Monday 16 August 2010

கடவுளும் நானும் ( தொடர்ச்சி)

கடவுள் பற்றி எங்கு பேச்சு வந்தாலும், அறிவியல் ஆதரவிற்கு 
அழைக்கப்படும் அல்லது மறுப்பதற்கு அழைக்கப்படும்.

அறிவியல் கொண்டு ,ஒரு எல்லை வரை தான் போக முடிகிறது.
எவ்வளவோ  அறிவியலில்  கண்டுபிடித்தாலும் , ஒரு அணுவிற்குள் அந்த அடிப்படையான ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்பதை  கண்டுபிடிப்பதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 


நாம் வசிக்கும் பூமி ,  தனக்கு தானே  தினம் ஒருமுறை சுற்றி , சூரியனையும் ஒரு நீள் வட்டப்பாதையில், 231/2 பாகை  அச்சில் சாய்ந்து  , நேனோ வுக்கு நேனோ நொடி சுத்தமாக துல்லியம் பிசகாமல் சுற்றி  வருவதற்கு, ஆற்றல் எங்கிருந்தது கிடைக்கிறது  என்பதிலும் வியப்பு தான்  மிஞ்சுகிறது.

இயற்கையில் உள்ள ஒழுங்கமைப்பான  இந்த ஆற்றலை
உணரும்பொழுது ,   நம்முடைய ``உண்டு/ இல்லை ``விளையாட்டெல்லாம்  ஒரு வேடிக்கை  ஆகிவிடுகிறது.
ஒரு பெரிய சக்தி நம்மை வழி நடத்துகிறது எனும் நம்பிக்கை, இடையிடையே வரும் தளர்வுகளின் பொழுது கூடுதலாகிறது. தளர்வுகளிலிருந்து மீண்டவுடன் அந்த நம்பிக்கை இன்னமும் கூடுகிறது.
அந்த நம்பிக்கை ,நிறைய சம்பவங்களில் மனநிறைவை தருகிறது.
இச்சம்பவங்களின் முடிவைக்கொண்டு, நான் அறிவியலில் 
விடைதேடி,தோற்கும் பொழுது, எனது இல்லத்தரசி பக்தியில் 
விடை நிதர்சனமாக்கப்படுவதை எடுத்து வைப்பார்.
கடவுள் பெயர் கொண்டு சுய நலத்தில், முறையற்ற செயல் செய்பவர்களும், கடவுளை மறுத்த சிலர் ,அதே செயல்களை தமக்குத்தான் அந்த உரிமம் என்று நினைத்து செய்பவர்களும் எங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இப்படித்தான் கடவுள் இருக்கவேண்டும் என்ற முரட்டு பிடிவாதம் வைத்துக்கொள்ளவில்லை. உள்ளபடி கிடைத்ததில் ஒரு பெருமிதம்.
அந்த ஆற்றல் எப்பொழுதும்  நம் இணைப்பிலேயே  இருக்கிறது . 
அந்த இணைப்பை இன்னமும் பலப்படுத்திக்கொள்ளவேண்டுமே 
என்று  நித்தமும் ஒரு முயற்சியில் இருக்கிறோம் .
அந்த முயற்சி எங்கள் வீட்டில் சுப்ரபாதம் கேட்டு , அபிராமி அந்தாதி சொல்லி, விளக்கு ஏற்றி வழிபாடாக நடக்கிறது.
பக்கத்தில்  அப்துல் சையது வீட்டில்   ''நடப்பவை எல்லாம் வணக்கத்திற்குரிய அல்லாஹ்வின்  விருப்பமாக `` தொழுகையாக நடக்கிறது .
அதற்கு பக்கத்தில்  ஐசக்  வீட்டில்  ``கிறிஸ்துவின் பலம் பெற்ற எங்களால் எல்லா நன்மைகளும் செய்யமுடியும் ``என ஜபமாக நடக்கிறது. 




இத்தொடர்பதிவு,நல்ல நினவுகளை நினவு படுத்தியது, தெய்விக உணர்வோடு மனதை இதமாக்கியது.  அழைத்த அப்பாவிதங்கமணி அவர்களுக்கு மிண்டும் நன்றி.
 இந்த தொடர்பதிவு இட நான் அன்புடன் அழைப்பது. ஜெகன் அவர்களையும், 
அபுதாபி அநன்யா மஹாதேவன்  அவர்களையும்.
நேரம் கிடைக்கும் பொழுது அவர்கள் இத்தொடர் பதிவு இடலாம்.


நன்றி......

21 comments:

அப்பாவி தங்கமணி said...

எதார்த்தமான வரிகள்ல அசத்தலா எழுதி இருக்கீங்க...

அறிவியல் / ஆன்மிகம், உண்டு / இல்லை... முடிவில்லா முடிச்சுகள்...

ரெம்ப நன்றிங்க என்னோட அழைப்பை ஏற்று எழுதினதுக்கு...

பத்மநாபன் said...

பழைய நினவுகள் நிறைய அனுபவங்கள் ,சம்பவங்கள் என வெள்ளமென விழுந்த வரிகளை சுருக்கமுடியாமல் சுருக்கினேன்.
மீண்டும் நன்றி அப்.தங்ஸ்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

சரளமான நடை... வாழ்த்துக்கள்..

பத்மநாபன் said...

நன்றி பிரகாஷ், நீண்ட நாள் தேக்கியவை, வாய்ப்பு கிடைத்தவுடன் எழுதிவிட்டேன். நேரம் கூடி வந்தால் நிங்களும் இப்பொருளில் பதிவிடலாம்.

வானவில் மனிதன் said...

நண்பர் RVSஸின் பதிவில் உங்களைப் பிடித்தேன்.எளிமையான நடையில் அழகானப் பதிவு. வலைவெளியில் மீண்டும் சந்திப்போம் .வாழ்த்துக்கள்.
மோகன்ஜி,ஹைதராபாத்

பத்மநாபன் said...

வருகைக்கு மிக்க நன்றி மோகன்ஜி.இறையுணர்வு எளிமையும் இனிமையும் நிரம்பியது.நட்புக்கு நன்றி.
நட்பால்பின்னியது இந்த வலையுலகம். விரைவில் வானவில்லில் சந்திக்கிறேன்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//நன்றி பிரகாஷ், நீண்ட நாள் தேக்கியவை, வாய்ப்பு கிடைத்தவுடன் எழுதிவிட்டேன். நேரம் கூடி வந்தால் நிங்களும் இப்பொருளில் பதிவிடலாம்.//

என்னை முதன் முதல் தொடர்பதிவிட அழைத்த முதல் நபர் பத்மநாபன் தான்..

உங்களை மறக்க மாட்டேன்.. கடவுளைப் பற்றிய எனது பார்வைகள் கொஞ்சம் குழப்பமானவை.. கண்டிப்பாக எழுத முயற்சிக்கிறேன்..

அப்பாதுரை said...

கடவுள் விவகாரமான விசயம் தான். உண்டா இல்லையா என்பதற்கு பதில் தேவையா இல்லையா என்று கேட்டுப் பார்த்தால் அவரவருக்கேற்ற பதில் கிடைக்கலாம். உண்டா இல்லையா என்பதில் இருக்கும் வாதம் மற்றதில் இல்லை. எத்தனையோ ஆயிரக்கணக்கான வருடங்களாக புழங்கி நம்முடைய டிஎன்ஏவுக்குள் புதைந்திருக்கும் கடவுள், பக்தி எல்லாம் லேசில் மாறாது. கடவுளை நம்புவதும் நம்பாததும் இரண்டுமே அறிவுடைமை தான். நம்புவோரை நம்பாதோர் இகழ்வதும், vice versa, அறியாமை.

பத்மநாபன் said...

//நம்முடைய டிஎன்ஏவுக்குள் புதைந்திருக்கும் கடவுள், பக்தி எல்லாம் லேசில் மாறாது //
அறிவுப்பூர்வமான அணுகுமுறைக்கு நன்றி.

டிஎன்ஏவுக்குள் பல அர்த்தங்களோடு புதைந்திருக்கும் --- இங்க தான் விஷயமே இருக்கு.

இதே போல் தான் சாதி, மதங்களும் , வெளிய பாசாங்காக முற்போக்காக காட்டிக்கொள்வார்கள்.உள்ளே ஒரு குமுறல் இருந்து கொண்டே இருக்கும்.

வானவியலை டச் பண்ணுவிங்கன்னு எதிர்பார்த்தேன்...ஆனா அது பெரிய சப்ஜக்ட்.

பத்மநாபன் said...

//உங்களை மறக்க மாட்டேன்.. கடவுளைப் பற்றிய எனது பார்வைகள் கொஞ்சம் குழப்பமானவை.. கண்டிப்பாக எழுத முயற்சிக்கிறேன்.// நன்றி பிரகாஷ் . நட்பை போல சுவையானது வேறு எதுவும் இல்லை. உங்களை அழைத்ததன் நோக்கம்--உங்களை போன்ற இளைநர்களின் அணுகுமுறை எப்படி என்பதை அறியும் ஆர்வத்தில்.

எனக்கு சரியான வயதில் பாலகுமாரன்,பாரதி, வேதாத்ரி மகரிஷி புத்தகங்கள் வாசிக்கும் அனுபவம் கிடைத்தது..என்னை பொறுத்தவரை கடவுள் ஒரு குழப்பமே இல்லாத தெளிவான கோட்பாடாகவே இருக்கிறது.உங்களுக்கும் வேறு எதாவது வகையில் குழப்பங்கள் தெளிவாகலாம்.

ஜெகநாதன் said...

அறிவியலை கடவுளுக்கு மாற்றாக அணுகமுடியாது என்பதே என் கருத்தும். அறிவியல் நமக்கு உதவுகிறது. கடவுள் ஒரு வாழ்க்கைமுறை.
உண்டு - இல்லை என்பது விவாத நேர்த்தியை மட்டும் கொடுக்கும். எதுவும் உண்டு - இல்லை என்று அணுகலாம். கடவுள் மட்டும் என்ன சொல்லப்போகிறார்.
தொடர் அழைப்பிற்கு நன்றி!
மனதில் பட்டதை நிறைவாக எழுதுகிறேன். நிச்சயம் கடவுள் பதிவு உண்டு!!

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஜெகன்..காத்துக்கொண்டிருக்கிறேன்.

ஆதிரா said...

இமயமும் குமரியும் இணைந்தஇப் பாரதம்
சமயங்கள் இணைந்திட வழிசொன்ன நூலகம்
தமயனும் தம்பியும் வேறு மதமெனில்
சுமந்திட்ட ஓர்த்தாய்க் கிழுக்கு நேரும் என்பதையும் கூடி வாழும் இணக்கமே நம் தேவை என்பதை அழகாக காட்டியுள்ளீர்கள் பதம்நாபன்..

en

பத்மநாபன் said...

கவிதையான பாராட்டுக்கு நன்றி ஆதிரா.

சமமாகவும் இயந்தும் இருப்பது தானே சமயம் .

ரிஷபன் said...

இயற்கையில் உள்ள ஒழுங்கமைப்பான இந்த ஆற்றலை
உணரும்பொழுது , நம்முடைய ``உண்டு/ இல்லை ``விளையாட்டெல்லாம் ஒரு வேடிக்கை ஆகிவிடுகிறது.
ஒரு பெரிய சக்தி நம்மை வழி நடத்துகிறது எனும் நம்பிக்கை, இடையிடையே வரும் தளர்வுகளின் பொழுது கூடுதலாகிறது. தளர்வுகளிலிருந்து மீண்டவுடன் அந்த நம்பிக்கை இன்னமும் கூடுகிறது.

அப்படியே ஏற்கிறேன்..

பத்மநாபன் said...

அன்பு ரிஷபன்.

மிக்க நன்றி .நாம் இயற்கையோடும் , இயற்கை நம்மோடும் உள்ள பந்தத்தை போல் இனிமை வேறெதில் இருக்கிறது.

உங்கள் கதைகளை பத்திரிக்கைகளில் படிக்க தவற விடமாட்டேன் இப்பொழுது வலையிலும் .

ராஜ ராஜ ராஜன் said...

"டி.என்.ஏ.வுக்குள் புதைந்திருக்கும் கடவுள், பக்தி..."

உண்மை தான்...!
கல்லைத் தான் மண்ணைத் தான் காய்ச்சித் தான் குடிக்கத் தான் கற்பித்திருக்கிறார்கள்...!

http://communicatorindia.blogspot.com/

பத்மநாபன் said...

நன்றி ராஜ ராஜ ராஜன்.

கற்பிதங்களையும், மரபணுபதிவுகளையும் தாண்டி இறைதேடும் பணி நம்மையும் அறியாமல் நடந்து கொண்டே இருக்கிறது.

வருகைக்கும் கருத்திற்கும் மீண்டும் நன்றி.

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
RVS said...

"மனிதர் என்பவர் தெய்வமாகலாம்...." என்ற பழைய பாடல் நிறைய சேதி சொல்லுமோ?

கொஞ்ச நாளா நம்ம வீட்டுப் பக்கம் ஆளைக் காணோம். என்னாச்சுன்னா...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

ஆர்.வி.எஸ். முதல் வருகைக்கு நன்றி.
மனிதன் தெய்வாமாகலாம்..ஆன அதை அந்த மனிதனே சொல்லிக்கொள்வதில் தான் பிரச்சனையே. அப்ப அந்த மனிதனுக்கு தெய்வ குணம் வரவில்லை என்று அர்த்தம்.

சிந்தனை தூண்டிய கருத்துக்கு நன்றி.

உங்க நகைச்சுவை பதிவுகளை ரசிக்க தவறுவதில்லை...பின்னூட்டமிடத்தான் சற்று தாமதம் ஆகிறது.