாள்...
அன்று அவள் சொன்னதை,சென்னையில் இந்த விடுப்பில் அப்படியே (இரண்டு முன்று `ப்` சேர்த்தே )கடைபிடித்தேன் .... காலையில் சுப்ரபாதம் ஆரம்பித்து இரவு சூப்பர் சிங்கர் வரை தங்கமணி சொல்வது தான் எல்லாம்.....
விஜய்யில் பக்தி பாடல்களோடு ஆரம்பிக்கும் கூடவே பக்தி சொற்பொழிவுகள் , அப்புறம் கலைஞரில் ரேவதி சங்கரன் அவர்களின் வாழ்க வளமுடன் கேட்டு, மராத்தி சேனலில் மஹாலட்சுமி ஆரத்தி, சாய்நாதரின் ஆரத்தி , எதாவது கன்னட சேனலில் மந்திராலாய மஹானின் அபிஷேகம் முடித்தால் அப்புறம் நேராக இரவு தான் விஜய்யில் சூப்பர் சிங்கருக்கு தொலைக்காட்சி அனுமதி.. பாட்டோடு பாட்டாக தொகுப்பாளினி திவ்யாவை ஜொள்ளிக்கொள்ள இலவச அனுமதி..அந்த தருணங்களில் என்னிடமுள்ள அசட்டுத்தனத்தை ரசிப்பதற்கு தங்கமணிக்கு அவ்வளவு அலாதி...
மிகவும் ரசித்தவை இரண்டு .
செல்வி வர்ஷா புவனேஷ்வரியின் ``வள்ளி கல்யானம்`` பக்தி சொற்பொழிவு... 7 வயதுக்குள் தான் இருக்கும்.. மழலை மாறத தமிழில் ராகத்தோடு பாடி, வள்ளியையும் வேடமிட்ட முருகனையும் கண் முன் நிறுத்தினார் ... இடையிடையே மழலையில் வெளிப்பட்ட நகைச்சுவையும் இனித்தது... அதில் ஒன்றிரண்டு
என்ன தான் பிள்ளைகள் இருந்தாலும் , மாப்பிள்ளைன்னு கூப்பிட ஒருத்தர் வேணுமில்லையா ..மாப்பிளே ,மாப்பிளே சும்மா கூப்பிட்டா மாப்பிள்ளை ஆயிடுவாரா ,பொண்ணை க்கொடுத்தா தானே மாப்பிள்ளை ....
விட்டுக்கு வந்தவர்களை வாங்க வாங்கன்னு கூப்பிடனும் அதான் வாசப்படி தாண்டி வீட்டுக்குள்ள வந்துட்டாரே உள்ள வரத்தானே போறாருன்னு கூப்பிடாமா இருக்கக்கூடாது.
சில பாடல்களில்,அப்படியே அருணா சாய்ராம் அவர்களின் பாட்டும் சாயலும் அழகாக வருகிறது...கிடைத்த ஒரு தொகுப்பு கிழே...
அதே விஜய்யில் பக்தி பரவசமாக பிரம்மம் ஒக்கட்டே எனும் தெலுங்கு பக்தி பாடல், அர்த்தம் ஆரம்பத்தில் அவ்வளவாக புரியாவிட்டாலும் ரொம்பவே கவர்ந்தது.. தாள லயத்தில் மனதில் தெய்வீக ஆட்டம் போட வைத்தது.உடனே வலையிலிருந்து இறக்கி, மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது.. அப்பாடலின் அர்த்தம் தெரிந்தால் நன்றாக இருக்குமே என கூகிளாண்டவரிடம் முறையிட, அவரிடம் ஆங்கிலம் தான் கிட்டியது.யாராவது தமிழ்ப்படுத்தி தந்தால் நன்றாக இருக்குமே என தங்கமணி ஆசைப்பட ,`சுருக்`கமாக மொழிபெயர்த்தேன்.
பிரம்மம் ஒன்றுதான் பரபிரம்மம் ஒன்றுதான்....
உயர்வு தாழ்வு எனும் ஏற்றத்தாழ்வே இல்லை ..இறைவன் குடியிருக்கும் உயிர்களனைத்திற்கும் உயிர் உணர்வு ஒன்றே.........
அரசனுக்கும் ஆண்டிக்கும் தூக்கம் ஒன்றே தான்......
அறிவில் மேலோனோ கீழோனோ மிதிக்கும் பூமி ஒன்றே தான்.....
பூச்சியோ மிருகமோ, புலனின்பம் என்பது ஒன்று தான்......
ஏழையோ, செல்வந்தனோ இரவும் பகலும் ஒரே மாதிரி தான்....
ஒருவனுக்கு ஒருவன் நாவில் சுவை மாறினாலும் உணவு ஒன்றே தான்....
நாற்றமோ, நறுமணமோ அதை எடுத்து வரும் காற்று ஒன்று தான்....
யானையோ நாயோ அனைத்திற்கும் சூர்ய ஒளி ஒன்றுதான்...
நன்மை வழங்குவதும் தீமை ஒழிப்பதும் வேங்கடவனே........
பிரம்மம் ஒன்றுதான் பரபிரம்மம் ஒன்றுதான்......
---------------------------------------------------------------------------------------------------------
அடுத்து இனிய நண்பர் ஆர்.வி.எஸ் அவர்களோடு அலைபேசியில் உரையாட வாய்ப்பு கிடைத்ததற்கு வேங்கடவனுக்கும் வலைபகவானுக்கும் நன்றி...மனிதர் எழுத்தோட்டத்தை போலவே பேச்சோட்டமும்..கிடைத்த கொஞ்ச நேரத்தில் நீண்ட நாள் பழக்கம்போல் வெகு எதார்த்தமாக பேசினார் ..தஞ்சைத்தமிழ் தாண்டவமாடியது... நேரில் பார்க்க வண்டி எடுக்கும்பொழுது அடைமழை தட்டி எடுத்துவிட்டது.... சென்னையில் பெய்யும் மழையை பார்த்தால் மக்கள் (அ)நியாயத்திற்கு திருந்தி விட்டது போல் தெரிகிறது.... ஆமாம் தப்புக்களை எல்லாம் டெல்லிக்கு கொண்டுபோய்ட்டதா பக்கத்து மாமா அரசியல் பேசுகிறார்....
---------------------------------------------------------------------------------------------------------
என்னமோ தெரியலிங்க எங்க தங்கமணிக்கு ப்ளாக்குன்னா வெகு அலர்ஜியா இருக்கு...நானும் சொல்லி ப்பார்த்துட்டேன் , என்னோட ப்ளாக்குகளை விட்டுரும்மா...நல்ல கருத்தா எழுதறவங்க இருக்காங்க , கதை எழுதறவங்க இருக்காங்க...நகைச்சுவை எழுதறவங்க இருக்காங்க ....இதோ பார்ன்னு மெளஸ் எடுக்கறதுக்குள்ள `அடுப்புல பால்` ன்னு ஒரே ஒட்டம் ஒடி எஸ் ஆகிடறாங்க....
சக ப்ளாக்கர்களே ..உங்க துணைவ / துணைவியரும் இப்படித்தானோ.........